02_16. இப்படிக்கூறிச் சென்ற ருபு மஹரிஷி மீண்டும் ஆயிரமாண்டுகள் சென்றபின் மீண்டும் அதே அத்வைத ஞானத்தையே சிஷ்யனுக்கு உபதேஸிக்க விரும்பி மீண்டும் நகரத்திற்கு வந்தார். இது ஒரு முறைச் செய்த உபதேஸத்தால் நிலைப்பதில்லை. எனவேதான் மீண்டும் வருகிறார். அரசன் அப்போது தன் பெரிய பரிவாரங்களோடு பட்டண ப்ரவேசம் செய்து கொண்டிருந்தான். அப்போது தான் காட்டிலிருந்து ஸமித், தர்ப்பை முதலானவைகளைச் சேகரித்துக் கொண்டு வந்திருந்த நிதாகர் பசி மயக்கத்துடனும், இந்தக் கூட்டத்தில் சென்றால் தீண்டல் உண்டாகும் என்று நினைத்தும் ஜனங்களில்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் வந்து அவரைச் சந்தித்து, வணங்கி ருபு "ஏன் இங்கு ஒதுங்கி நிற்கிறீர்கள், என்ன காரணம்" என்றார்.
நிதாகர் அவரிடம் "அந்தணரே! அரசன் பட்டண ப்ரவேசம் செய்கிறான். இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைக் காண்கிறீர் அல்லவா. அதனால் தான் ஒதுங்கி இருக்கிறேன்" என்றார். ஆரம்பித்தார் ருபு, "இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார். நீர் இந்த வேற்றுமைகளையறிந்திருப்பதாலுங்களைக் கேட்கிறேன்" என்றார். நிதாகர் அவரைப் பார்த்து "இதை நீங்கள் அறியவில்லையா. இதோ மலைச்சிகரம் போலிருக்கும் இந்த யானையில் வீற்றிருக்கிறானே, அவனே அரசன். அவனைச் சூழ்ந்திருக்கும் இவர்கள் சாதாரண மக்கள்" என்றார். ருபு மீண்டும் ஒன்றுமறியாதது போல "இரண்டு பொருள்களைச் சுட்டிக் காண்பித்து ஒன்றை யானை என்றும், இன்னொன்றை அரசனென்றும் கூறுகிறீர்கள். இவற்றில் எது யானை, எது அரசன் என்று எனக்குப் புரியும்படி வேறுபடுத்திக் கூறுங்களேன். எனக்கு ஒரு வேற்றுமையும் புரியவில்லை" என்றார்.
நிதாகர் இப்போதும், "ஐயா! கீழேயிருப்பது யானை, மேலேயிருப்பவன் அரசன். வாஹனமாயிருப்பது யானை. வஹிக்கப்படுகிறவனரசன். இது உமக்கு ஏன் புரியவில்லை. இதையறியாதார் ஒருவரும் இருக்க மாட்டார்களே" என்றார். ருபு "கீழ், மேல் என்றால் என்ன. அதை விளக்கும்" என்றார். வந்ததே கோபம் நிதாகருக்கு. ஜம்மென்று ருபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்டார் நிதாகர்!! கஜவாஹனன் அரசன். அவனைப்போல் நானிப்போது முனிவாஹனன். அரசன் யானை மீதிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழேயிருப்பது யானை, இங்கு நீர். மேலேயிருப்பது அங்கு அரசன். இங்கு நான். நானும், அரசனுமிருக்குமிடம் மேல், நீங்களும், அந்த யானையும் இருக்குமிடம் கீழ். புரிகிறதா இப்போது.
என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு இதை இதற்கு மேல் விளக்க வேறு வழி தோன்றவில்லை. ப்ரஹ்மஞானியான தங்களுக்கு அபசாரம் செய்து விட்டேன். மன்னியுங்கள்" என்று இறங்கிக் கொண்டார். ருபுவா? ம்ஹூம். இன்னும் குழப்பி விட்டீர்கள் இப்போது. நான் அரசன் போல, நீங்கள் யானை போல என்றீர்கள். முதலில் நான், நீ என்பவைகளை விளக்குங்கள். பின்பல்லவா அதை வைத்து அரசனையும், யானையும் புரிந்து கொள்ள முடியும். எனவே எனக்கும். உமக்குமுள்ள வேற்றுமைகளை விளக்கும்" என்று நிதானமாகக் கேட்டார் நிதாகரை. இந்தக் கேள்வியைக் கேட்டதும் தான் வந்திருப்பவரைப் புரிந்து கொண்டார் நிதாகர். கண்கூடாகத் தெரியும் இந்த வேற்றுமை உடலைப் பற்றியது. இதை எவரும் அறிவர். ஆனால் அனைத்தையும் ஆத்மாவின் ஞானாகாரங்களாகப் பார்க்கும் ஒருவருக்கு தனக்கும், மற்றவருக்குமுள்ள வேற்றுமையே தெரியாது. அப்படிப் பண்பட்ட அத்வைத ஞானம் பெற்ற இவர் நம் ஆசார்யர் ருபுவாகத்தானிருக்க வேண்டும்.
"உத்தமரே! நீங்கள் என் ஆசார்யர் ருபுவாகத் தானிருக்க வேண்டும். மற்ற ஒருவருக்கு இப்படி நிலைத்த அத்வைத ஞானம் கிடையாது. என்னை அனுக்ரஹிக்க தாங்கள் தான் இங்கு வந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறி ருபுவின் பாதங்களில் விழுந்தார். ருபுவும் அதை ஆமோதித்து ஆமாம், முன்பு நீ செய்த பணிவிடையால் மகிழ்ந்தே மீண்டும் உனக்கு ஆத்ம அத்வைதத்தை உபதேஸிக்க இங்கு வந்தேன். இந்த அத்வைதமே பரமார்த்த ஸாரம். இதை நீ உணர வேண்டும் என்று கூறிச் சென்றார். நிதாகரும் இந்த போதனைகளால் நிலைத்த ஆத்மாத்வைதி ஆனார். எல்லா ஆத்மாக்களையும் தன்னைப் போலவே நினைத்தார். இப்படி பரப்ரஹ்மத்தைத் த்யானித்து முக்தியை அடைந்தார்.
இப்படி மேற்கண்ட ருபு, நிதாகர் கதையை ஸௌவீர தேசத்தரசனுக்குக் கூறி ஜடபரதர், "அரசரே, நீங்களும் நிதாகரைப் போல எந்த வேற்றுமைகளுமின்றி அனைத்து ஆத்மாக்களையும் அறிய வேண்டும். கர்மாக்களின் காரணமாகவே இப்படி பல வேறுபட்ட சரீரங்களில் ஆத்மாக்கள் இருக்கின்றன. முடிவாக இந்த உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் மஹாவிஷ்ணுவின் சரீரங்களே. இவையாவும் அழியக்கூடியவை (ச்யுதங்கள்), அவனொருவனே அழிவற்றவன் (அச்யுதன்). அவனே உயர்ந்தவன். நான், நீ என மற்ற அனைத்துமே அவன் சரீரமே. ஆகையால் பேதத்தை விட்டு, அத்வைதத்தைக் கைக்கொள்ளுங்கள்" என்றார். கபிலரிடம் உபதேசம் பெற எண்ணிய அரசனும், பேத ஞானத்தை விட்டு, பரமார்த்த ஞானம் கொண்டான்.
இந்த ப்ராஹ்மண பிறப்பிலேயே பரதரும் மோக்ஷம் பெற்றார். இந்த பரதரின் சரித்ரத்தை பக்தியுடன் சொல்பவர், கேட்பவர் அனைவரும் மோஹமின்றி ஆத்ம தத்வத்தை அறிவர். மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையும் அடைவார் என மைத்ரேயருக்குக் கூறி முடித்தார் பராசரர்.
Monday, January 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment