03_11. ஸகரன் "மஹரிஷி! ஸதாசாரத்தை எனக்குப் போதியுங்கள். ஆசாரங்களைக் கடைபிடிப்பவன் இங்கும், மேலுலகிலும் துன்பம் அடைவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே அதை எனக்கு அருளுங்கள்" என்று ஔர்வ மஹரிஷியிடம் கேட்கிறான். மஹரிஷி "ஆம், நீ கூறுவது உண்மையே. இரண்டு உலகையும் தரவல்லதே ஸதாசாரம். குற்றமற்ற ஸாதுக்களே ஸத்துக்கள். அவர்களுடைய ஒழுக்கமே ஸதாசாரம் ஆகும். இந்த ஆசாரத்தை ஸப்தரிஷிகளும், மனுக்களும், ப்ரஜாபதிகளும் உபதேசித்தும், அனுஷ்டித்தும் காண்பித்துள்ளார்கள். ஸூர்யோதயத்திற்கு முன் மூன்றாவது முஹூர்த்தமான ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் அறிவுடையவன் தூக்கத்தை விட்டு எழ வேண்டும். முஹூர்த்தம் என்பது இரண்டு நாழிகைகள் ஆகும். அதாவது விடிவதற்கு ஆறு நாழிகைக்கு முன். எழுந்ததும் தர்மத்தையும், அதன் வழியிலான அர்த்தத்தையும், இவையிரண்டிற்கும் முரண்படாத காமத்தையும் சிந்திக்க வேண்டும்.
பின் க்ராமத்தின் தென் மேற்கு (நிர்ருதி) திசையில் அம்பு பாயும் அளவு தூரம் சென்று மல, ஜலங்களைக் கழிக்க வேண்டும். தன் நிழல், மரத்தின் நிழல், பசு, ஸூர்யன், அக்னி, காற்று, ஆசார்யன், அந்தணன் இவர்களைப் பார்த்துக் கொண்டும், எதிரிலும் கழிக்கக் கூடாது. உழுத நிலத்திலும், பயிர்களுக்கு நடுவிலும், பசுக்கள் இருக்கும் இடத்திலும், மக்கள் கூட்டத்திலும், வழி, நதிக்கரை, நீர்நிலை, சுடுகாடு இவைகளில் கழிக்கக்கூடாது. சங்கடமில்லாத போது பகலிலும், இரவிலும் முறையே வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் கழிக்க வேண்டும். அப்போது பூணலை வலக்காதில் சுற்றிக்கொண்டு, அங்க வஸ்த்ரத்தால் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும். பூமியில் சருகுகளைப் பரப்பி அதன் மேலேயே கழிக்க வேண்டும்.
மௌனியாய் கழிக்க வேண்டும். கழித்த இடத்தில் அதிக நேரம் இருக்கக் கூடாது. அதன் பின் சுத்தமான மண்ணால் முன்புறம் ஒரு தடவையும், பின் புறம் மூன்று தடவையும், இடக்கையில் பத்து முறையும், பின் இரு கைகளிலுமாக ஏழு தடவையும் சுத்தம் செய்து கொண்டு, அதன் பின்னே ஜலத்தால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். புற்று மண், ம்ருகங்கள் தோண்டித் தள்ளின மண், தண்ணீருக்குள் இருக்கும் மண், சுத்தம்(சௌசம்) செய்து மீதமான மண், சுவரிலிருந்து எடுத்தது, பூச்சிகள் நிறைந்தது, கலப்பையால் தோண்டப்பட்டது இம்மாதிரியான மண்ணை உபயோகப்படுத்தக்கூடாது. வெறும் ஜலத்தால் மட்டும் சுத்தம் செய்து கொள்ளவும் கூடாது. உபயோகிக்கும் நீரும் தெளிந்ததாக, துர்நாற்றம், நுரை, குமிழிகள் இல்லாததாக இருக்க வேண்டும். இதன் பின் கால்களை மண்ணாலும், நீராலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின், வேறு நீர் நிலைக்கு வந்து மூன்று முறை ஆசமனம் செய்ய வேண்டும்.
பின் அகமர்ஷண ஸூக்தம் முதலானவைகளை ஜபித்து(பஞ்சாங்க) ஸ்னானம் செய்து, ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். பின் தலைமயிர்களை உலர்த்துதல், அலங்கரித்தல், கண்ணாடி பார்த்தல் முதலான மங்கள கார்யங்களைச் செய்ய வேண்டும். பணம், பொருளில்லாமல் யாகம் முதலானவைகளையும் செய்ய முடியாது. எனவே தனக்குரிய வழியில் பணத்தை ஈட்ட வேண்டும். இதன் பின் மத்யாஹ்ன ஸ்னானம் நதி, நதம், குளம், தேவதைகளாலுண்டாக்கப்ப்பட்ட நீர்நிலைகள், மலையருவி, இவையேதும் இல்லையேல் கிணறு இவற்றில் செய்ய வேண்டும். முடியவில்லையெனில் வென்னீரிலோ அல்லது மந்த்ர ஸ்னானமோ செய்யலாம். பின் சுத்த வஸ்த்ரங்களை அணிந்து கொண்டு தேவ, ரிஷி, பித்ரு தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும். அதன் பின் அனைத்துலகங்களிலுமுள்ள ஸகல ஜீவராசிகளின் பொருட்டும் காம்ய தர்ப்பணம் செய்து, மாத்யாஹ்னிகம் செய்து, க்ருஹத்திலிருக்கும் பூஜையை செய்ய வேண்டும்.
சுத்த ஜலத்தால் அபிஷேகித்து, ஆடை, ஆபரண, அலங்காரங்கள் செய்து, தூப தீபம் காண்பித்து, விதவிதமான அன்னங்களை நிவேதனம் செய்ய வேண்டும். இதன் பின் எல்லா இனத்தைச் சேர்ந்த பூதங்களுக்கும் பலி கொடுப்பதற்காக சமைத்த உணவு வகைகளைக் கொண்டு வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். அதன் பின் ஒரு மாடு பால் கறக்கும் நேரம் வரை வீட்டிலேயே பொறுத்திருந்து யாராவது அதிதிகள் வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வந்தால் வரவேற்று, ஆஸனம் தந்து, கால்களை அலம்பி விட்டு, அன்னமிட்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இனிதே பதிலுரைத்து, அவர் செல்லும் வரை கூட இருந்து த்ருப்தி உண்டாக்க வேண்டும்.
குலம், கோத்ரம் தெரியாதவனும், தரித்ரனாகவும், உறவற்றவனாகவும், சாப்பிடும் ஆசையில் இருப்பவனும், ஒரே இடத்தில் இல்லாதவனும், வேறொரு இடத்திலிருந்து வருபவனுமானவனே அதிதி. அவனை ப்ரஹ்மனைப் போல் பாவிக்க வேண்டும். இவனை விட்டுத் தான் மட்டும் உணவுண்பவன் நரகத்திற்குச் செல்கிறான். இதைத் தவிர நிதமும் ஒரு ப்ராஹ்மணனை நித்ய ச்ராத்தத்திற்காகச் சாப்பிடச் செய்ய வேண்டும். அவன் தன்னூரைச் சேர்ந்தவனாகவும், ஆசாரம், குலங்களில் தேர்ந்தவனாகவும், பஞ்சமஹா யக்ஞங்களைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். இதன் பின் அன்னத்தைக் கொஞ்சம் "ஹந்த" என்று சொல்லி எடுத்து வைத்து அதை வேதாத்யயனம் செய்திருக்கும் ப்ராஹ்மணனுக்குக் கொடுக்க வேண்டும். ப்ரஹ்மசாரிக்கும், ஸன்யாஸிக்கும் மூன்று கவளங்களுக்குக் குறையாமல் கொடுக்க வேண்டும்.
குலம் கோத்ரம் தெரியாதவர், வேதாத்யயனம் செய்து யக்ஞங்கள் செய்பவர், ப்ரஹ்மசாரி ஸன்யாஸிகள், வேதாத்யயனம் முதலான காரணங்களுக்காக யாத்ரை வருபவர் என அதிதிகள் இப்படி நான்கு வகையாவர். இவர்களுக்கு அளிக்கும் அன்னத்தை தாதா, ப்ரஹ்மா, இந்த்ரன், வஸுக்கள், அக்னி, ஸூர்யன் ஆகியோர் உண்கின்றனர். இவர்கள் உண்ட பின் கல்யாணம் ஆகி புகுந்த வீடு செல்லாமல் இங்கேயே இருப்பவள், கர்ப்பிணி, முதியோர், சிறுவர்கள் இவர்களை ருசிக்க சாப்பிடச்செய்து அதன் பிறகே தான் உண்ண வேண்டும். இப்படி நீராடி, ஜபித்து, வைச்வதேவம், பஞ்சமஹாயக்ஞங்கள் செய்து உண்பதாலேயே அன்னம் சுத்தியடைகிறது.
இப்படியில்லாமல் நீராடாமல் உண்பவன் மலத்தையும், ஜபம் செய்யாமல் உண்பவன் சீழ், ரத்தம் இவைகளையும், வைச்வதேவம் செய்யாமல் உண்பவன் மூத்ரத்தையும், குழந்தை முதலானோருக்கு முன் உண்பவன் ம்ருகங்களின் மலத்தையும், அதிதிகளுக்குக் கொடாமல் உண்பவன் க்ருமிகளையும், ஹோமம் செய்யாமல் உண்பவன் விஷத்தையும் உண்பதாக ஆகிறான். விதிகளின் படி உண்பவனுக்கு இம்மையில் ஆரோக்யமும், பலமும், பகைவரிடம் பயமின்மையும் கிடைக்கும். நல்ல வாசனைகளையும், புஷ்பங்களையும் தரித்து, கைகளில் ரத்னம் முதலியவைகளை அணிந்து கொண்டு உண்ண வேண்டும். ஒற்றைத் துணியோடு உண்ணக் கூடாது. ஈரமான கை, கால்களோடு உண்ணக் கூடாது. முகத்தை சுத்தம் செய்து கொண்டு, மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும்.
கிழக்கு, வடக்கு நோக்கி உண்ண வேண்டும். மூலையைப் பார்த்துக் கொண்டோ, கவலையோடோ உண்ணக்கூடாது. உணவு உயர்ந்ததாகவும், இதமாகவும் இருக்க வேண்டும். உணவை சுத்த நீரால் ப்ரோக்ஷித்து விட்டே உண்ண வேண்டும். அங்கஹீனர்கள், வ்யாதியஸ்தர்கள் முதலான அருவருக்கத் தக்கவர்கள் கொண்டுவரும் உணவையும், நன்கு சமைக்கப்படாததையும், ஆஸனங்களிலும், அசுத்தமான இடங்களிலும் வைத்துக் கொண்டும் உண்ணக்கூடாது. கோபதாபங்களின்றி சுவைத்து உண்ணும் நினைவுடன் உண்ண வேண்டும். நெருப்பில் பக்வம் செய்யாததைத் தவிர (பழம், கிழங்கு, பக்ஷணங்கள்) பழையதை உண்ணக்கூடாது. சத்தில்லாததை உண்ணக்கூடாதது. தேன், தண்ணீர், தயிர், நெய் இவை தவிர வேறெதையும் மீதமானால் உண்ணக்கூடாது.
முதலில் இனிப்பு, நடுவில் புளிப்பு, உப்பு, பின் கசப்பு, காரம் இப்படி உண்ண வேண்டும். முதலில் த்ரவம், பின் கடினம், பின் மறுபடி த்ரவம் என்று உண்ண வேண்டும். சாஸ்த்ரம் அனுமதிக்காதவற்றை உண்ணக்கூடாது. உண்ணும் போது பேசக் கூடாது. ப்ராண, அபாண, வ்யான, உதான, ஸமான என்ற ஐந்து ப்ராணன்களுக்காக முதல் ஐந்து பிடிகளை உண்ண வேண்டும். உத்ராபோசனத்திற்குப் பிறகு கைகளை முழங்கை வரை சுத்தம் செய்து, முகத்தையும், கால்களையும் அலம்பிக் கொண்டு, கிழக்கு அல்லது வடக்கு பார்த்து ஆஸனத்தில் அமர்ந்து சாந்தமாக, ஓய்வாக இஷ்ட தேவதைகளை த்யானிக்க வேண்டும்.
காற்றால் வளர்க்கப்பட்ட அக்னி, ஆகாசத்துடன் கூடிய (வயிறு முட்டாம சாப்பிட்டிருந்தால்)அன்னத்தை ஜரித்து, அதன் சாரத்தால் என் சரீரத்தைப் காத்து, வளர்த்து எனக்கு சுகத்தை உண்டாக்கட்டும். நான் உண்ட அன்னம் என் உடலிலுள்ள பூமி, ஜலம், அக்னி, காற்று ஆகிய பூதங்களுக்கு பலத்தைத் தந்து எனக்கு சுகத்தை உண்டாக்கட்டும். மேலும் ஐந்து ப்ராணன்களுக்கும் புஷ்டியைத் தந்து எனக்குக் குறைவற்ற சுகத்தை உண்டாக்கட்டும். வயிற்றில் இருக்கும் அக்னியும், வடவாக்னியும் அன்னத்தை ஜரிக்கச் செய்து அதன் வளர்ச்சியால் எனக்கு சுகத்தையும், ஆரோக்யத்தையும் உண்டாக்கட்டும். விஷ்ணு ஒருவனே இந்த்ரியங்களுக்கும், உடல்களுக்கும் ஆத்மா. முதற்பொருள் அவனே. கல்யாண குணங்களை உடையவன் அவனே. இந்த உண்மை நான் உண்ட உணவை ஜீர்ணமாக்கி, எனக்கு நலம் தரும் வகையில் பரிணாமத்தை அடையட்டும். உண்பவனும், உணவும், அதன் பரிணாமமும் விஷ்ணுவே என்ற உண்மையாலும் நான் உண்ட உணவு ஜீர்ணமாகட்டும்.
மேற்கண்ட பத்தியின் பொருளுள்ள ச்லோகம் மூலத்தில் உள்ளது. அந்த ஆறு ச்லோகங்களையும் சொல்லி தன் கையால் வயிற்றைத் தடவ வேண்டும். அதன் பின் உடலுக்கும் உள்ளத்துக்கும் தளர்ச்சியைத் தரும் வேலைகளைச் செய்யாமல், எளிய வேலைகளாகச் செய்து கொண்டு சிறிது நேரம் இருக்க வேண்டும். பின் ஸாயங்காலம் மீண்டும் ஸந்த்யையை ஸ்திரமாக உபாஸிக்க வேண்டும். காலையில் ஸூர்யன் உதிக்கும் முன்பும், மதியம் ஸூர்யன் உச்சியில் இருக்கும் போதும், மாலையில் அஸ்தமிக்கும் முன்னும் உபாஸிக்க வேண்டும். ப்ரஸவம், இறப்பு, சித்தப்ரமை, வ்யாதி, பயம் இவைகளால் பாதிப்பில்லாத காலங்களில் ஸந்த்யையுடன் ஸூர்ய உபஸ்தானத்தைத் தவறாமல் செய்யவேண்டும்.
ஸந்த்யா காலங்களில் தூங்கக்கூடாது. தவறினால் தகுந்த ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அதுவும் செய்யாதவர்கள் தாமிஸ்ர நரகத்தை நிச்சயம் அடைவர். ஸாயம் ஸந்த்யோபாஸனைக்குப் பின் மீண்டும் வைச்வதேவ பலிகளைப் பத்னியுடன் செய்து, அதிதி பூஜைகளைச் செய்து, பின் தான் சாப்பிட்டு, கை, கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு படுக்கைக்குச் செல்ல வேண்டும். பகலில் அதிதி பூஜை செய்யாததை விட இரவில் அதிதி பூஜை செய்யாதோருக்கு எட்டு மடங்கு அதிக பாபம் உண்டாகும். எனவே முடிந்த அளவு வரவேற்று, உபசரித்து, உணவு, நீர் தந்து, ஆஸனம், படுக்கை, படுக்க இடம் இவற்றைச் செய்ய வேண்டும்.
யானைத் தந்தத்தாலான கட்டிலில் படுத்துறங்குவது நன்று. இல்லாத போது விரிசல்கள், மேடு, பள்ளங்கள், அழுக்கு, பூச்சி, எறும்பு போன்ற குறைகள் இல்லாமல் ஒரு சிறந்த மரத்தால் ஆன கட்டிலில் மேல் விரிப்பு விரித்து கிழக்கிலோ, தெற்கிலோ தலை வைத்து படுக்க வேண்டும். மற்ற திசைகள் நோயைத் தரும். க்ருஹஸ்தன் ருது காலத்தில் (வீட்டு விலக்கு முடிந்து ஸ்னானம் செய்த நான்காம் நாளிலிருந்து பதினாறு நாட்கள்), ஆண் நக்ஷத்ரத்தில் (அச்வினி, க்ருத்திகை, ரோஹிணி, புனர்வஸு, புஷ்யம், ஹஸ்தம், அனுஷம், ச்ரவணம், பூரட்டாதி, உத்ரட்டாதி ஆகிய பத்து நக்ஷத்ரங்கள்), சுப காலத்தில், இரட்டைப்படை தினங்களில் மனைவியைச் சேர்வது சாலச் சிறந்தது.
அப்போதும் மனைவி அனுகூலமாகவும், நோயில்லாமலும், ரஜஸ்வலையாக(விலக்காக)இல்லாமலும், இருவரும் கோபம், அசௌகர்யம் முதலியன இல்லாமலும், கர்ப்பிணியாக இல்லாமலும், சக்தியோடும், வேறொருவரிடம் ஆசையின்றியும், தன்னிடம் ஆசையோடும், பசியில்லாமலும், அதிகமாக உணவுண்ணாமலும் இருக்க வேண்டும். (சரியாப் போச்சு, மாஸத்துக்கு ஓரிரு நாள் தான் தேறும், எல்லாமே அளவு தான் போல). நீராடி, மாலை, சந்தனம் முதலியவைகளை அணிந்து மகிழ்ச்சியோடு, மித ஆகாரம் உண்டு, ஆசையோடும், அன்போடும் மனைவியை (மட்டும்) சேர வேண்டும். சதுர்தசி, அஷ்டமி, அமாவாஸ்யை, பௌர்ணமி, மாஸப்பிறப்பு ஆகிய காலங்களை விலக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், மாம்ஸம் உண்டிருப்பதுவும் விலக்கவேண்டியவைகளே. இவைகளை மீறுபவன் விண்மூத்ர போஜனம் என்னும் நரகத்தை அடைவான். இப்படி விலக்கிய காலங்களில் இருவரும் ஆராதனைகளிலும், த்யானமும், ஜபமும், நல்ல பேச்சுக்களாலும் காலத்தைக் கழிக்க வேண்டியது. அடுத்தவர் மனைவியோடும், ம்ருகங்களோடும் சேரக்கூடாது. கோவில், ப்ராஹ்மணர்கள் மற்றும் ஆசார்யர்களின் இருப்பிடங்களில் சேரக்கூடாது. புண்ய தீர்த்தம், மாட்டுக்கொட்டில், ஜனங்கள் கூடுமிடம், சுடுகாடு இவைகளைச் சேர்ந்த நந்தவனங்கள், ஜலம், தரை இவைகளோடும், இந்த இடங்களிலும் சேரக்கூடாது. ஸந்த்யா காலங்கள், இயற்கை உபாதையோடு இருக்கும் போது (மல, ஜல விஸர்ஜனம் செய்யும் உணர்ச்சி தோன்றும் போது)சேரக்கூடாது. இவைகளை மனதாலும் மனதாலும் நினைக்கக் கூடாது. மிகுந்த பாபமும், கடும் நோயும், பழியும் இவற்றால் உண்டாகும். நரகத்திலும் உழன்று மீண்டும் புழுக்களாகப் பிறப்பர்.
Friday, January 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment