Thursday, January 28, 2010

விஷ்ணு புராணம் - 57

04_01. அரசர்களின் வம்சங்களைப் பற்றிக்கூறுமாறு மைத்ரேயர் கேட்க, பராசரர் "ப்ரஹ்மத்தை முதலாகக் கொண்ட இந்த மனு வம்சத்தின் வரலாற்றை கேட்பவர்களின் வம்சம் மேன்மேலும் வளரும். ஸகல பாபங்களும் அகலும். ரிக், யஜுர், ஸாமமயனான விஷ்ணுவிடம் ஹிரண்யகர்ப்பனான ப்ரஹ்மாவும், அவர் வலக்கால் கட்டை விரலிலிருந்து தக்ஷ ப்ரஜாபதியும் தோன்றினார். தக்ஷனின் புதல்வி அதிதியின் பிள்ளை விவஸ்வான். விவஸ்வான் பிள்ளை மனு. மனுவிற்கு இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், ப்ருஷத்ரன் என்று ஒன்பது புத்ரர்கள்.

இவர்கள் பிறப்பதற்கு முன் மனு மித்ராவருணர்களை உத்தேஸித்து புத்ரனை வேண்டி ஒரு யாகம் செய்த போது, அவர் மனைவி ஹோதாவிடம் சென்று புத்ரியை வேண்டுமாறு கூறினாள். இந்தக் குழப்பத்தால் இளா என்ற பெண் யாகப் பயனாகப் பிறந்து, உடனே மித்ர வருணர்களின் ஆசியால் ஸுத்யும்னன் என்ற ஆண் பிள்ளையாகவும் மாறிவிட்டாள். முன்பொரு ஸமயம் பரமேச்வரனும், பார்வதியும் ஒரு காட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொது சில மஹரிஷிகள் அங்கு வந்து விட்டனர். வெட்கமும், கோபமும் கொண்ட பார்வதி குடிசையில் மறைந்து கொண்டாள். நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷிகளும் வெளியே சென்று விட்டனர். பார்வதியை த்ருப்தி செய்வதற்காக அந்தக் காட்டில் இனி யார் நுழைந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறி விடுவர் என்று வரம் கொடுத்தார்.

வேட்டைக்குச் சென்றிருந்த ஸுத்யும்னன் தற்செயலாக இதே காட்டிற்குள் நுழைந்து விட மீண்டும் பெண்ணாகி விடுகிறான். இந்தக் காட்டிற்கு இளாவ்ருதம் என்று பெயர். வெட்கமும், துயரமும் கொண்ட அவன்(ள்) சந்த்ரனின் புத்ரனான புதனுடைய ஆச்ரமத்தினருகில் சுற்றிக் கொண்டிருந்தான். அவளிடம் புதன் புரூரவஸ் என்ற பிள்ளையைப் பெற்றான். இதன் பின் மஹரிஷிகளின் பெருமை வாய்ந்த ஒரு யாகத்தால் ஸுத்யும்னன் மீண்டும் ஆண்மை எய்தினான். இவனுக்கு இப்போது உத்கலன், கயன், விதானன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். ஆண், பெண் குழப்பத்தால் ஸுத்யும்னனுக்கு அரசுரிமை வாய்க்கவில்லை.

வஸிஷ்டரின் உத்தரவால் தந்தையிடமிருந்து கிடைத்த ப்ரதிஷ்டானம் என்ற நகரத்திற்குத் தனக்குப் பின் புரூரவஸ்ஸை மன்னனாக்கினான் இளா என்ற ஸுத்யும்னன். மனுவின் மற்றொரு புத்ரனான ப்ருஷத்ரன் ஆசார்யர் வஸிஷ்டரின் பசுக்களைக் காத்துக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு புலி பசுக்களை உண்பதற்காக அவற்றுள் புகுந்து விட்டது. அப்போது தவறுதலாக ஒரு பசுவை ப்ருஷத்ரன் கொன்று விட, வஸிஷ்டர் அவனை சூத்ரனாக சபித்து விடுகிறார். மற்றொருவனான கரூசன் கரூச தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்ரமர்களான க்ஷத்ரியர்கள் பிறந்தனர். மற்றொருவனான த்ருஷ்டனுக்கு நாபாகனும், அவனுக்குப் பலந்தனனும் பிறந்தான். தாழ்ந்த செய்கைகளால் வைச்யத் தன்மை அடைந்த நாபாகனால் பலந்தனனுக்கும் க்ஷத்ரியத் தன்மை போய்விட்டது.

பலந்தனனுக்கு வத்ஸப்ரீதியும், அவனுக்கு ப்ராம்சுவும், அவனுக்கு ப்ரஜாபதியும், அவனுக்கு கனிமித்ரனும், அவனுக்கு சாக்ஷுஷனும், அவனுக்கு விம்சனும், அவனுக்கு விவிம்சகனும், அவனுக்கு கநிநேத்ரனும், அவனுக்கு அதிவிபூதியும், அவனுக்கு கரந்தமனும், அவனுக்கு அவிக்ஷித்தும், அவிக்ஷித்துக்கு மருத்தனும் பிறந்தனர். மருத்தன் செய்த யாகங்களில் கருவிகள் அனைத்தும் தங்கத்தாலானவை. இந்த்ரன் ஸோமபானத்தாலும், ப்ராஹ்மணர்கள் தக்ஷிணையாலும் இந்த யாகத்தில் த்ருப்தி அடைந்தனர். இவன் சபையில் தேவர்கள் இருந்தனர். இந்த மருத்தன் சக்ரவர்த்தியாக விளங்கினான். இவனுக்கு நரிஷ்யந்தனும், அவனுக்கு தமனும், அவனுக்கு ராஜவர்தனனும், அவனுக்கு ஸுவ்ருத்தியும், அவனுக்குக் கேவலனும், அவனுக்கு ஸுத்ருதியும், அவனுக்கு நரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு கேவலனும், அவனுக்கு பந்துமானும், அவனுக்கு வேகவானும், அவனுக்கு புதனும், அவனுக்கு த்ருணபிந்துவும், அவனுக்கு ஜலபிலா என்ற பெண்ணும் பிறந்தனர்.

த்ருணபிந்துவை அலம்புஸா என்ற அப்ஸரஸ்ஸுக்கும் விசாலன் பிறந்தான். அவன் விசாலன் எனும் நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ஹேமசந்த்ரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு தூம்ராக்ஷனும், அவனுக்கு ஸ்ருஞ்ஜயனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ஸோமதத்தனும் பிறந்தனர். இந்த ஸோமதத்தன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்தான். இவனுக்கு ஜனமேஜயன் பிறந்தான். இந்த அரசர்கள் அனைவரும் விசாலா நகரை ஆண்டவர்கள். இதேபோல் மனுவின் மற்றொரு புத்ரனான சர்யாதிக்கு ஸுகன்யா என்ற பெண்ணும், ஆனர்த்தன் என்ற புத்ரனும் பிறந்தனர். ஸுகன்யா ச்யவன மஹரிஷியை மணந்தாள்.

ஆனர்த்தனுக்கு ரேவதன் பிறந்தான். அவன் குதஸ்தலீ நகரிலிருந்து கொண்டு ஆனர்த்த ராஜ்யத்தை ஆண்டு வந்தான். இவனுக்கு ரைவதனும், அவனுக்கு ககுத்மி முதலான நூறு புத்ரர்கள் பிறந்தனர். ககுத்மிக்கு ரேவதி என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு யாரை மணம் முடிப்பது என்பதைக் கேட்கலாம் என்று ப்ரஹ்மலோகத்திற்கு அழைத்துச் சென்ற ககுத்மி அங்கு ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருந்ததை மனம் லயித்து கேட்டுக் கொண்டிருந்தான். அதிதானம் என்ற அந்த ஸங்கீதம் சித்ரை, தக்ஷிணை, வார்த்திகைகளில் சுற்றிக் கொண்டு அனேக யுகங்கள் பாடப்பட்டு வந்தது. ககுத்மியும் அவ்வளவு காலமும், காலம் போவதறியாமல் அதை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இது முடிந்ததும் ப்ரஹ்மாவிடம் சென்று தன் பெண்ணுக்கு யாரை மணம் முடிக்கலாம் என்று கேட்ட அரசனிடம், நீர் யார், யாரைத் தேர்ந்தெடுதுள்ளீர்கள் என்று ப்ரஹ்மா கேட்க, அரசன் சிலரைக் கூறுகிறான். தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரிப்புடன் ப்ரஹ்மா கூறலானார்: "அரசே! நீங்கள் கூறும் வரன்களின் ஸந்ததிகள் கூட இப்போது பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் நீங்கள் இங்கு கச்சேரியில் லயித்திருந்த காலத்தில் பல சதுர் யுகங்கள் சென்று விட்டன. இப்போது வைவஸ்வத மனுவின் இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் கலியுகம் நெருங்கிய வண்ணம் இருக்கிறது. ஆகையால் வேறு ஒருவனுக்குத் தான் உன் பெண்ணை நீ தர வேண்டும். உன் சுற்றம், பொருள், வேலையாட்கள் என எதுவும் இப்போது இல்லை".

வரன்கள் கிடைக்காததற்கு வருந்திய ககுத்மி ப்ரஹ்மாவிடமே தகுந்த வரனைச் சொல்ல வேண்டினான். "அரசே! பூமியில் விஷ்ணுவே இப்போது அம்சமாய் அவதரித்திருக்கிறார். அவருடைய ஆதி, மத்யம், அந்தம், ஸ்வரூபம், ப்ரபாவம், பலம் இவைகளை நானும் அறிந்திலன். காலமும் அவருக்கு எந்த மாறுதலையும் உண்டாக்குவதில்லை. சரீரமும், அழிவும், நாம, ரூபங்களுமற்றவரவர். அவர் அனுக்ரஹத்தாலேயே நான் ஸ்ருஷ்டியையும், ருத்ரன் ஸ்ம்ஹாரத்தையும் செய்கின்றோம். மற்ற தேவதைகளின் ஸ்வரூபமும் அவரே. அவரிடமே உலகம் நிலைத்துள்ளது. அவரும் எதிலும் நிறைந்துள்ளார். உன் குதஸ்தலி நகரம் இப்போது யாதவர்கள் அரசாளும் த்வாரகையாக உள்ளது. ஆதிசேஷனின் அம்சமாய் அவதரித்திருக்கும் பலதேவனுக்கு உன் பெண்ணை மணம் முடி" என்றார் ப்ரஹ்மா.

குதஸ்தலியை விட முழுதும் வேறுபட்டிருக்கும் த்வாரகையையும், குள்ளமாகவும், சக்தி குறைந்தவர்களாகவும் இருக்கும் மனிதர்களையும் திரும்பிப் பெண்ணுடன் வந்த ககுத்மி கண்டான். ஸமுத்ரத்தின் கரையில் இருந்தது குதஸ்தலி. த்வாரகை ஸமுத்ரத்தின் நடுவில் இருக்கிறது இப்போது. கலப்பையை ஆயுதமாகத் தரித்து, ஸ்படிக மலை போல் வெளுத்து, உயர்ந்து அகன்ற மார்புடன் இருக்கும் பலராமருக்குத் தன் பெண் ரேவதியை மணம் முடித்தான் ககுத்மி. அவரும் ஏற்றுக் கொண்டார். தன்னை விட மிகவும் உயரமாக இருந்த பெண்ணை கலப்பையால் அழுத்தித் தனக்கு உரியவளாக்கிக் கொண்டார் பலராமர். ககுத்மி பின் இமயம் சென்று தவம் புரிந்தார்.

No comments:

Post a Comment