Wednesday, January 27, 2010

விஷ்ணு புராணம் - 54

03_16. காலசாகக் கீரை, தேன், ப்ரசாந்திகமெனும் காட்டு தான்யம், செந்நெல், கருஞ்சாமை, வெண்சாமை, வழுதுணை, பிரண்டை முதலான காட்டு மருந்துகள், கிழங்குகள், யவம், உளுந்து, பயறு, கோதுமை, நெல், எள், மலையகத்தி, கடுகு, பாகல், பலா, வாழை, அவரை முதலியவை ச்ராத்தத்திற்குச் சிறந்தவை. கயா ச்ராத்தம் ஜன்ம சாபல்யம் தரும். ஆக்ரயணம் செய்யாத தான்யங்கள், மொச்சை, காராமணி, அணு எனும் கல்ப தான்யம், மஸூரம், சுரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, காந்தாரகம் எனும் வாசனையுள்ள சம்பா, கரம்பம், உப்பு, உப்புச் சுவை மிகுந்தவை, உவர் நிலத்தில் உண்டானவை, சிவந்தவை, மரப் பிசின் (பெருங்காயம்), வாயால் சொல்லத்தகாதவை இவை கூடாது.

இரவில் கொண்டு வந்தது, பாழடைந்த கிணற்றிலிருந்தது, குறைந்த அளவுள்ளது, துர்நாற்றமும் நுரையுமுள்ளது இந்த தீர்த்தங்கள் கூடாது. கன்றில்லா பசுவின் பால், ஒற்றைக்குளம்புள்ளவைகளின் பால், ஒட்டகம், ஆடு, எருமை, மான் இவைகளின் பாலும் கூடாது. நபும்ஸகன், நக்னன், பெரியோர்களால் தள்ளப்பட்டவன், சண்டாளன், பாஷண்டன், அருவருப்பான நோயுள்ளவன், வேத தர்மங்களை விட்டவன், வீட்டு விலக்கானவள், ப்ரஸவித்தவள், சௌசமும்(சுத்தம்) ஆசாரமும் இல்லாதவன், பிணம் தூக்கிப் பிழைப்பவன், கோழி, நாய், குரங்கு, ஊர்ப்பன்றி இவைகள் சூழ்ந்த இடங்களையும், நகம், மயிர், பூச்சி, கஞ்சி இவைகளோடு சேர்ந்ததும் பழையதுமான அன்னத்தையும் ச்ராத்தத்திற்கு விலக்க வேண்டும்.

பூமியில் எள்ளை இறைத்து ராக்ஷஸர்களை விரட்ட வேண்டும். மறைவான இடத்தில் செய்ய வேண்டும். சுத்தமான அன்னத்தை நாம, கோக்ரங்களுடன் கொடுத்தால் பித்ருக்கள் தேவ லோகத்தில் இருந்தால் அன்னம் அம்ருதமாகவும், பசுக்களாக இருந்தால் புல்லாகவும் இப்படி பலவாறு மாறி அவர்களுக்கு த்ருப்தி அளிக்கிறது. இமயமலைச் சாரலில் கலாபம் எனும் க்ராமத்தின் உபவனத்தில் மனுபுத்ரனான இக்ஷ்வாஹு மஹராஜனிடம், "கயையில் பிண்டம் போடும் நல்லொழுக்கமுடையவர்களும், பாத்ரபத க்ருஷ்ண த்ரயோதசி, மாக அமாவாஸ்யையிலும் நமக்குத் தேனும், நெய்யும் கலந்த பாயஸம் தரும் நல்லவர்களும் நம் குலத்தில் பிறப்பார்களா? நம் குலத்தில் பிறந்தவர்கள் பத்து வயது நிரம்பிய கன்னிகையை விவாஹம் செய்து தருவார்களா? உடலில் சிவந்தும், முகத்திலும் வாலிலும் நன்கு வெளுத்தும், கொம்பிலும் குளம்பிலும் சிறிது வெளுத்தும் இருக்கும் நீலம் எனும் ரிஷபத்தை விடுவார்களா? விதிப்படி தக்ஷிணை தந்து அச்வமேதமாவது செய்வார்களா" என்று பித்ருக்கள் தங்கள் இஷ்டத்தைக் கேட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment