Monday, February 1, 2010

விஷ்ணு புராணம் - 63

04_07. புரூரவஸ்ஸுக்கு ஆயுஸ், அமாவஸு, விச்வாவஸு, ச்ருதாயுஸ், சதாயுஸ், அயுதாயுஸ் என்று ஆறு பிள்ளைகள். அமாவஸுக்குப் பீமனும், அவனுக்குக் காஞ்சனனும், அவனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஜஹ்னுவும் பிறந்தனர். இந்த ஜஹ்னு மஹாராஜன் ஒரு ஸமயம் தன் யாகசாலையை முழுதும் மூழ்கடித்து விட்ட கங்கையைக் கோபத்தால் குடித்து விட்டார். பகீரதனும், மற்ற தேவர்களும், ரிஷிகளும் வேண்டிக்கொள்ளவே மீண்டும் மனமிரங்கித் தன் காதின் வழியாகக் கங்கையை வெளியே விட்டார். இப்படி ஜஹ்னுவிற்குப் பெண்ணானதால் கங்கைக்கு ஜாஹ்னவீ என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த ஜஹ்னுவின் வம்சம் ஸுமந்து, அஜகன், பலாகாச்வன், குசன் என வளர்ந்தது. குசனுக்கு குசாம்பன், குசநாபன், அதூர்த்தரஜஸ், வஸு என்று நான்கு பிள்ளைகள். இதில் குசாம்பன் இந்த்ரனுக்கொப்பான மகன் வேண்டும் என்று கடும் தவமிருந்தான். இவன் தவத்தால் பயந்த இந்த்ரன் தானே இவனுக்குக் காதி (கௌசிகன்) என்ற பெயரில் மகனாய்ப் பிறந்தான். இவனுக்குப் பிறந்த பெண்ணான ஸத்யவதியைத் தனக்கு மணம் முடித்து தரும்படி ப்ருகு மஹரிஷியின் புத்ரர் ரிசீகர் வேண்டினார். ஆனால் முதுமையும், கோபமும் மிகுந்த அந்த ப்ராஹ்மணருக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத காதி கன்யா சுல்கமாக ஒரு காது கறுத்தும், உடலெங்கும் வெளுத்தும் இருக்கிற காற்றை விட வேகமுடைய ஆயிரம் குதிரைகளைத் தந்தால் நீங்கள் இவளை அடையலாம் என்றார்.

ஆனால் ரிசீகர் வருணனிடம் சென்று அச்வதீர்த்தத்தில் தோன்றிய அத்தகைய குணங்களுடைய ஆயிரம் குதிரைகளைப் பெற்றுக் கொண்டு வந்து காதியிடம் விட்டார். ஸத்யவதியையும் மணந்தார். சென்று விட்டார் அவளுடன் காட்டிலிருக்கும் தன் ஆச்ரமத்திற்கு. ஸத்புத்ரனை வேண்டி மந்த்ரங்களின் வீர்யத்துடன் கூடிய ஒரு வகையான அன்னத்தை(சரு) தன் மனைவி ஸத்யவதிக்காக உண்டாக்கினார் ரிசீகர். இதையறிந்த ஸத்யவதியின் தாய் தனக்கும் அம்மாதிரி செய்து தரச்சொல்லி புத்ரியிடம் கூறினாள். மனைவியின் வேண்டுகோளின்படி க்ஷத்ரிய தேஜஸ்ஸுடன் கூடிய மற்றொரு சருவைத் தன் மாமியாருக்காகச் செய்தார். இதை உன் தாயிடம் கொடுத்து சாப்பிடச் சொல், இதை நீ சாப்பிடு என்று இரண்டையும் தன் மனைவியிடம் கொடுத்து விட்டு கானகம் சென்றார் ரிசீகர்.

ஆனால் ஸத்யவதியின் தாய் "மகளே, உலகில் தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு இருக்கும் வீர்யத்தை வேறெவர்க்கும் விரும்ப மாட்டார்கள் எவரும். எனவே உனக்குத் தந்திருக்கும் சருவில் நிச்சயமாக உன் கணவர் சிறப்புக்களைச் சேர்த்திருப்பார். உன் தம்பியோ பூமண்டலத்தை ஆள வேண்டியவன். உன் மகனோ ப்ராஹ்மணன். அவனுக்குச் சிறப்பாக அவ்வளவு ஸாமர்த்யங்கள் தேவையிராது. எனவே சிறந்த சக்திகளங்கிய உன் சருவையும், என்னுடைய இந்த சருவையும் நாம் மாற்றிக் கொள்ளலாம்" என்று மகளிடம் கூறினாள். அவளும் அப்படியே தாயின் சொற்படி சருவை மாற்றிக் கொண்டாள். சருவை இருவரும் சாப்பிட்டனர். இருவரும் கருவுற்றனர்.

சில காலம் சென்று ஆச்ரமம் திரும்பிய ரிசீகர் தன் மனைவியை உற்று நோக்கினார். "பாபியே! செய்யத் தகாததைச் செய்து விட்டாய். உன் தாயின் சருவை மாற்றி நீ உபயோகித்திருப்பதாலேயே இது நடந்துள்ளது. உன் தாயின் சருவில் க்ஷத்ரிய தேஜஸ்க்குரிய ஐச்வர்யம், வீர்யம் முதலியவைகளையும், உன்னுடையதில் ப்ரஹ்மதேஜஸ்க்குரிய சாந்தி, ஞானம், பொறுமை முதலான வீர்யங்களையும் மந்த்ரங்களால் ஏற்றியிருந்தேன். எனவே உங்களிருவருக்கும் நீங்கள் உண்ட சருக்களின் குணங்களுடனேயே குழந்தைகள் மாறிப் பிறக்கப் போகின்றன" என்றார்.

இதைக் கேட்டதும் கலங்கிய ஸத்யவதி ரிசிகரின் பாதங்களில் விழுந்து, "ஸ்வாமி! அறியாமையால் நான் செய்த தவறை மன்னியுங்கள். ப்ராஹ்மண குலத்தில் வாழ்க்கைப்பட்ட எனக்கு இப்படித் தகாத வகையில் க்ஷத்ரிய குணங்கள் கொண்ட புத்ரன் வேண்டாம். என் புத்ரனுடைய புத்ரனுக்கு வேண்டுமானால் இந்தச் சருவின் குணத்தைக் கொடுத்து எனக்கு அருள் புரியுங்கள்" என்று வேண்டிக் கொண்டாள். ரிசிகரும் அருள் கூர்ந்தார். ஸத்யவதி ஜமதக்னியைப் பெற்று, நாளடைவில் கௌசிகீ என்ற நதியாக மாறி விட்டாள். ஸத்யவதியின் தாய் விச்வாமித்ரரைப் பெற்றாள். ஜமதக்னிக்கும், இக்ஷ்வாகு குலத்தில் உதித்த ரேணுகைக்கும் அரச குலங்களை அழித்த பரசுராமர் பிறந்தார் (ஸத்யவதியின் வரம் இது). விச்வாமித்ரர் ப்ரஹ்மரிஷியானார்.

ஜமதக்னியின் ஸஹோதரனென்பதால் தேவர்கள் விச்வாமித்ரருக்கு ப்ருகு வம்சத்தைச் சேர்ந்த சுநச்சேபன் என்பவனை புத்ரனாக முறைப்படிக் கொடுத்தனர். அவன் தேவராதன் எனப் பெயர் பெற்றான். இவனைத் தவிர விச்வாமித்ரருக்கு மதுச்சந்தன், தனஞ்ஜயன், க்ருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிதன் என்ற ஆறு புத்ரர்களும் உண்டாயினர். இவர்களால் அனேக கௌசிக கோத்ரங்கள் உண்டாயின. இப்படி இந்தக் கௌசிக கோத்ரங்களில் வெவ்வேறு முன்னோர்களைக் கொண்டவர்கள் தங்களுக்குள் விவாஹம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment