Monday, January 18, 2010

விஷ்ணு புராணம் - 39

03_01. "ஆசார்யரே! தாங்கள் பூமி, கடல், ஸூர்யன் முதலியவற்றின் அமைப்பையும், தேவ, ருஷி, நான்கு வர்ணங்கள், த்ருவ சரித்ரம் இவைகளையும் விவரமாகச் சொன்னீர்கள். இதைப்போலவே மன்வந்த்ரங்கள், அவற்றின் அதிகாரிகள், தேவர்கள் இவர்களைப் பற்றிக் கூற வேண்டும்" என்று மைத்ரேயர் கேட்கிறார். ஆயிரம் சதுர்யுகங்களைக் கொண்ட ப்ரஹ்மாவின் பகல் பொழுதை பதினான்கு மன்வந்த்ரங்களாகப் பிரித்தால் எழுபத்தொரு சதுர்யுகங்களும், இன்னும் கொஞ்ச காலமும் கிடைக்கும். இதுவரை ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ, உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷுஷ என ஆறு மன்வந்த்ரங்கள் முடிந்துள்ளன. இப்போது ஸூர்ய புத்ரனான வைவஸ்வதனின் மன்வந்த்ரம் நடந்து கொண்டிருக்கிறது.

கல்பத்தின் ஆதியிலிருந்த ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் விச்வபுக் என்பவன் இந்த்ரன். ப்ரியவ்ரதன், உத்தான பாதன் முதலானோர் ஸ்வாயம்புவனின் புத்ரர்கள். யாமர் முதலான பன்னிருவர் தேவர்கள். மரீசி முதலானோர் ரிஷிகள். இவையெல்லாம் முதல் அம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதான ஸ்வாரோசிஷத்தில் விபஸ்சித் என்பவன் இந்த்ரன். பாராவாரர், துஷிதர் என்று பன்னிரு தேவதைகள். ஸப்தரிஷிகள் ஊர்ஜஸ்தம்பன், ப்ராணன், தத்தன், அக்னி, ரிஷபன், நிஸ்வரன், சார்வரீவான் என்பவர்கள். சைத்ரன், கிம்புருஷன் முதலானோர் மனுவின் புதல்வர்கள். மூன்றாவதான் உத்தமனுக்கு அஜன், பரசுதிவ்யன் முதலானோர் புத்ரர்கள். ஸுசாந்தி இந்த்ரன். ஸுதாமாக்கள், ஸத்யர்கள், சிவர்கள், ப்ரதர்தனர்கள், வசவர்த்திகள் என்று பன்னிருவர் அடங்கிய ஐந்து கணங்கள். ஊர்ஜைக்கும், வஸிஷ்டருக்கும் பிறந்த ரஜஸ், காத்ரன், ஊர்த்வபாஹு, ஸவனன், அனகன், ஸுதபஸ், சுக்ரன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

நான்காவது மனுவான தாமஸனுக்கு ராஜாக்களான நரன், க்யாதி, தேது, ரூபன், ஜானு, ஜங்கன் முதலானோர் பிள்ளைகள். இந்த மன்வந்த்ரத்தில் சிபி சக்ரவர்த்தி நூறு அச்வமேதங்களைச் செய்து இந்த்ரனானான். இருபத்தேழு பேர் கொண்ட ஹரிகள், ஸத்யர்கள், ஸுதீக்கள் என்ற கணங்கள். ஜ்யோதிர்தாமா, ப்ருது, காவ்யன், சைத்ரன், அக்னி, தனகன், பீவரன் என்ற எழுவர் ஸப்தரிஷிகள். பலபந்து, ஸுஸம்பாவ்யன், ஸத்யகன் முதலான புதல்வர்களைப் பெற்ற ரைவதன் ஐந்தாவது மனு. இவனின் மன்வந்த்ரத்தில் விபு என்பவன் இந்த்ரன். பதினான்கு பேர்களைக் கொண்ட அமிதாபர்கள், பூதநயர்கள், வைகுண்டர்கள், ஸுஸமேதஸ்ஸுக்கள் என்ற தேவ கணங்கள். ஹிரண்யரோமன், வேதஸ்ரீ, ஊர்த்வபாஹு, அபரன், வேதபாஹு, ஸுதாமா, பர்ஜன்யன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

இந்த ஐந்து மனுக்களில் ஸ்வாயம்புவன், உத்தமன், தாமஸன், ரைவதன் ஆகியோர் ப்ரியவ்ரதனின் தவத்தாலும், மஹாவிஷ்ணுவின் அருளாலும் அவன் வம்சத்தில் பிறந்தவர்களே. இனி ஆறாவது மன்வந்த்ரம். ஊரு, பூரு, சதத்யும்னன் முதலான பிள்ளைகளைப் பெற்ற சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் மனோஜவன் என்பவன் தேவேந்த்ரன். எட்டு பேர்களைக் கொண்ட ஆப்யர், ப்ரஸூதர், பவ்யர், ப்ருதுகர், லேகர் என்ற ஐந்து கணங்கள். ஸுமேதஸ், விரஜஸ், ஹவிஷ்மான், உத்தமன், மது, அதிநாமா, ஸஹிஷ்ணு ஆகியோர் ஸப்தரிஷிகள்.

விவஸ்வான் எனும் ஸூர்யனின் புதல்வனான ச்ராத்த தேவனே இப்போது நடந்து கொண்டிருக்கும் ஏழாவது மன்வந்த்ரத்திற்கு அதிபதி. இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், க்ருஷன், வ்ருஷத்ரன் ஆகிய ஒன்பது பேர் இவனின் புதல்வர்கள். ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள் முதலானோர் தேவர்கள். புரந்தரன் தேவேந்த்ரன். வஸிஷ்டர், காச்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், விச்வாமித்ரர், பரத்வாஜர் ஆகியோர் ஸப்தரிஷிகள். முதலாவது ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் ருசி என்பவரிடம், ஆகூதியினிடம் விஷ்ணு மானஸ புத்ரனாய் யக்ஞம் என்ற பெயரில் பிறந்து மனு முதலான அனைவரையும் காத்தார். அவரே இரண்டாவது ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் துஷிதை என்பவளிடம் அஜிதன் என்ற பெயருடன் துஷிதர் என்ற தேவர்களுடன் பிறந்தார்.

மூன்றாவதான உத்தம மன்வந்த்ரத்தில் ஸத்யையிடம் ஸத்யன் என்ற பெயருடன் ஸத்யர்கள் என்ற தேவர்களுடன் பிறந்தார். தாமஸ மன்வந்த்ரத்தில் ஹர்யையிடம் ஹரி என்ற பெயருடன் ஹரி என்ற தேவர்களுடனும், ரைவதத்தில் ஸம்பூதி என்பவளிடம் மானஸபுத்ரனாய் தேவவரன் எனும் பெயருடன் மானஸர் என்ற தேவர்களுடனும், சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் விகுண்டையிடம் வைகுண்டன் என்ற பெயருடன் வைகுண்டர் என்ற தேவர்களுடனும் பிறந்தார். இவரே இந்த ஏழாவது வைவஸ்வத மன்வந்த்ரத்தில் காச்யப ப்ரஜாபதிக்கு அதிதியினிடம் வாமனனாய் அவதரித்தார். மஹாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, அவனை வென்று, அனுக்ரஹித்தார். எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு சக்தியே தேவதைகளாக, மனுக்களாக, ஸப்தரிஷிகளாக, மனு புத்ரர்களாக, தேவராஜனாக அனுக்ரஹிக்கிறது. இவர்களனைவரும் விஷ்ணுவின் சொத்துக்கள் போன்றவர்.

No comments:

Post a Comment