Thursday, January 28, 2010

விஷ்ணு புராணம் - 59

04_03. மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷனுக்கு யுவநாச்வனும், அவனுக்கு ஹரிதனும் பிறந்தனர். இவனைக் கொண்டே அங்கிரஸ்ஸுக்கள் ஹாரீதர்கள் என்று ஆனார்கள். ஒரு ஸமயம் ரஸாதலத்தில் இருந்த நாகர்களை காச்யபருக்கும், அவர் மனைவி முனிக்கும் பிறந்தவர்களான மௌனேயர் என்ற ஆறு கோடி கந்தர்கவர்கள் வென்று அவர்களின் உயர்ந்த ரத்னங்களையும், ஆட்சியையும் கைப்பற்றினார்கள். நாகர்கள் இது பற்றி மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர்கள் ப்ரார்த்தனைக்கு மனமிறங்கிய பெருமான் தானே மாந்தாதாவின் மகனான புருகுத்ஸனிடம் ப்ரவேசித்து அந்த துஷ்ட கந்தர்வர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கேக் கொடுப்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நாகர்களும் பெரிதும் மகிழ்ந்து தங்கள் ஸஹோதரியான நர்மதையை புருகுத்ஸனுக்கு மனைவியாக்கி, அவனை நாகலோகத்திற்கு அழைத்து வந்தனர். மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் புருகுத்ஸனும் மௌனேயர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கு அளித்து விட்டுத் தன் நகரம் திரும்பினான். மிகவும் ஸந்தோஷப்பட்ட நாகர்கள் நன்றிக்கடனாக "நர்மதையின் பெயரைக் கூறுபவனையும், மனதில் நினைப்பவனையும் எந்த விஷமும் ஒன்றும் செய்யாது. விஷத்தையே உண்டாலும் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இரவிலும், பகலிலும் எங்கு சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிக்காது" என்ற வரத்தைக் கொடுத்தனர். புருகுத்ஸனுக்கும் ஸந்ததி விளங்க வரம் அளித்தனர்.

புருகுத்ஸனுக்கும், நர்மதைக்கும் த்ரஸதஸ்யு என்பவனும், அவனுக்கு அனரண்யனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு ஹஸ்தனும், அவனுக்கு வஸுமனஸ்ஸும், அவனுக்கு த்ரிதன்வாவும், அவனுக்கு த்ரைய்யாருணியும், அவனுக்கு ஸத்யவ்ரதனும் பிறந்தனர். இதில் அனரன்யனை ராவணன் திக் விஜயம் செய்த போது கொன்று விட்டான். இந்த ஸத்யவ்ரதனே பிறகு த்ரிசங்கு என்று பெயருடன் சண்டாளனானான். சங்கு என்றால் முளையுடன் கூடிய குச்சி. அடித்தால் அப்படி வலிக்கும். மணக்கோலத்தில் இருந்த ப்ராஹ்மணப் பெண்ணைக் கவர்ந்து, அவள் தந்தையிடம் "சண்டாளனாகப் போவாய்" என்ற சாபம் பெற்றது, வஸிஷ்டர் ஹோமத்திற்கு உதவிக் கொண்டிருந்த பசுவைக் கொன்றது, மாம்ஸத்தை ஒரு முறை ப்ரோக்ஷிக்காமலே உண்டது இப்படி மூன்று துக்கம் தரும் பாபங்களை செய்ததால் ஸத்யவ்ரதனுக்கு அவன் தந்தை த்ரையாருணி த்ரிசங்கு என்று பெயர் வைத்தான்.

இப்படி சண்டாளனான த்ரிசங்குவின் காலத்தில் பனிரெண்டு வருஷங்கள் மழை பொய்த்து விட்டது. பெரும் பஞ்சத்தில் மாம்ஸம் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாம்ஸமும் சண்டாளனிடமிருந்து தான் கிடைத்தது. சண்டாளனிடமிருந்து ஒன்றைப் பெறுவது மிகவும் பெரிய பாபம், குற்றம். அந்த நிலை மஹரிஷி விச்வாமித்ரருக்கும் வந்தது. மஹரிஷி இந்தச் செயலுக்குட்பட்டதைக் கண்ட த்ரிசங்கு மிகவும் மனமுடைந்து மஹரிஷிக்காகத் தானே வனத்தில் வேட்டையாடி தினமும் மாம்ஸங்களை கங்கைக் கரையில் ஒரு ஆலமரத்தில் கட்டி வைத்தான். இந்த உதவியால் தன் குடும்பத்துடன் பெரிதும் மகிழ்வுடன் வாழ்ந்த விச்வாமித்ரர் அவனை ஸ்வர்கத்திற்கு அனுப்பி வைத்தார்.

