Sunday, January 31, 2010

விஷ்ணு புராணம் - 62

04_06. ஸூர்ய வம்ச வ்ருத்தியைக் கேட்டறிந்த மைத்ரேயர், சந்த்ர வம்சத்தையும் கூறக் கேட்கிறார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய ப்ரஹ்மாவின் புத்ரர் அத்ரி மஹரிஷி. இவரின் புத்ரன் தான் சந்த்ரன். ஓஷதிகள், ப்ராஹ்மணர்கள், நக்ஷத்ரங்கள் இவைகளுக்கு அதிபதியாக ப்ரஹ்மாவால் பட்டம் சூட்டப்பட்ட இவன் ராஜஸூய யாகமும் செய்து முடித்தான். செருக்கால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் பத்னி தாரையை அபஹரித்தான். மற்ற தேவர்களும், குருவும், ப்ரஹ்மாவும் சொல்லியும் அவளை விடாத சந்த்ரனின் பக்கம் ப்ருஹஸ்பதியின் பகையாளியான சுக்ராச்சார்யார் இந்த சமயம் பார்த்து தன் சிஷ்யர்களான ஜம்பன், கும்பன் முதலான தைத்ய, தானவர்களுடன் சேர்ந்து கொண்டு தேவர்களுக்கெதிராக யுத்த முயற்சிகளையும் கொண்டார்.

ப்ருஹஸ்பதியின் பிதாவான அங்கிரஸ்ஸிடமே ருத்ரரும் வித்யாப்யாஸம் செய்தார். எனவே குரு புத்ரராதலால் ருத்ரரும், தங்களின் குருவாதலால் தேவ ஸைன்யமும் ப்ருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்தது. தாரையின் நிமித்தாமாய் தாரகாமயம் என்ற தேவாஸுர யுத்தம் கடுமையான யுத்தம் மூண்டது. ப்ரஹ்மா இதில் தலையிட்டு தாரையை ப்ருஹஸ்பதியிடமே விடுமாறு சந்த்ரனிடம் கூற, முடிவில் அவனும் அவ்வாறே செய்தான். ஆனால் இப்போது அவள் கர்ப்பிணி. சந்த்ரனால் பலாத்காரமாக உண்டாக்கப்பட்ட அந்தக் கர்ப்பத்தை விட்டு விடுமாறு அவளிடம் ப்ருஹஸ்பதி கூற பதிவ்ரதையான அவளும் அதை நாணற்கற்றையில் விட்டாள்.

ஆனால் உண்டான குழந்தையின் உன்னதமான தேஜஸ்ஸைக் கண்டு ப்ருஹஸ்பதி, சந்த்ரன் இருவருக்குமே அதனிடம் ஆசை உண்டாயிற்று. ஆனால் எவர் கேட்டபோதும் அது யாருடைய குழந்தை என்பதைக் கூற வெட்கத்தினால் தாரை மறுத்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட குழந்தை தாயைத் தண்டிக்க முடிவு செய்தது. மீண்டும் சமாதானம் செய்து வைத்த ப்ரஹ்மா, தாரையிடம் உண்மையை உரைக்குமாறு கூறுகிறார். தாரை அந்தக் குழந்தைச் சந்த்ரனுக்குப் பிறந்தவன் என்று கூறுகிறாள். சந்த்ரனும் மிகுந்த ஸந்தோஷத்துடன் அவனுக்கு புதன் என்று பெயர் சூட்டிக் கொண்டாடுகிறான்.

இந்த புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்பவன் பிறந்தான். அவன் யாக, தானங்களில் சிறந்தவன். ஊர்வசிக்கும் இவனுக்கும் காதல். இதனால் மித்ராவருணர்கள் ஊர்வசியிடம் காமம் கொண்ட போது அதற்கு ஊர்வசி உடன்படாததால், பூலோகத்தில் ஒருவனுக்கு மனைவியாக சில காலம் வசிக்கக்கடவாய் என்று அவர்கள் ஊர்வசியைச் சபித்து விட்டனர். பூலோகத்தில் இவளிடம் மனதைப் பறிகொடுத்த புரூரவஸ் இவளிடம் தன்னை மணக்குமாறு வேண்டுகிறான். அதற்கு இவள் மூன்று நிபந்தனைகளை விதித்து, அவைகளுக்கு உடன்பட்டால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள்.

தான் குழந்தைகளைப் போல் வளர்க்கும் இரு ஆடுகளை படுக்கையறையிலேயேதான் எப்போதும் வைத்திருப்பேன் என்பது முதலாவது நிபந்தனை. ஆடையின்றித் தான் புரூரவஸ்ஸைப் பார்க்க நேரிடக்கூடாது என்பது இரண்டாவது. எப்போதும் நெய்யையே உணவாகக் கொள்வேன் என்பது மூன்றாவது நிபந்தனை. இவைகளை ஏற்றுக்கொண்டு அவளை மணந்த புரூரவஸ்ஸும் அவளுடன் அறுபத்தொரு வருஷங்கள் இன்பம் துய்த்திருந்தான். ஊர்வசியும் தேவலோகத்தையும் இந்த ஆனந்தத்தில் வெறுத்திருந்தாள். ஊர்வசியில்லாத ஸ்வர்க லோகம் குறையோடு இருந்தது.

இதனால் ஊர்வசியை மீண்டும் தேவலோகத்திற்குக் கொண்டு வருவதற்காக விச்வாவஸு என்ற கந்தர்வ ராஜன் ஒரு இரவு கந்தர்வர்களுடன் வந்து ஆடுகளை அபஹரித்துச் சென்றான். ஆடுகள் கத்துவதைக் கேட்டு ஊர்வசியும் நான் குழந்தைகளைப் போல வளர்த்து வந்த ஆடுகளை எவனோ அபஹரித்துச் செல்கிறானே. நான் அனாதையானேனே. இதை யாரும் தடுக்கவில்லையே. ஒன்றுக்கும் உதவாத ஒருவனை நான் புருஷனாக அடைந்திருக்கிறேனே என்று கத்தத் தொடங்கி விட்டாள். அப்போது புரூரவஸ் ஆடையின்றி இருந்தான். இருட்டில் இவள் நம்மை நிர்வாணமாகப் பார்க்க முடியாது என்று அப்படியே கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைத் திருடியவர்களைப் பிடிக்க அவஸரமாகச் சென்றான்.

இதுதான் ஸமயம் என்றிருந்த விச்வாவஸுக்கள் ப்ரகாசமான ஒரு மின்னலையும் ஏற்படுத்தி ஊர்வசியைப் புரூரவஸ்ஸின் நிர்வாணக்கோலத்தைக் காணச் செய்தனர். இரண்டு நிபந்தனைகளும் மீறப்பட்டு விட்டதால் ஊர்வசியும் தேவலோகம் திரும்பி விட்டாள்.
கந்தர்வர்களும் வந்த வேலை முடிந்ததென்று ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டு விட்டு மறைந்து விட்டனர். ஊர்வசியைக் காணாத புரூரவஸ் பித்துப் பிடித்து திகம்பரனாகவே அலையத் தொடங்கி விட்டான். பல நாள் கழித்து அவளையும், கூட நான்கு அப்ஸரஸ்ஸுக்களையும் ஒரு தாமரைக் குளத்தில் குருக்ஷேத்ரத்தில் கண்டான். பலவாறு அவளைப் புகழ்ந்தும், திட்டியும், நல்லதும் கூறினான் புரூரவஸ்.

ஊர்வசி, "விவேஹத்தை இழக்காதீர்கள். உங்களால் கர்ப்பிணியாய் இருக்கிறேன் இப்போது நான். உங்களுக்கு ஒரு புத்ரன் பிறக்கப் போகிறான். எனவே ஒரு வருஷம் கழித்து வாருங்கள். நான் ஓரிரவு உங்களுடன் கூடி வஸிக்கிறேன்" என்று கூறினாள். புரூரவஸ்ஸும் சந்தோஷச் செய்திகளுடன் நாடு திரும்பினான். ஊர்வசி அவனைப் பற்றியும், தான் அவனுடன் வாழ்ந்தது பற்றியும் மற்ற அப்ஸரஸ்ஸுக்களிடம் புகழ்ந்து கூறினாள். அவர்களும் அவனைக் கொண்டாடி, தாங்களும் அவனுடன் வஸிப்பதை விரும்புவதாகக் கூறினர். ஒரு வருஷம் கழிந்ததும், "ஆயுஸ்" என்ற புத்ரனை அவனிடம் கொடுத்து விட்டு, தானும் அவனுடன் ஒரு இரவு அவனுடன் கூடியிருந்தாள். அவ்வாறே மற்ற அப்ஸரஸ்ஸுக்களும் அவள் அனுமதியுடன் அவனுடன் கூடி இருந்து தாங்களும் பிள்ளைகளைப் பெற்றனர்.

மஹாராஜரே! எங்களிடம் அன்பு கொண்ட கந்தர்வர்கள், அதனால் தங்களுக்கு வரங்களைத் தர முன் வந்துள்ளார்கள் என்றாள் ஊர்வசி. புரூரவஸ் "நான் பகைவர்களை வென்று, இந்த்ரிய சக்தி மிகுந்தவனாக, உறவினர், பொக்கிஷங்கள் குறைவின்றி இருக்கிறேன். எனவே ஊர்வசியே எனக்கு வேண்டியது. அதை அருளுங்கள்" என்று கந்தர்வர்களிடம் வேண்டினான். கந்தர்வர்கள் ஒரு அக்னி ஸ்தாலியை அவனிடம் கொடுத்து வேத வழியில் அந்த அக்னியை மூன்றாக்கி, ஊர்வசியின் கூடுதலை விரும்பி யாகம் செய்யுங்கள். அவளை அடைவீர்கள் என்று கூறிச் சென்றனர். சரியென்று அதைப் பெற்றுக் கொண்ட வந்த அவன் வழியில் யோசித்தான்.

ஊர்வசியைப் பெற்று வராமல் இந்த ஸ்தாலியைப் போய் பெற்றுக் கொண்டு வந்து விட்டோமே என்று அதை அங்கேயே வைத்து விட்டு வருத்தத்தோடு நாட்டுக்கு வந்து விட்டான். நள்ளிரவில் உறங்காமல் குழப்பத்தில் "ஊர்வசியை அடைய உதவுமென்று கந்தர்வர்கள் கொடுத்த அக்னி ஸ்தாலியையும் காட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டோமே" என்று மீண்டும் காட்டிற்கு வந்தான். அக்னி ஸ்தாலியை வைத்து விட்டுப் போன இடத்தில் வன்னி மரத்தை நடுவில் கொண்ட ஒரு அரச மரத்தைக் கண்டான். "இந்த அக்னி ரூபமான மரத்தையே அரணியாக்கி, கடைந்து அக்னியை உண்டாக்கி உபாஸிப்போம்" என்று அந்த மரத்தைத் தன் நாடு கொண்டு வந்தான்.

காயத்ரீ மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே அரணியைச் செய்ய, இருபத்து நான்கு அளவுள்ள அரணியும் உண்டாயிற்று. அதைக் கடைந்து மூன்று அக்னியையும் பெற்று வேத விதிப்படி, ஊர்வசியை உத்தேஸித்து யாகங்களைச் செய்த புரூரவஸ் மீண்டும் கந்தர்வ லோகத்தையும், ஊர்வசியையும் நிரந்தரமாகப் பெற்றான். ஒன்றாய் இருந்த அக்னி இப்படி இந்த மன்வந்த்ரத்தில் மூன்றாயிற்று.

No comments:

Post a Comment