Wednesday, January 27, 2010

விஷ்ணு புராணம் - 52

03_14. ச்ரத்தையுடன் செய்யப்படுவதே ச்ராத்தம். இதனால் ப்ரஹ்மா முதல் அனைத்து தேவர்களும், பித்ருக்களும், ம்ருகங்களும், பறவை முதலான அனைத்து ஜீவராசிகளும், அனைத்து பூதங்களும் மகிழ்கின்றன. எனவே க்ருஷ்ண பக்ஷத்திலும், அமாவாஸ்யை, அஷ்டகைகளிலும் ச்ராத்தம் செய்ய வேண்டும். ச்ராத்தத்திற்கு உரிய பொருளோ, ப்ராஹ்மணனோ கிடைக்கும் போதும், வ்யதீபாதம், அயனம், விஷுவம், க்ரஹணங்கள், பனிரெண்டு ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் காலம், நக்ஷத்ரங்கள் மற்றும் க்ரஹங்களுக்குப் பீடை ஏற்படும் காலம், துர் ஸ்வப்னம், புதிய தான்யங்கள் வரும் காலம் இவைகளில் காம்ய ச்ராத்தத்தைச் செய்யலாம்.

அனுஷம், விசாகம், ஸ்வாதீ நக்ஷத்ரங்களில் அமாவாஸ்யை கூடி வரும் காலங்களில் செய்யும் ச்ராத்தத்தால் பித்ருக்கள் எட்டு வருஷங்கள் நிலைத்திருக்கும் த்ருப்தியையும், திருவாதிரை, புனர்வஸு, புஷ்ய நக்ஷத்ரங்களில் அமாவாஸ்யை வந்திருக்கும் போது செய்தால் பனிரெண்டு வருஷங்கள் நிலைத்திருக்கும் த்ருப்தியையும் பெறுகின்றனர். அவிட்டம், சதயம், பூரட்டாதிகளில் அமாவாஸ்யை வந்திருந்தால் அன்று செய்யும் ச்ராத்தம் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கூடி த்ருப்தி அளிக்கக்கூடியது. வைகாசி மாஸ சுக்ல பக்ஷ த்ருதீயை, கார்த்திகை சுக்ல பக்ஷ நவமி, புரட்டாசி க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி, மாக மாஸ அமாவாஸ்யை இன்னான்கு திதிகளும் யுகாதிகள். யுகாதிகளிலும், க்ரஹணங்களிலும், மூன்று அஷ்டகைகளிலும், அயனங்களிலும் எள்ளுடன் கலந்த தீர்த்தத்தை பித்ருக்களுக்காக விடுபவன் ஆயிரம் வருஷங்கள் ச்ராத்தங்கள் செய்த பலனைப் பெறுகிறான்.

மாசி அமாவாஸ்யை சதயத்தில் வந்தால் அது பித்ருக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும். அவிட்டத்தில் வந்தால் அப்போது அன்ன, தீர்த்தத்தைப் பித்ருக்களுக்குத் தர வேண்டும். இது பத்தாயிரம் வருஷ பித்ரு த்ருப்தியைத் தரும். பூரட்டாதியில் வரும் மாசி மாஸ அமாவாஸ்யையில் ச்ராத்தம் செய்தால் பித்ருக்கள் ஆயிரம் யுகங்கள் வரை கவலையின்றி தூங்குகிறார்கள். கங்கை, சதத்ரூ, யமுனை, வ்யாஸை, ஸரஸ்வதீ, நைமிசாரண்யத்திலுள்ள கோமதீ தீர்த்தங்களில் நீராடி, பித்ரு பூஜை செய்வது ஸகல பாபங்களையும் போக்கும். நாம் எப்போது புரட்டாசி க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி, மாசி அமாவாஸ்யையில் புத்ரர் தரும் தர்ப்பண தீர்த்தத்தைப் பெறுவோம் என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பித்ருபக்தியில் சிறந்த புரூரவஸிடம் ஸனத்குமாரர் கூறிய பித்ரு கீதை: ஒருவனுக்கு சுத்தமான மனமும், நல்வழியில் ஈட்டிய பணமும், சிறந்த காலமும், சாஸ்த்ர விதிகளும், ஸத்பாத்ரமும், பக்தியும் கூடிவருமோ அவை அவன் விரும்புவதை நிறைவேற்றும். நம் குலத்துதித்த புத்திமானான புண்யன் செல்வ நிலைக்குத் தகுந்தாற்போல் கபடமின்றி நமக்குத் தவறாமல் ச்ராத்தம் செய்ய வேண்டும். வசதி மிகுந்தவன் வஸ்த்ர, போஜன, தங்கம், வெள்ளி, ரத்னங்கள், வாகனங்கள் எனக் கொடுத்தும், வசதியில்லாதவன் உணவளித்தும், அதுவும் இல்லையேல் ஆமத்தையும் (பாகம் செய்யாத தான்யங்கள்), அதற்கும் வழியில்லையேல் தக்ஷிணையோ, கடைசியில் கொஞ்சம் எள்ளையோ ப்ராஹ்மணர்களுக்குத் தரவேண்டும்.

இதற்கும் வழியில்லையேல் ஏழெட்டு எள்ளுடன் கூடிய தீர்த்தத்தையாவது பூமியில் விட வேண்டும். இதற்கும் கீழ் ச்ரத்தையோடு ஒரு வேளை பசுக்களுக்கு த்ருப்தி அளிக்கும் வரை புல் முதலானவைகளைக் கொடுக்க வேண்டும். இதுவும் முடியாவிடில் காட்டில் போய் கைகளை உயரத் தூக்கிக் கொண்டு ஸூர்யன் முதலான லோக பாலர்களைப் பார்த்துக் கொண்டு "என்னிடம் ச்ராத்தம் செய்ய பொருள் இல்லை. பித்ருக்களை வணங்குகிறேன். என் பக்தியால் பித்ருக்கள் த்ருப்தியடைய வேண்டும். என் கைகளை வாயு மார்க்கத்தில் உயரத் தூக்கியுள்ளேன்" எனக் கதற வேண்டும். இப்படி சக்திக்கேற்ப ச்ராத்தம் செய்பவன் நம் குலத்தில் பிறக்க வேண்டும் என்று பித்ருக்கள் கூறுகிறார்கள் என்று ஸனத்குமாரர் புரூரவஸுக்குக் கூறியதாக ஸகரனுக்கு ஔர்வர் கூறுகிறார்.

No comments:

Post a Comment