Tuesday, January 12, 2010

விஷ்ணு புராணம் - 36

02_14. தடியனாக இருந்து கொண்டு பல்லக்கை வேகமாகச் சுமக்கவில்லையே என்று கோபித்துத் தான் கேட்ட ஒரு சில கேள்விகளுக்கு ஆத்ம தத்வத்தையே முழுதாக விளக்கிய பரதரிடம் கால்களில் விழுந்து "முக்காலமுமறிந்த முனிவரே, ஆத்ம தத்வத்தின் உண்மை நிலையை விளக்கிய தங்கள் உபதேசங்களைக் கேட்டு என் மனம் மிக்கக் களிப்புற்று ஒரு நிலையில் நில்லாது வட்டமடிக்கிறது. அனைத்து ப்ராணிகளிடமுமிருக்கும் ஆத்மா முக்குண ப்ரக்ருதியிலிருந்தும் வேறானதென்பதையுணர்ந்தேன். "பல்லக்கு என் மீது இல்லை, நானும் பல்லக்கைச் சுமக்கவில்லை, உடல்தான் பல்லக்கைச் சுமக்கிறது, அதுவோ என்னை விட வேறானது, பஞ்ச பூதங்களாலானது, பஞ்ச பூதங்கள் முக்குணங்களால் ஏவப்படுகிறது, இந்த இயக்கமும் கர்மாவின் காரணமாயிருக்கிறது" இவைகளைக் கேட்ட போதே என் மனம் என் வசத்திலில்லை. இந்த பரமார்த்த விஷயத்தையே மேலும் கேட்கவும் விரும்புகிறேன்.

வேறு வேலையாகச் செல்லும் இவனுக்கு உபதேஸிக்கவேண்டாம் என நினைத்து விடாதீர்கள். கபில மஹரிஷியிடமும் இந்த ஸம்ஸாரத்தில் உயர்ந்ததெது என்பதை அறியவே சென்று கொண்டிருந்தேன். மஹாத்மா கபிலர் விஷ்ணுவின் அம்சமாக அஞ்ஞானத்தை இவ்வுலகில் அழிக்கவே அவதரித்திருக்கிறார். என் நல்வினைப் பயனாக அவரே தான் உங்களுருவில் என் முன்பு தோன்றியுள்ளார் என்று நினைக்கிறேன். அவரை விட இதைப் போன்ற தத்வங்களை விளக்குபவர்கள் யாருமில்லை என்றே நினைக்கிறேன். அளவில்லா ஆவல் இருப்பதால் நான் உபதேசத்திற்குத் தகுதியுடையவனே. தங்களிடம் பணிந்திருக்கும் இந்த அடியேனுக்கு உயர்ந்ததெது என்பதை உபதேசித்தருளுங்கள். பலவகை விஞ்ஞானங்களும் அலைபோல் இருக்கும் ஞானக்கடல் நீங்கள்" என ப்ரார்த்தித்தான்.

(இந்த புராண ப்ளாG வேலைல இப்பதான் ஒரு பிக்-அப்பே வருது. உலக உற்பத்தி, த்வீபங்கள், அதன் விசேஷங்கள், அளவுகள், இடங்கள்?நம்பணும், ஆனா ப்ரூப் பண்ண, மறுக்க, இங்க யாருக்கும் அறிவியல் ஞானம் போறாது, கண்ணுக்குத் தெரிஞ்சதுகள்லயே இன்னும் ஆராய்ச்சி முடியலை, முடிஞ்சாலும் பல, அதுவும் ஒண்ணுக்கொண்னு எதிரா தீர்வுகள், அனைத்துக்கும் ப்ரூப்புகள். இதத்தவிர ஒரு விஷயத்தில ஓரளவுக்குப் போனவனுக்கு இன்னொரு விஷயத்துல பூஜ்யம், உதாரணமா இப்ப வந்திருக்கற, வரப்போற வ்யாதிகள். ஜோஸ்யனும், விஞ்ஞானிகளும் பல விஷயங்கள்ல ஒண்ணு. ரெண்டு பேரும் தீர்மானமா பேசுவாங்க, எல்லாம் தெரிஞ்சு, தெளிஞ்சாச்சுன்னு முடிவு பண்ணிப்பாங்க. ரெண்டு பேர் சொன்னதலயும் சிலது நடக்கும், சிலது நடக்காது (நான் சொன்னதுலயே நடக்கும், அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் விஷயம் படிச்சவங்க. பின்ன நடக்காதா?) ரெண்டுல எது நடந்தாலும் விமர்சனமும், பரிசும் நிச்சயம். நடந்தா இவங்களுக்கு, நடக்கலேன்னா "நான் இதத்தான் அப்பயே சொன்னேன்ல" ன்னு இன்னொரு விஞ்ஞானியோ, ஜோஸ்யரோ வருவாரில்ல அவங்களுக்கு. இந்த புராண, இதிஹாஸங்கள்ல இதுதான் ஸ்வாரஸ்யமே. ஒரே பராசரர் (அவருக்கு சொன்னவர்கள், தொகுத்த வ்யாஸர், பல பேர்) கணக்கு, புவியியல், அறிவியல், அணு, மெய்ஞ்ஞானம், கதை, மொழியியல் ன்னு இது வரைக்குமே இவருக்கு எத்தனை முகங்கள். நமக்கு ஒண்ணுல கொஞ்சம் தெரிஞ்சுக்கவே விஷயம் தெரிஞ்ச மெரிட்ல, புரிஞ்சு படிச்ச வாத்யார், இடம், பணம் (அதச் சொல்லு) இதெல்லாம் கிடைக்க கஷ்டம், பின்ன நாமளும், நண்பர்களோட அனுபவிச்சு, ஆர்வமா படிக்கனும். கண்ண கட்டும்!! இங்க என்னடான்னா, ஒண்ணும் சொல்ல முடியல. ஜட ப்ரதர், அதான் பரதர்டயே போலாம் திரும்பி. ஏதோ கேள்வி கேட்டதுக்கு பல, பலான விஷயங்களை விளக்கினவர். இப்ப ராஜா விருப்பத்தோட, இதான் படிக்கப் போற விஷயம்னு தெரிஞ்சு கேட்கறார். விடுவாரா இனிமே)

ஜடபரதர் "அரசே! ச்ரேயஸ் (உயர்ந்தது) எதுன்னு தெரிஞ்சுக்கனுமா, பரமார்த்தத்தைத் (உண்மைப் பொருள்) தெரிஞ்சுக்கனுமா. ரெண்டும் ஒன்றல்ல, வெவ்வேறு. உயர்ந்ததெல்லாம் உண்மைப் பொருளல்ல. உயர்ந்தவைகளும் பலவகைல இருக்கு. ஒருத்தனுக்கு பணம் ச்ரேயஸ், இன்னொருவனுக்கு மக்கட்பேறு ச்ரேயஸ். இன்னொருவனுக்கு ராஜ்யம், ஸ்வர்க்கம், பலன் கருதாது யாகங்களைச் செய்பவனுக்கு கர்மாக்களே ச்ரேயஸ். ஆத்ம த்யானம் செய்பவனுக்கு அதுவே ச்ரேயஸ். ஜீவாத்மாவுக்கும், பரமாத்வாவுக்கும் ஏற்படும் ஐக்யம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. முக்யமான ஏழை மட்டும் இங்கு கூறியிருக்கிறேன். ஆனால் இவையெதுவுமே பரமார்த்தம் இல்லை.

பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது பரமார்த்தமாயின் பணத்தை அடைந்தபின் வேறெதையும் விரும்பக்கூடாது. ஒன்றால் பெறத்தக்கதாகவும், ஒன்றைப் பெறப் பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பது பரமார்த்தத்தின் இலக்கணமன்று. நாமோ பணத்தைச் செலவிடுகிறோம். அதைக் கொண்டு தர்மார்த்தங்களைப் பெற முயற்சிக்கிறோம். இந்த இலக்கணப்படி இருப்பது ஆத்மா ஒன்று தான். இதைக் கொடுத்து அடையத்தக்கதாக வேறொன்றுமில்லை. பிள்ளைகளும் அவன் தகப்பனுக்கே பரமார்த்தம், அவனுக்கு அவன் பிள்ளைகளே பரமார்த்தம், இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருப்பதால் அதுவும் பரமார்த்தமில்லை. பொதுவாக இருப்பதே பரமார்த்தம்.

கார்யங்களனைத்தும் தத்தம் காரணங்களுக்கே பரமார்த்தமேயன்றி அனைத்திற்கும் பரமார்த்தமாகாது. ராஜ்யங்கள் நிலையற்றவை, எனவே அதுவும் பரமார்த்தமன்று. மூன்று வேத விதிகளின் படி அழியும் பொருள்களான ஸமித், நெய், தர்ப்பங்களைக் கொண்டு செய்யும் யாகக் கர்மாக்களும் பரமார்த்தமன்று. மண்பாண்டம் ஒருநாள் மண்ணாவது போல் இந்த யாகாதிகளும் ஞானிகளுக்கு நிலையற்றது. பலன் கருதாத கர்மாக்களும் மோக்ஷத்தையளிப்பதால் பரமார்த்தமாகாது. பரமார்த்தப் பொருள் பேதமற்றது. ஆத்ம த்யானம் உலகப் பொருள்களிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டித் தானும் வேறாக இருப்பது. எனவே அதுவும் பரமார்த்தமல்ல. மேலும் ஆரம்பத்தில் கொஞ்சம் தெளிவும் (விசதம்), பின் அதிகமான தெளிவும் (விசததரம்) என்று தன்னில் தானே மாறுதலை அடைகிறது த்யானம். அது இடைவிடாத நினைவுகளின் கோப்பே. ஒவ்வொரு க்ஷணத்திலும் பரிணமிக்கும் அது. எனவே அதுவும் பரமார்த்தமன்று.

ஜீவ, பரமாத்மாக்களின் கடைசி சேர்க்கை, அதன் ஐக்யம் உலகில் ஒவ்வாதது. வெவ்வேறான தன்மைகளைக் கொண்ட இரு பொருள்கள் ஒன்றாக சேர்வதும், மற்றொன்றாகவே ஆவதும் உண்மைக்கு ஒவ்வாது. எனவே அதுவும் பரமார்த்தமல்ல. அந்த நிலையும் அபரமார்த்தமே. எனவே இந்த ஏழும், இன்னும் பலவும் ச்ரேயஸ்ஸுக்களேயன்றி பரமார்த்தங்கள் ஆகாது. இனி சுருக்கமாகப் பரமார்த்த வஸ்துவைக் கூறுகிறேன், கேள்" என்றார்.

ஆத்மவஸ்து அவயவங்களின் சேர்க்கையாலுண்டான உடலைப் போலில்லாமல் தனிப்பொருளாய் இருப்பது. தீபம் தன் ஒளியால் இடங்களில் பரவுவது போல இந்த ஆத்மாவும் தன் குணமான ஞானத்தால் பரவுகிறது. பல வகை சரீரங்களில் இருந்தாலும் அவைகளால் எந்த மாறுதலும் அடையாதது. குற்றமில்லாதது, முக்குணங்களற்றது. அதைவிட வேறானது. பிறப்பு, வளர்ச்சி, அழிவுகளற்றது. அறிவுள்ளது. நிறைந்தது. ஞான மயமானது. இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவே தேவ, மனுஷ்ய, மற்ற ஜீவராசிகளில் இருக்கிறது. இதுவே பரமார்த்தம். இதை விட்டு இந்த வஸ்துவிற்கு தன்மைகளை ஏற்றி, அதைப் பலவாறு நினைப்பவர் உண்மையான ஞானம் இல்லாதவரே.

புல்லாங்குழலில் புகும் காற்றுகளில் வித்யாஸமே இல்லை. ஆனால் அவை பல சந்துகளில் நுழைந்து வெளிப்படும் போது ஷட்ஜம் முதலான பெயர்களை அடைகின்றன. அதே போல்தான் ஆத்மாவும் கர்ம வினைகளால் தேவன், மனிதன் என்ற வ்யவஹாரங்களை அடைகிறது. இந்த கர்ம வினைகள் அழிந்ததும், வ்யவஹாரங்களும் அழிகின்றன. ஆக பரமார்த்தமாயிருப்பது ஆத்ம வஸ்து ஒன்றே என்று ஸௌவீரனுக்குக் கூறுகிறார் பரதர்.

No comments:

Post a Comment