த்ரிசங்குவிற்கு ஹரிச்சந்த்ரனும், அவனுக்கு ரோஹிதாச்வனும், அவனுக்கு ஹரிதனும், அவனுக்கு சஞ்சுவும், அவனுக்கு விஜயன், வஸுதேவன் என்ற இருவரும் பிறந்தனர். விஜயனுக்கு ருருகனும், அவனுக்கு வ்ருகனும், அவனுக்கு பாஹுவும் பிறந்தனர். ஹைஹயர், தாளஜங்கர் முதலான பகைவர்களிடம் போரில் தோற்ற பாஹு கர்ப்பிணியாக இருந்த தன் ஒரு மனைவியுடன் காட்டிற்குள் சென்று விட்டான். அவனின் மற்றொரு மனைவி சக்களத்தியின் கர்ப்பம் அழிவதற்காக விஷத்தைக் கொடுத்து விடுகிறாள். கர்ப்பம் ஏழு வருடங்களாக இந்த விஷத்தால் பிறக்காமல் வயிற்றிலேயே இருந்தது. வயது முதிர்ந்த பாஹுவும் ஒரு ஸமயம் ஔர்வ மஹரிஷியின் ஆச்ரமத்தினருகில் மரணமடைந்து விடுகிறான்.

கணவன் சிதையிலேயே உடன்கட்டை ஏறத் துணிந்த அவனது கர்ப்பிணி மனைவியை ஔர்வர் தடுத்து நிறுத்தி "அம்மா, பிடிவாதம் செய்யாதே. உன் வயிற்றில் பெரும் பூமண்டலாதிபதியும், பராக்ரமசாலியும், யாகங்களைச் செய்பவனும், சத்ருக்களை அழிப்பவனுமான ஒருவன் இருக்கிறான். நீ இறந்தால் அவனும் இறப்பான். எனவே உன்னுடைய இந்த ஸாஹஸத்தை நிறுத்தி விடு" என்று கூறுகிறார். அவளைத் தன் ஆச்ரமத்திற்கே அழைத்துச் செல்கிறார். அங்கு விஷத்துடனேயே பிறக்கும் ஆண் குழந்தைக்கு ஔர்வ மஹரிஷியே சடங்குகளைச் செய்து "ஸகரன்" என்ற பெயரையும் வைத்து, தகுந்த பருவத்தில் உபனயனம் செய்வித்து, ஸகல வித்தைகளையும் கற்பிக்கிறார். ப்ருகு மஹரிஷியிடமிருந்து பெற்ற ஆக்னேயம் என்ற அஸ்த்ரத்தையும் உபதேஸிக்கிறார்.

தகுந்த ஸமயத்தில் தாயிடமிருந்து தன் ராஜ்யம், தந்தை, பகைவர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட ஸகரன் பெரும் கோபம் கொண்டு, சபதம் பூண்டு ஹைஹயர், தாளஜங்கர் மேலும் அவர்களைச் சேர்ந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்லவர் என அனைவரையும் கொன்று குவிக்கிறான். அந்த வம்சங்களைச் சேர்ந்த மிஞ்சியவர்கள் ஸகரனின் குல குருவான வஸிஷ்டரைத் தஞ்சமடைகின்றனர். அவர்களிடம் கருணை கொண்ட அவரும் ஸகரனிடம் வந்து "குழந்தாய்! இவர்களைக் கொல்லாதே, தர்மங்களிலிருந்து விலகினாலே ஒருவன் இறந்தவனாகி விடுகிறான். எனவே உன் சபதத்தைக் காக்க நானே இவர்களை வைதீக தர்மங்களிலிருந்து விலக்குகிறேன். இனி இவர்கள் வெறும் உயிரை மட்டும் கொண்ட பிணங்களே (ஜீவத் ம்ருதர்கள்). இவர்களை நீ விட்டு விடு" என்று கூறுகிறார்.

ஆசார்யரின் வார்த்தைக்குப் பெரிதும் மதிப்பு கொடுத்து அதன்படியே அவர்களின் உயிரை மட்டும் விட்டு, வேஷங்களையும், ஆசாரங்களையும் பறித்து விடுகிறான். யவனர்களின் தலையை மொட்டையடித்து, பாரதர்களின் தலைமயிரைத் தொங்கவிட்டு, பப்லவர்களுக்குக் காரணமின்றி தாடி, மீசை வைத்து, இன்னும் சிலருக்கும் இப்படி எதையாவது செய்து அவர்களை கர்மாக்களைச் செய்வதற்கும் அதிகாரமின்றி வேதாத்யனனம் முதலியவைகளை அழித்து விட்டான். இவர்களே ம்லேச்சர்கள் என்று ஆனார்கள். ப்ராஹ்மணர்களாலும் கைவிடப்பட்டார்கள். ஸகரனும் ஏழு த்வீபங்களையும் எந்த தடைகளுமின்றி நன்கு ஆண்டு வந்தான்.

No comments:

Post a Comment