Tuesday, January 12, 2010

விஷ்ணு புராணம் - 33

02_11. மைத்ரேயர், "ஆசார்யரே! ஆறு பேர்களின் செயல்களைச் சொன்னீர்கள். ஸூர்யன் என்ன செய்கிறான் என்றும் கூறுங்கள். மழை, பனி, வெப்பத்திற்கு இந்த எழுவருமே காரணமாயிருக்க உலகத்தார் ஸூர்யன் உதித்தான், உச்சிக்குப் போனான், அஸ்தமித்தான் என்று ஸூர்யனை மட்டுமே கூறுகிறார்களே" என்கிறார். பராசரர் "ஸூர்யனே அந்த எழுவருள் ப்ரதானமானவன். அவன் செயலையே மற்றவர் கூடிச் செய்கின்றனர். விஷ்ணுசக்தியே ஸூர்யனாயிருக்கிறது. அந்த நாராயணனையே காலையில் ரிக் வேதங்களும், பகலில் யஜுரும், ஸாயங்காலத்தில் ஸாம வேதங்களும் துதிக்கின்றன. இந்த விஷ்ணு சக்தியே ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரராவர்.

ப்ரஹ்மா ரிக் வேத மயமாயிருந்து படைக்க, விஷ்ணு யஜுர் வேதமயமாயிருந்து காக்க, ருத்ரன் ஸாம வேதமயமாயிருந்து ஸம்ஹரிக்கிறார். இதைக் காரணம் கொண்டே ஸாமத்வனி அஸுத்தம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணு சக்தி ஸூர்யனிடம் அதிகமாயிருப்பதால் மற்ற அறுவரும் அவனை அண்டி இருக்கின்றனர். கண்ணாடியில் ஒவ்வொருவரும் தத்தம் பிம்பத்தைப் பார்த்துச் செல்வது போல், விஷ்ணு சக்தியை மாதந்தோறும் ஸூர்யர்கள் பெறுகின்றனர். ஸூர்யன் தன் ப்ரபாவத்தினால் தேவ, பித்ரு, மானுஷ லோகங்களை மகிழ்விக்கிறான். சந்த்ரனின் கலைகளை ஒவ்வொன்றாக க்ருஷ்ண பக்ஷ ப்ரதமையிலிருந்து தேவர்கள் பானம் செய்ய, சதுர்தசியில் மீதமிருக்கும் இரண்டு கலைகளில் ஒன்றை அமாவாஸ்யையில் பித்ருக்கள் பானம் செய்து மகிழ்கின்றனர்.

No comments:

Post a Comment