05_20. வழியில் சென்று கொண்டிருந்த ராம, க்ருஷ்ணர்கள் எதிரில் கையில் சந்தனக் கிண்ணங்களுடன், கூன் விழுந்த ஒரு இளம்பெண்ணைக் கண்டார்கள். கண்ணன் அவளிடம் "அழகிய பெண்ணே! யாருக்காக இந்த சந்தனங்களை எடுத்துச் செல்கிறாய். உண்மையாகக் கூறு" என்றான். அவன் வசீகரமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய அந்தக் கூனி "அன்பானவரே! உங்களுக்குத் தெரியாதா. த்ரிவக்ரா எனும் நான் கம்ஸனுக்குப் பணிவிடை செய்பவள். கூன் விழுந்துள்ளதால் இந்த வேலைக்குப் பணிக்கப்பட்டுள்ளேன். சந்தனக் கலவையில் நான் வல்லவள். என்னைத் தவிர வேறெவர் தரும் சந்தனத்தையும் அரசர் விரும்பமாட்டார். எனவே அவரது அன்பிற்குப் பாத்திரமானவள் நான்" என்றாள்.
"அழகிய முகம் படைத்தவளே! அரசர்கள் பூசிக் கொள்ளும் வாசனை பொருந்திய இந்த சந்தனத்தை எங்களுக்கு உடலெங்கும் பூசிக் கொள்ளத் தேவையான அளவு தா" என்று க்ருஷ்ணன் அவளிடம் கேட்டான். அவள் இவர்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று வெவ்வேறு சந்தனங்களைக் கொடுத்தாள். அவைகளையெல்லாம் செயற்கை மணம் சேர்த்தது இது, வாசனை இல்லாதது இது, எங்களுக்குத் தகுந்தது அல்ல இது என்று பல காரணங்களைக் கூறி அவளை ஆச்சர்யப்படுத்திய கண்ணன் மீண்டும் அவளிடம் வெண்ணிறத்திலும், கரு நிறத்திலும் இருக்கும் தங்களுக்குத் தகுந்த சந்தனத்தைத் தருமாறு யாசித்தான். எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி, அவளும் பெரு மகிழ்வோடு உயர்ந்த ரக சந்தனங்களை எடுத்து அவர்கள் உடலெங்கும் பூசிக் கொள்ளும் அளவிற்குத் தந்தாள்.
சந்தனங்களை உடலெங்கும் பூசிக் கொண்டு வெண் நிறத்திலும், கரு நிறத்திலும் இருக்கும் மேகங்கள் போன்றும், இந்த்ர தனுஸ் போன்றும் விளங்கினர் இருவரும். இதற்கு ப்ரதியாக க்ருஷ்ணன் அவள் கால்களைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, தன் கட்டை விரல், மேலும் இரு விரல்களால் அவள் தாடையைப் பிடித்து அவளை நிமிர்த்தினான். அவன் திருவருளால் கூன் நிமிரப் பெற்ற அவள் மேலும் அழகு பெற்று விளங்கினாள். நன்றியும், ஆசையும் கொண்ட உடனே அவள் க்ருஷ்ணனின் துணிகளைப் பற்றி இழுத்து அவனைத் தன் இல்லத்திற்கு வருமாறு அழைத்தாள். அண்ணாவை வெட்கத்தோடு நோக்கிய கண்ணன் அவளிடம் இன்னொரு ஸமயம் நிச்சயம் வருவதாக புன்சிரிப்போடு கூறி அவளை அனுப்பி விட்டு, மீண்டும் அண்ணாவின் முகத்தைப் பார்த்து உரக்கச் சிரித்துக் கொண்டான்.
இதன் பின் வில்லிருக்கும் அலங்காரமான சபையை அடைந்த அவர்கள் அங்கிருந்த காவலாளியிடம் எந்த வில்லை முயற்சிக்க வேண்டும் என்று விசாரித்தறிந்தார்கள். க்ருஷ்ணன் அதைக் லாவகமாகக் கையிலெடுத்து நாண் ஏற்றிய போது அது மதுரையே அதிர பெரும் சப்தத்துடன் இரண்டாக முறிந்து விழுந்து விட்டது. இதனால் கோபம் கொண்டு தங்களுடன் சண்டை போட வந்த காவலாளிகள் அனைவரையும் இந்த இருவரும் கொன்று போட்டு விட்டு சபையை விட்டு வெளியேறினர். அக்ரூரர் வந்து விட்டதையும், வில் ஒடிந்து விழுந்த செய்தியையும் கேட்டு குழந்தைகளின் வரவை நிச்சயித்துக் கொண்ட கம்ஸன் உடனே சாணூரனையும், முஷ்டிகனையும் அழைத்தான்.
அவர்களிடம் "என்னைக் கொல்வதற்காகவே இரு இடைச் சிறுவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களை நீங்களிருவரும் நடக்கவிருக்கும் மல்யுத்தப் போட்டியில் ந்யாயமாகவோ அல்லது அன்யாயமாகவோ கொன்று வீழ்த்தி விட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நீங்கள் விரும்பும் எதையும் நான் உங்களுக்குத் தருவேன். அவர்கள் அழிந்து விட்டால் அதன் பின் நீங்கள் என்னோடு கூடி இந்த ராஜ்யத்தையே அனுபவிக்கலாம், இது நிச்சயம்" என்று கட்டளையிட்டு விட்டு, அதன் பின் நீர் கொண்ட மேகம் போல் இருக்கும் குவலயாபீடம் என்ற தனது யானையைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாகனை அழைத்து அந்த யானையை மைதானத்தின் வாசலில் நிறுத்துமாறும், ராம க்ருஷ்ணர்கள் மைதானத்துள் நுழையும் போது அந்த யானையை ஏவி விட்டு அவர்களிருவரையும் கொன்று விடுமாறும் கட்டளைகளைப் பிறப்பித்தான்.
அதன் பின் மைதானத்தில் ஆஸனங்கள் அமைப்பைச் சரிபார்த்து விட்டு, ஸூர்யோதயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் தன் இறுதிக் காலம் நெருங்குவதை அறியாத கம்ஸன். பொழுது புலர்ந்தது. மைதானத்தில் மக்கள் நிறைந்தனர். மக்களும், இளவரசர்களும், மந்த்ரிகளும், மல்யுத்த பரிக்ஷைக்கான அதிகாரிகளும், அரண்மனைப் பெண்களும், அந்தப்புரத்துப் பெண்களும், நகரத்துப் பெண்களும், வெளியூரிலிருந்து வந்திருப்பவர்களும் இப்படிப் பலரும் அவரவர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில் அவரவர்களுக்குரிய ஆஸனங்களில் அமர்ந்தனர். பரிக்ஷாதிகாரிகளுக்கு அருகிலேயே உயர்ந்த ஒரு ஆஸனத்தில் கம்ஸன் அமர்ந்திருந்தான். நந்தனும், மற்ற கோபர்களும் அவர்களுக்கான இடத்தில் அமர்ந்தனர். அதன் கடைசியில் அக்ரூரரும், வஸுதேவரும் அமர்ந்து கொண்டனர்.
நகரத்தார்களின் மனைவிகளோடு, பிறந்ததிலிருந்தே தன் குழந்தையைத் தொலைத்துத் தவித்திருக்கும் தேவகியும், இறுதிக் காலத்திலாவது அதன் அழகு முகத்தைக் கண்டு விடவேண்டும் என்று துக்கத்தோடும், ஆசையோடும் அமர்ந்திருந்தாள். வாத்யங்கள் முழங்கின. சாணூரன் குதித்து எழுந்தான். முஷ்டிகனும் தன் தோள்களைத் தட்டிக் கொண்டு வந்தான். மக்களின் பெரும் ஆரவாரம் எழுந்தது. அப்போது இரு இளம் சிங்கங்களைப் போல் ராம, க்ருஷ்ணர்கள் அங்கே ம்ருகங்களுக்கு மத்தியில் உலவுவது போல், சிரித்துக் கொண்டே நுழைந்தனர். அப்போது அவர்களை நோக்கி வேகமாக குவலயாபீடம் பாகனால் ஏவப்பட்டு ஓடி வந்தது. இதைக் கண்டதும் பார்வையாளர்கள் பெரும் கூக்குரலிட்டனர்.
பலராமன் உடனே அதைக் கொன்று விடக் கூற, கண்ணன் அதன் தும்பிக்கையைப் பற்றி அதை பெரும் சப்தத்துடன் சுற்றினான். பின் அதனிடம் அகப்படாமல் அதன் தந்தங்களுக்கு நடுவில் சிறிது விளையாடினான். பின் அதன் இடது பக்க தந்தத்தை க்ருஷ்ணனும், வலது பக்க தந்தத்தை பலராமனும் பறித்தார்கள். அதனாலேயே அவர்கள் அதன் பாகர்களை அடித்துக் கொன்றார்கள். பிறகு பலராமன் உயர எழும்பி தன் இடக்காலால் குவலயாபீடத்தின் தலையில் ஒரு உதை விட்டான். அதைத் தாங்கவொண்ணாத அந்தப் பெரும் யானை இந்த்ரனால் வீழ்த்தப்பட்ட மலையைப் போல் விழுந்து இறந்தது. இதைக் கண்ட பார்வையாளர்கள் ஹா, ஹா என்று ஆரவாரம் செய்தனர். ராம, க்ருஷ்ணர்களின் மேனியெங்கும் அந்த மதயானையின் மதஜலமும், ரத்தமும் பூசியிருந்தது. அதன் தந்தங்களையே தங்களுக்கு சிறந்த ஆயுதமாகக் கொண்டு விளங்கினர் இருவரும்.
பார்வையாளர்கள் "இவர்கள் தான் அவர்கள், இது க்ருஷ்ணன், அது பலராமன். இவனால் தான் அந்த கொடும் ராத்திரி பிசாசு பூதனை கொல்லப்பட்டாள். இவர்களால் தான் அந்த சகடாஸுரன் கவிழ்க்கப்பட்டான். இரு மருத மரங்கள் தள்ளப்பட்டன. இந்தச் சிறுவன் தான் காளியன் மீது நடனமாடியவன். கோவர்த்தன கிரியை ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டிருந்தவன். விளையாட்டாக அரிஷ்டன், தேணுகன், கேசினியைக் கொன்றவன். நாம் பார்ப்பது அச்யுதன் தான்" என்று ராம, க்ருஷ்ணர்களைப் பற்றிப் பலவாறு வர்ணித்தனர்.
"கோபாலனான இவனே தாழ்ந்திருக்கும் நமது யாதவ குலத்தை மேம்படுத்தப் போகிறான். எங்கும் நிறைந்து, அனைத்தையும் படைக்கும் விஷ்ணுவின் அம்சமே இவர்கள், இவர்கள் நிச்சயம் தீயவர்களை ஒழித்து, பூபாரத்தைப் போக்குவார்கள்" என்று புராணமறிந்தவர்கள் பேசிக் கொண்டனர். அவர்களைக் கண்ட தேவகியின் நெஞ்சம் பாசத்தால் நிரம்பியது. வஸுதேவர் அவர் மூப்பையும் மறந்து மீண்டும் இளமையடைந்தது போல் அவர்களைக் கண்டு ஸந்தோஷித்தார். பலராமன் பெண்களின் மனதிற்கும், பார்வைக்கும் இனிமையாக இருந்தான். அந்தப்புரத்துப் பெண்களும், நகரத்துப் பெண்களும் கண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தனர். யானையோடு செய்த சண்டையால் அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் இருந்தது, பனித்துளிகள் தோய்ந்த தாமரைப் போலிருந்தது.
"சிவந்த கண்களோடு பொலியும் அந்த முகத்தைக் காணுங்கள், அவைகள் பயனைப் பெறட்டும்" என்று அருகிலிருக்கும் பெண்களுக்கும் அவனைக் காட்டுகின்றனர் அங்கிருக்கும் பெண்கள். "ஆச்சர்யமான மரு பொருந்திய, ஒளிரும் அவன் மார்பைப் பாருங்கள். பகைவர்களை அடித்துக் கொல்லும் அவன் திரண்ட புஜங்களையும் பாருங்கள். அவன் கூட இருக்கும் பலராமனைப் பாருங்கள். பால், சந்த்ரன், தாமரையின் தண்டு போன்று வெளுத்திருக்கும் அவன் மேனியைப் பாருங்கள். அவனுடைய நீல நிறப் பட்டாடையைப் பாருங்கள், சாணுரனையும், முஷ்டிகனையும் எப்படி அலக்ஷ்யமாக சிரித்து கொண்டே பார்க்கிறார்கள் பாருங்கள்" என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டிருந்த அவர்கள்,
"ஆஹா, சாணூரன் க்ருஷ்ணனை நோக்கி வருகிறானே. அவனோ வஜ்ராயுதம் போல் இருக்கிறான். க்ருஷ்ணனோ வெண்ணையையே தின்று, ம்ருதுவாக, சிறுவனாக இருக்கிறான். இந்த யுத்தம் சற்றும் பொருத்தமே இல்லாமல் இருக்கிறதே, இதை இந்த சபையில் பெரியவர்கள் யாருமே தடுத்து நிறுத்தவில்லையே, பலராமனும் அப்படியே. குழந்தைகளுக்கும், அஸுரர்களுக்கும் இடையே பொருத்தமில்லாதவாறு நடக்கும் இந்த யுத்தத்தை நடுநிலையாளர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனரே, என்ன அன்யாயம் இது" என்று பரிந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது க்ருஷ்ணன் சாணூரனையும், பலராமன் முஷ்டிகனையும் எதிர்க்க ஆயத்தமாகத் தங்கள் வஸ்த்ரங்களை நன்கு இழுத்துக் கட்டிக் கொண்டு, மைதானத்தின் நடுவே பூமியே பிளந்து விடும்படி கூத்தாடினர்.
ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், இழுத்துக் கொண்டும், அடித்துக் கொண்டும், ஒருவர் மீது ஒருவர் விழுந்தும், முழங்கை, மணிக்கட்டு, முட்டிக்கை, முழங்கால், கால் முட்டி இவைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுதல் என மல்யுத்தத்தின் பல முறைகளைக் கொண்டு இவர்கள் யுத்தம் செய்து கொண்டிருந்தது மிகவும் பயங்கரமாகவும், கொடுமையானதாகவும் இருந்தது. எந்த வித ஆயுதங்களுமின்றி, மன பலம், உடல் பலத்தை மட்டுமே கொண்டு வாழ்வா, சாவா என அந்த யுத்தம் நடந்து கொண்டிருந்தது. க்ருஷ்ணன் பெரும் கோபத்துடன், அனாயாஸமாக உற்சாகத்துடன் சாணூரனைப் பலம் குறைந்தவனாக்கிக் கொண்டு வந்தான். தலைமயிர்கள் அங்குமிங்கும் அலைபாய பார்ப்போரைக் கவர்ந்து கொண்டு விளையாட்டாக யுத்தம் செய்து வந்தான் க்ருஷ்ணன்.
போட்டியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வரும் கம்ஸன் சாணூரன் பலம் குறைவதையும், க்ருஷ்ணன் பலம் அதிகரித்து வருவதையும் கண்டான். வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக முழங்கிக் கொண்டிருந்த வாத்யங்களை கோபம் கொண்டு நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான். இவர்கள் வாத்யங்களை நிறுத்தியதும் வானிலிருந்து தேவர்கள் வாத்யங்களை உற்சாகமாக முழங்கிக் கொண்டு "க்ருஷ்ணா! கேசவா! உனக்கே வெற்றி, சாணூரனைக் கொன்று விடு" என்று ஜயகோஷமிட்டனர். வெகுநேரம் சாணூரனோடு விளையாடிக் கொண்டிருந்த க்ருஷ்ணன் அவனைக் கொன்று விடத் தீர்மானித்து, அவனைக் கடைசியாக ஆகாசத்திலே தூக்கி, நூறு முறைகள் சுழற்றி, அவன் உயிர் பிரிந்து காற்றில் கலந்ததும், அவன் உடலை பல கூறுகளாகச் சிதறும்படி கொடுமையான முறையில் தரையில் பல முறை துவைத்து, அவன் ரத்தத்தால் பூமி சேறாகும்படிச் செய்து அவனைக் கொன்று போட்டான்.
அதே ஸமயத்தில் பலராமனும் முஷ்டிகனைத் தலையில் முட்டியால் அடித்தும், மார்பில் முழங்காலால் இடித்தும், உயிர் போகச் செய்து, அவன் உடலைப் பிழிந்து, பூமியில் எறிந்தான். இவர்களை எதிர்த்து வந்த தோமலகன் என்பவனையும் கண்ணன் தன் இடக்கை முட்டியாலேயே கொன்றான். இவர்கள் மூவரும் இப்படி இறந்ததைக் கண்டு மற்றெவரும் அங்கு மைதானத்தில் நிற்கவில்லை. பறந்தோடி விட்டார்கள். எதிர்க்க எவருமே இல்லாத நிலையில் கண்ணனும், சங்கர்ஷணரும் மகிழ்ச்சியில் தங்கள் வயதொத்த இரு இடைச் சிறுவர்களை இழுத்துக் கூத்தாடி, கும்மாளமிட்டனர் அந்த அரங்கத்தில். இவர்கள் இப்படி அரங்கத்தில் இடைச் சிறுவர்களோடுக் கூத்தாடுவதைக் கண்ட கம்ஸன் கண்கள் சிவக்கப் பெருங்கோபம் கொண்டான்.
"ஆடு மேய்க்கும் இந்த இரண்டு சிறுவர்களையும் சபையை விட்டு வலுவாக வெளியேற்றுங்கள். இவர்களை இப்படி வளர்த்த அந்தக் கொடியவன் நந்தனையும் இரும்புச் சங்கிலியில் பிணைத்துச் சிறை பிடியுங்கள். கூட இருந்து கொண்டே எனக்குத் தீங்கிழைத்த அந்தக் கிழவன் வஸுதேவனையும் தயக்கமின்றி அவ்வாறே தண்டியுங்கள். இன்னும் க்ருஷ்ணனால் கர்வம் பிடித்துத் திரியும் இந்த இடையர்களிடமிருக்கும் பொருள்களையும், பசுக்களையும் சூறையாடுங்கள்" என்று உரக்கமாக அருகிலிருந்தவர்களிடம் கட்டளைகளைப் பிறப்பித்தான் கம்ஸன். இந்த கட்டளைகளைக் கேட்ட கண்ணன் சிரித்துக் கொண்டே கம்ஸன் அமர்ந்திருந்த உயர்ந்த மஞ்சத்தின் மேல் பாய்ந்தான். அவ்வளவு உயரத்திலிருந்த அவனிடம் பாய்ந்த க்ருஷ்ணன் அவன தலைமயிரைப் பிடித்திழுத்து, க்ரீடத்தைத் தள்ளி விட்டு, அவனைக் கீழே தள்ளி, தானும் அவன் மேல் குதித்தான்.
உலகையே தன் உதரத்தில் தரிக்கும் க்ருஷ்ணன் தன் மீது அப்படி குதித்த பாரம் தாங்காது, உக்ரஸேனனின் மகன், கம்ஸமஹாராஜனின் ஆவி அங்கேயே பிரிந்தது. அவனது இறந்த உடலையும் கோபத்தோடு க்ருஷ்ணன் அந்த மைதானமெங்கும் இழுத்துச் சென்ற வழியெங்கும் காட்டு வெள்ளம் உண்டாக்கிய அகழி போலானது. கம்ஸன் கதி இப்படியானதைக் கண்டு கோபத்தோடு ஓடி வந்த அவன் தம்பி ஸுநாமா என்பவனையும் பலராமன் எளிதில் அடித்துக் கொன்றான். இவர்கள் இப்படி அனாயாஸமாக கம்ஸனை வீழ்த்தியதைக் கண்ட, சூழ்ந்திருந்த ஜனத்திரள் பெரும் மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதன் பின் க்ருஷ்ணன், பலராமனுடன் சேர்ந்து வஸுதேவரையும், தேவகியையும் பாதம் தொழுது நின்றனர். பிறந்த போதே தங்களிடம் கண்ணன் கூறியவைகளை நினைவு கூர்ந்த அவர்கள், இருவரையும் தூக்கித் தழுவிக் கொண்டனர்.
வஸுதேவரும் தேவகியும் இப்போது ஜனார்த்தனனை வணங்கி "தேவதேவா! தேவர்களைக் கொடுத்த வரத்தைக் காக்க, எங்களிடம் அவதரித்து எங்களையும் அனுக்ரஹித்தாய். தீயவர்களை அழிக்க எங்கள் இல்லத்தில் பிறந்த உன்னை நாங்களும் கொண்டாடுகிறோம். எங்கள் குலம் புனிதமடைந்தது. நீயே அனைத்திற்கும் ஆத்மாவாகவும், அனைத்துமாகவும் இருக்கிறாய். உன்னிடமிருந்தே அனைத்துலகங்களும் உண்டாயின, உண்டாகப் போகின்றன. யாகமும், யாகதேவதையும், யாகம் செய்பவனும் நீயே. இப்படிப்பட்ட உன்னை பாசத்தால், மாயையால், தவறுதலால் குழந்தையாக, பிள்ளையாக நானும், தேவகியும் நினைக்கிறோம். எவனுக்கு முதலும், முடிவும் இல்லையோ, எவன் அனைத்தையும் படைக்கிறானோ அவனைத் தன் பிள்ளையாக எந்த மனிதனின் நாக்கு அழைக்கும்.
உலகே உன்னிடமிருந்து தோன்ற, நீ எங்களிடம் தோன்றியது மாயையால் தானே. அசையும் பொருளும், அசையா பொருள்களும் உன்னிடம் அடங்கியிருக்க நீ கருப்பையிலும், எங்கள் மடியிலுமாகத் தவழ்ந்து விளையாடினாயே. எங்களையும், இந்த உலகமனைத்தையுமே மாயையால் மோஹிக்கச் செய்கிறாயே. நீ எங்களுக்கு மகனல்ல. ப்ரஹ்மன் முதல் இங்கிருக்கும் மரம் வரை அனைத்தும் நீயே. மாயை கண்ணை மறைக்க, நான் உன்னை என் மகனென நினைத்தேன். எந்த பயத்தையும் போக்கவல்ல உன்னை, கம்ஸனிடமிருந்துக் காப்பாற்றுவதாக எண்ணி, கோகுலத்தில் சென்று சேர்த்தேன். அங்கு நீயே வளர்ந்தாய். எந்தப் பங்கும் இல்லாத நாங்கள் உன்னை எங்களுடையவன் என்று எப்படிக் கூற இயலும். நீயே விஷ்ணு, இந்த உலகைக் காப்பவன். உன் செயல்களை ருத்ரனும்,மருத்துக்களும், அச்வினிகளும், இந்த்ரனும், இன்னும் எவரும் செய்ய இயலார். அப்படிப்பட்ட உன் திருவிளையாடல்களை எங்கள் கண்களாலேயே கண்டோம். லோகக்ஷேமத்திற்காக எங்கள் புத்ரனாகப் பிறந்துள்ள உன்னை உள்ளபடி அறிந்தோம். எங்கள் அக்ஞானம் தொலைந்தது" என்று துதித்தனர்.
Wednesday, February 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment