03_18. தவம் செய்து கொண்டிருந்த அஸுரர்களை நர்மதைக் கரையில் கண்ட மாயாமோஹன் உடனே ஆடையின்றி, மழுங்கச் சிரைத்தத் தலையுடனும், கையில் மயில் தோகையுடனும் அவர்களிடன் சென்று, "அஸுரத் தலைவர்களே! எதற்குத் தவம் செய்கிறீர்கள். இம்மைப் பயனுக்கா, அல்லது மோக்ஷமெனும் மறுமைப் பயனுக்கா" என்று கேட்க, அவர்கள் "மோக்ஷம் விரும்பியே செய்கிறோம். நீ கேட்பதைப் பார்த்தால் இது ஸம்பந்தமாக ஏதோ சொல்ல விரும்புவது போலுள்ளது. சொல்" என்றனர். மாயனும் "அப்படியானால் நான் சொல்லப்போகும் மோக்ஷத்துக்குக் காரணமான தர்மத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்களாக (அர்ஹர்கள்) இருங்கள். இதைவிட வேறெதும் மோக்ஷத்தைத் தராது. இதுவே ஸ்வர்கத்தையோ, மோக்ஷத்தையோ தரக்கூடியது. எனவே இந்த தர்மத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இது தர்மமாகவும், அதர்மமாகவும், ஸத்தாகவும், அஸத்தாகவும், மோக்ஷத்தைத் தருவதும், தராததுமாகவும், பர அபரமார்த்தமாகவும், செய்யத்தகுந்ததாகவும், தகாததாகவும், சொல்லத்தகுந்ததாகவும், தகாததாகவும், திகம்பரர்களுடையதாகவும், ஆடைகளணிந்தவர்களுடையதாகவும் இருக்கும்" என்று பலவாறு குழப்பி அவர்களை மதி மயக்கி, வேத மார்க்கத்திலிருந்து விலக்கினான். அவர்களும் அந்த தர்மத்தைக் கொண்டார்கள். தகுந்தவர்(அர்ஹர்) ஆவீர் என்று அடிக்கடி கூறியதால் மாயனுக்கு அர்ஹன் என்ற பெயரும், அந்த தர்மம் அர்ஹத்வம் என்றும், அதைக் கொண்டவர்கள் ஆர்ஹதர் என்றும் ஆயினர். இதுவே ஜைன மதமாகப் பரவியது.
இதன் பின் அர்ஹன் மேலும் சில அஸுரர்களிடம் சிவந்த ஆடைகளோடு, ஜிதேந்த்ரியனாய், தபஸ்வி வேஷம் கொண்டு "அஸுரர்களே! பசுக்களைக் கொல்லும் ஜீவஹிம்ஸை நிறைந்த இந்த யாகங்கள் எதற்கு? மோக்ஷத்திற்காகவா? இந்த யாகங்களால் எந்த பயனும் இல்லை. நான் சொல்வதைக் கேளுங்கள். இவ்வுலகம் விஞ்ஞான மயமானது. ஞானிகளும் இதையே கூறுகின்றனர். மேலும் ஆதாரமற்றது. அநாதியாகவே தோஷமுள்ளதாக ஸம்ஸார ஸங்கடங்களில் உழல்கிறது. இதை அறியுங்கள்" என்று பலமுறை உபதேஸித்தான். அறியுங்கள் (புத்யத) என்று பல முறை கூறியதால் புத்தன் என்றும், இந்த வாதம் புத்யத்வம் என்றும் ஆனது. மதம் பௌத்தமானது. இப்படி அஸுரர்கள் எவரும் வேத தர்மங்களை விடுத்து, அந்தணர்களையும் மதிக்கத் தவறினர்.
"ப்ராணி வதம் கூடாது என்று கூறப்பட்டுள்ள போது, யாகங்களில் மட்டும் அது பயனைத் தருவதென்று கூறுவது ஆராயாமல் சொல்வதாகும். எனவே யாகங்களைச் செய்ய வேண்டாம். யாகங்கள் செய்வது இந்த்ரனாகி ஸ்வர்கத்தை அனுபவிப்பதற்காகத் தானே. இந்த்ரன் யாக ஸமித்துக்களான ஹோமம் செய்யப்படும் வன்னிக் கட்டைகளை சாப்பிடுகிறான் என்கிறது வேத மதம். கட்டையைச் சாப்பிடும் அநாகரிகமான இந்த்ரனாவதற்கு யாகங்கள் செய்வதை விட ம்ருதுவான இலைகளை உண்ணும் ஆடுகளாகப் பிறப்பதே சிறந்தது. யாகங்களில் இறக்கும் ஆடுகள் ஸ்வர்கத்திற்குச் செல்கின்றன என்றால், வைதீகர்கள் தங்கள் தந்தைகளையே யாகங்களில் வெட்டிப் போட்டு, ஸ்வர்கத்திற்கு அனுப்பலாமே.
அதேபோல் ச்ராத்தம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு வயிறு புடைக்க சோறு போடுவதும் வீணே. இங்கிருப்பவர் சாப்பிட்டால் எங்கோ இருப்பவர்களுக்கு பசி, நீர் உண்ட த்ருப்தி உண்டாகிறதென்றால், வெளியூர் செல்லும் தகப்பன் கையில் உணவைத் தயாரித்துக் கொண்டு செல்வது ஏன். தான் வெளியூர் செல்லும் போது வீட்டிலிருக்கும் பிள்ளையையே தனக்கு ச்ராத்தம் செய்யச் சொல்ல வேண்டியது தானே. பசியும், தாகமும் அடங்கி விடுமல்லவா. இந்த உலகத்திலேயே வேறு ஊர் செல்பவர்க்கு நாம் செய்யும் ச்ராத்தம் பசியையும், தாகத்தையும் தீர்க்காதபோது, வேறு உலகத்திற்கே சென்று விட்டவர்களுக்கு, நாம் பூலோகத்தில் ச்ராத்தம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு உணவிடுவது, நீர் கொடுப்பது எப்படி த்ருப்தியைத் தரும்.
எல்லாம் பொய். பாமரர்களை ஏய்க்கவே இந்த ச்ராத்தம் முதலான சடங்குகள் எல்லாம். ஆகவே புத்திசாலி அஸுரர்களே, நீங்கள் அவற்றையெல்லாம் நம்பாதீர்கள், விரும்பாதீர்கள். அவற்றை ஒதுக்குவதே உங்களுக்கு நன்மை தரும். எழுத்துக்களாலும், சொற்களாலும் செய்த வேதவாக்யங்கள் அனித்யங்கள். நாம் எப்போதும் நம்பத் தகுந்தவன் சொல்வதையே ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வேதங்களைக் கூறியவர் அப்படி யார். ஒருவரும் கூறாமல் இவை ஆகாசத்திலிருந்து குதித்தவைகளா? எனவே புத்திசாலிகளுக்குகந்ததும், உங்களுக்கு நம்பத்தகுந்தவனுமான நான் சொல்வதைக் கேளுங்கள். இவைகளை விட்டொழியுங்கள்" என்றெல்லாம் பலவாறு மீதமிருந்த அஸுரர்களையும் புத்தன் குழப்ப, அவர்கள் முழுவதுமாக வேத மார்க்கத்தை விட்டு விலகினர். நாஸ்தீகர்களும், நக்னர்களுமான அவர்களை அப்போது தேவர்கள் எளிதில் வென்றனர்.
எனவே வேதங்களையும், வேத தர்மங்களையும் விட்டவர்களே நக்னர்கள். இதேபோல் நான்கு ஆச்ரமங்களில் ஏதாவது ஒன்றில் எப்போது இருக்க வேண்டும். ஆச்ரமமில்லாமல் இருக்கக் கூடாது. அவர்களும் நக்னர்களே. சக்தியுள்ள போதும் கர்மாக்களை விட்டவன் அந்த நாளிலேயே பதிதன் (ப்ரஷ்டன்-விலக்கத் தக்கவன்) ஆகிறான். ஒரு பக்ஷம் விட்டவன் விசேஷ பதிதனாகிறான். மீண்டும் ப்ராயச்சித்தம் செய்தே இவர்கள் சுத்தி அடையலாம். ஒரு வருஷம் கர்மாக்களை விட்டவன் மிக்க பாபியாகிறான். இவனுக்கு ப்ராயச்சித்தமே கிடையாது. இவனை எவரும் பார்க்கவே கூடாது. அப்படிப் பார்த்தால் பாபம் தீர ஸூர்யனையும், நல்லவர்களையும் பார்க்க வேண்டும். தொட்டால் உடுத்திய வஸ்த்ரத்துடன் குளிக்க வேண்டும்.
எவன் வீட்டில் தேவ, ரிஷி, பித்ருக்கள், அதிதிகள் பூஜிக்கப் பட வில்லையோ அவனை விட பாபம் செய்தவர் உலகில் எவருமில்லை. தேவ, ரிஷி, பித்ருக்கள், அதிதிகள் வருந்தி விடும் பெரு மூச்சினால் இவர்கள் தீண்டப்பட்டவர்கள், இவர்களுடன் உட்காருதல், இவர்கள் வீட்டிற்குச் செல்லுதல் முதலான பாபங்களை எவரும் செய்யக்கூடாது. அப்படி ஒரு வருஷம் செய்தால் அவர்களுக்கும், அந்த பாபிக்குச் சமமான பாபமே வந்து சேரும். அவன் உணவை உண்டாலோ, அவன் படுக்கையில் படுத்தாலோ உடனே அந்த பாபம் நமக்கும் வந்து விடும். நான்கு வர்ணத்தவர்க்கும் எங்கு கலப்பு (ஸாங்கர்யம்) இருக்கிறதோ அந்த இடத்தையும் பெரியோர்கள் விட வேண்டும்.
முன்பு சததது என்ற ஓர் புகழ் பெற்ற அரசன் இருந்தான். அவன் மனைவி சைப்யை சிறந்த பதிவ்ரதை. அவளுடன் சேர்ந்து அரசன் தினமும் ஜனார்த்தனனை த்யான, ஹோம, ஜப, தான, உபவாஸ முதலியவைகளால் ஆராதித்து வந்தான். இவர்களிருவரும் ஒரு கார்த்திகை ஏகாதசியில் கங்கையில் நீராடி விட்டுக் கரையேறும் போது, எதிரில் ஒரு பாஷண்டி (ஸ்வதர்மத்தை விட்டவன்) வருவதைக் கண்டனர். அவன் இந்த அரசனுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த ஆசார்யனின் ஸ்னேஹிதன். அந்த மரியாதைக்காக அவனுடன் சததது சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். இதைத் தவறென்று கருதிய சைப்யை அவனுடன் பேசாமல், பார்த்த பாபம் தீர ஸூர்யனையும் உடனே தர்சித்தாள்.
பின் வீடு திரும்பிய அவர்கள் விஷ்ணு பூஜையைச் செய்து, கடமைகளைச் செய்தனர். இப்படிக் காலங்கள் கழிந்த போது ஒரு சமயம் அரசன் இறக்கவே, சைப்யையும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். உபவாஸ காலத்தில் பாஷண்டனுடன் பேசிய ராஜன் மறுபடி நாயாகப் பிறந்தான். அரசி காசிராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவள் முற்பிறவி நினைவுடனும் இருந்தாள். ஸகல நற்குணங்களும் நிறைந்த அவள் தன் தகப்பன் தனக்கு மணம் முடிக்க முயற்சிப்பதை அறிந்து அதைத் தடுத்து விட்டு, திவ்ய த்ருஷ்டியினால் விதிசை எனும் நகரத்தில் தன் முன் ஜன்மத்துக் கணவன் நாயாகப் பிறந்திருப்பதை அறிந்து அங்கு ஓடினாள். நாயையும் அங்கு கண்டு பிடித்து, அதற்குப் பிடித்த உணவு வகைகளை எப்போது அதற்குக் கொடுத்து, உபசரித்தாள்.
தன் குணத்திற்கேற்ப நன்றிக்காக வாலை ஆட்டிக் காண்பித்த அதற்கு முன்பிறவியை உணர்த்தினாள். தன் செயலை நினைத்துப் பெரிதும் வருந்திய நாய்ப் பிறப்பில் இருக்கும் சததது, நகருக்கு வெளியேயுள்ள ஒரு மலையிலிருந்து கீழே விழுந்து (மருப்ரபதனம்)உயிரைப் போக்கிக் கொண்டான். மீண்டும் கோலாஹலம் எனும் மலை ப்ரதேசத்தில் நரி ஜன்மம் எடுத்த அவனை மீண்டும் தன் ஞான த்ருஷ்டியால் கண்டு பிடித்த ராஜகுமாரி இப்போதும் அவனை உபஸரித்து உண்மையைக் கூறினாள். அவனும் மிக வருந்தி உணவை எடுத்துக் கொள்ளாமலேயே இருந்து உடலை விட்டான். இப்படி மேலும் செந்நாய், கழுகு, காக்கை, கொக்கு, மயில் எனப் பிறவிகளை எடுத்தான். இளவரசியும் தொடர்ந்து அவனைக் காத்தாள்.
இப்படி மயில் பிறவியிலிருக்கும் போது ஜனகர் அச்வமேத யாகம் செய்து முடிவில் (அவப்ருதம்) ஸ்னானம் செய்யும் காலத்தில் இளவரசி மயிலையும் கொஞ்சி முன் பிறவிகளை நினைவு படுத்தி அதனுடன் ஸ்னானம் செய்தாள். மயிலும் உடலை விடுத்து இப்போது ஜனகருக்கே மகனாகப் பிறந்தது. இந்த சூழ்நிலையில் தந்தையிடம் தனக்கு ஸுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்ன இளவரசி ஜனகனின் மகனாகப் பிறந்திருக்கும் தன்னுடையவனையே மீண்டும் வரித்து, அவனுடன் பல காலம் வாழ்ந்திருந்து, விதேஹ ராஜ்யத்தையும் பெரும் பொருளுடனும், புகழுடனும், வெற்றிகளோடும், நற்பெயரோடும் ஆண்டு அனுபவித்து ஒரு யுத்தத்தில் அரசன் வீர மரணம் எய்த போது தானும் உடன்கட்டை ஏறி ஸ்வர்க்கத்திற்கும் மேலான லோகங்களை அனுபவித்தாள். இதிலிருந்து பாஷண்டனும் பேசிய பாபமும், அச்வமேத அவப்ருத ஸ்னானத்தின் மஹிமையும் புரியும்.
இதேபோல் மேலும் சிலர் உள்ளனர். அவர்களையும் விலக்க வேண்டும். வேதங்களில் விலக்கப் பட்ட கர்மாக்களைச் செய்பவன்(விகர்மஸ்தன்), சாமியார் வேஷம், கமண்டலம், தண்டம் இவைகளைத் தாங்கி, ஒருவருக்கும் தெரியாமல் பாபத்தைச் செய்பவன்(பைடாலவ்ரதிகன்), பூனையின் வ்ரதமுடையவன், எதிரில் ப்ரியமாகவும், மறைவில் அப்ரியமாகவும் ஒருவரைப் பற்றிச் சொல்பவன்(சடன்), நற்செயல்கள் செய்யும் போது பல தோஷங்களைக் காட்டி அவற்றில் சந்தேஹத்தை ஏற்படுத்துபவன்(ஹைதுகன்), கொக்கு போல ஒன்றும் தெரியாதவனாக இருந்து, ஸமயம் பார்த்து தீங்கிழைப்பவன் (பகவ்ருத்தி) இவர்களை பேச்சளவிலும் உபசரிக்கக் கூடாது. பெரும் பாபம் சேரும். காரணமின்றி ஜடை வளர்ப்பவர் மொட்டை அடித்துக் கொள்பவர், தேவ ரிஷி பித்ருக்களுக்கு நிவேதிக்காத உணவை உண்பவர், உள்ளும் வெளியும் சுத்தமில்லாதவர் இப்படி நக்னர்கள் பல விதம். இவர்கள் பார்த்தாலே ச்ராத்தம் அழியும், அன்றைய புண்யமும் போகும்.
Wednesday, January 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment