Tuesday, January 12, 2010

விஷ்ணு புராணம் - 34

02_12. சந்த்ரனின் தேருக்கு மூன்று சக்ரங்கள். இட, வலப் புறங்களில் பூட்டிய பத்து குதிரைகளும் முல்லை பூப்போன்ற வெண்ணிறமுடையவை. ஜலத்திலிருந்து பிறந்தவை. கல்பத்தின் ஆரம்பத்தில் பூட்டப்பட்ட இந்த குதிரைகள் கல்பம் முடியும் வரை இடைவிடாமல் சந்த்ரனின் தேரை சுமந்து வருகின்றன. இதுவும் த்ருவனையே ஆதாரமாகக் கொண்டு நக்ஷத்ரங்களைக் கடந்து செல்கிறது. ஸூர்யனுக்கு உள்ளதைப் போல் சந்த்ரனுக்கும் உதய, அஸ்தமய காலங்களில் குறைவும், வளர்ச்சியும் உண்டு. பதினாறு கலைகளைக் கொண்ட சந்த்ரனின் பதினைந்து கலைகளை தேவர்கள் பருகி வர, அமாவஸ்யையில் ஒரு கலையோடு இருக்கும் சந்த்ரனை ஸூர்யன் ஸுஷும்னை என்ற நாடியினால் ஒவ்வொரு கலையாக மீண்டும் பதினைந்து நாட்கள் வளர்க்கிறான். பூர்ண சந்த்ரனின் அமுதத்தையே முப்பத்து மூவாயிரத்து, முன்னூற்று முப்பத்து மூன்று தேவர்கள் பருகுகிறார்கள்.


பதினாறு கலைகளில் ஒவ்வொரு கலையாக க்ருஷ்ண பக்ஷத்தின் போது தேவர்கள் பருகிவர, பதினைந்தாம் நாளன்று இரண்டு கலைகளுடன் எஞ்சி இருக்கிறான் சந்த்ரன். இன்றைய தினம் ஸூர்யனின் அமா என்ற கிரணத்தில் சந்த்ரன் வஸிப்பதால், இந்த தினம் அமாவாஸ்யா என்றழைக்கப்படுகிறது. இரண்டு கலைகளோடிருக்கும் இந்த சந்த்ரன் முதலில் தண்ணீரிலும், கொடிகளிலும் பின்னர் ஸூர்யனிடமும் முறையே வஸிப்பதாலேயே இந்த நாளில் (அமாவாஸ்யா) செடி, கொடிகளை அழிப்பவன் ப்ரஹ்மஹத்தி செய்த பாபத்தை அடைகிறான். இந்த அமுதம் நிறைந்த இரண்டு கலைகளில் ஒரு கலையை இன்று பித்ருக்கள் பருகுவதால் இதை மாஸத்ருப்தி என்கின்றனர். இந்த பித்ருக்கள் ஸௌம்யர், பர்ஹிஷதர், அக்னிஷ்வாத்தர் என்று மூவகைப்படுவர். இப்படி அமுத மயமாகவும், குளிர்ச்சியாகவும் இருந்து தேவ, பித்ரு, தாவரங்களை மகிழ்விக்கிறான் சந்த்ரன்.

புதன் சந்த்ரனின் பிள்ளையாவான். அவன் தேர் வாயுவினாலும், அக்னியினாலும் உண்டானது. கபில வர்ணம் கொண்ட எட்டு குதிரைகளைக் கொண்டது. தேரில் இருப்பவனை மறைக்கும் வரூதம் என்ற அவயவமும், தேரின் அடிப்பாகத்தைத் தாங்கும் அனுகர்ஷம் என்ற அவயவமும், தேர்த் தட்டும், கொடியும் கொண்டது. சுக்ரனுடைய தேர் பொன்னிறமானது, எட்டு குதிரைகள் கொண்டது, பெரியது. அங்காரகன் தேர் அக்னியிலிருந்து பிறந்த பத்மராகம் போன்ற சிவந்த எட்டு குதிரைகளைக் கொண்டது. ப்ருஹஸ்பதியின் தேரும் எட்டு குதிரைகளைக் கொண்டு பொன்னிறத்தில் இருக்கிறது. இதில் வரும் ப்ருஹஸ்பதி ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருஷம் இருக்கிறார்.

சனியின் தேரும் ஆகாசத்தில் பிறந்த, சித்ர வர்ணமுடைய எட்டுக் குதிரைகளைக் கொண்டது. இந்த சனி மெதுவாக செல்கிறான். ராஹு வெண்ணிறமுள்ள தேரில் வண்டு வர்ணம் கொண்ட எட்டுக் குதிரைகள் பூட்டப் பட்டு சந்த்ரனையும், ஸூர்யனையும் மாறி, மாறி பர்வ காலங்களில் அடைகிறான். அதாவது ஸூர்யனுக்கு மேலே இருள் நிறைந்த மூன்றாவது ஸதானத்திலிருக்கும் இவன் க்ரஹண காலத்தில் அந்த இடத்தை விட்டு ஸூர்யனுக்குக் கீழே செல்கிறான். பூமியின் நிழலாகிய கரிய உருவத்தால் ஸூர்யனை மறைத்துத் தானும் மறைந்து விடுகிறான். கேதுவின் தேர் வைக்கோலைத் தீயிடும் போது தோன்றும் புகையின் ஒளியுடன், உருக்கிய அரக்கின் நிறத்தைக் கொண்டது.

இந்த க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள் என அனைத்து மண்டலமும் வாயுவாகிற கயிறால் த்ருவனிடம் கட்டப்பட்டு தங்கள் கதியில் சுற்றி வருகின்றன. சனி, அங்கிரஸ், சுக்ரன் மெதுவாகவும், ஸூர்யன், சந்த்ரன், புதன் வேகமாகவும் செல்பவை. செக்கு மாடுகள் போல இவை தாங்களும் சுற்றி, த்ருவனையும் சுற்றச் செய்கின்றன. இந்த சக்ரம் முழுவதும் கொள்ளிக்கட்டையைச் சுற்றும் போது தோன்றும் அலாதசக்ரத்தை ஒத்திருக்கின்றன. இவைகளை இப்படி சிறப்பாக இயக்குவதால் காற்று, ப்ரவஹம் என்று பெயர் பெறுகிறது. இப்படிப்பட்ட இந்த சிம்சுமார சக்ரத்தை இரவில் தரிசிப்பவன் பகலில் செய்த பாபங்களனைத்திலுமிருந்து விடுபடுகிறான். நக்ஷத்ரங்கள் உள்ள வரை இனிதாக வாழ்வான்.

இந்த சக்ரத்தின் மேல்வாசல் புறம் உத்தானபாதனும், கீழ்வாசல் புறத்தில் யக்ஞனும், தலைப்பக்கம் தர்மனும், மார்பகத்தில் நாராயணனும், முன் கால்களில் அச்வினிகளும், பின் தொடைகளில் வருணனும், அர்யமாவும், குறியில் ஸம்வத்ஸரமும், அபானத்தில் மித்ரனும், வாலில் அக்னி, மஹேந்த்ரன், காச்யபன், த்ருவன் ஆகியோரும் இருக்கின்றனர்.

உலகப்பொருட்கள் சித் (அறிவுள்ளவை), அசித் (அறிவற்றவை) என இருவகை. சித் எனும் ஜீவாத்மாக்கள் மாறுதல்களின்றி, நித்யமாய், அஸ்தி (இருக்கின்றன) என்று கூறும் வகையிலும், அசித் எனும் ஜடப்பொருள்கள் அனித்யங்களாய், மாறுபாடுகளோடு, நாஸ்தி (இல்லை) எனச் சொல்லும் வகையிலும் உள்ளன. இவையிரண்டுமே பகவானின் சரீரங்களே. ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில் ஜலமும், பின் அதிலிருந்து தாமரையின் உருவில் மலை, கடல்களடங்கிய இந்த உலகும் தோன்றியது. இவையாவும் விஷ்ணுவின் அங்கங்களே. ஸர்வம் விஷ்ணுமயம். இதில் எந்த வேற்றுமையுமில்லை. வேற்றுமைகள் ஞானத்தால் உண்டாகின்றன.

No comments:

Post a Comment