04_12. யதுவின் புத்ரன் க்ரோஷ்டுவிற்கு த்வஜிநீவானும், அவனுக்கு ஸ்வாதி என்பவனும், அவனுக்கு ருசங்குவும், அவனுக்கு சித்திரரதனும், அவனுக்கு சசிபிந்துவும் பிறந்தனர். இந்த சசிபிந்து பதினான்கு ரத்னங்களுடனும் (ப்ராணன் இல்லாதவை ஏழு - சக்ரம், ரதம், மணி, கட்கம், சர்மம், கொடி, நிதி; ப்ராணன் உள்ளவை ஏழு - மனைவி, புரோஹிதன், ஸேனாபதி, ரதகாரன், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை), லக்ஷம் பத்னிகளுடனும், பத்து லக்ஷம் பிள்ளைகளுடனும் சக்ரவர்த்தியாக இருந்தான். இவர்களில் ப்ருதுச்ரவஸ், ப்ருதுகர்மா, ப்ருதுகீர்த்தி, ப்ருதுயசஸ், ப்ருதுஜயன், ப்ருதுதாஸன் என்ற ஆறு புத்ரர்கள் முக்யமானவர்கள். ப்ருதுச்ரவஸ்ஸுக்கு ப்ருதுதமனும், அவனுக்கு உசநஸ்ஸும் (நூறு அச்வமேதங்கள் செய்தவன்), அவனுக்கு சிதபு என்பவனும், அவனுக்கு ருக்மகவசனும், அவனுக்குப் பராவ்ருத் என்பவனும், அவனுக்கு ருக்மேஷு, ப்ருதுக்மன், ஜ்யாமகன், பதிதன், ஹரிதன் என்ற ஐந்து புதல்வர்களும் இருந்தனர்.
ஜ்யாமகனுக்கு சைப்யை என்ற மனைவி. அவளுக்குப் பிள்ளையில்லை. ஜ்யாமகனுக்கு அவளிடம் பயம். எனவே இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளாமலே அவளிஷ்டப்படி இருந்து விட்டான். குழந்தைகளில்லை. அப்போது நடந்த ஒரு சண்டையில் இந்த ஜ்யாமகன் அனைத்துப் படைகளையும் கொன்றும், துரத்தியும் வெற்றி வாகை சூடினான். அப்போது அங்கு ஒரு பெண் தன்னைக் காப்பாற்ற எவரும் இன்றி அலறிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் "மலடியின் கணவனாகப் பிள்ளைகளின்றி இருக்கும் தனக்காகவே இந்த ஸ்த்ரீ ரத்னம் தெய்வத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இவளை மணக்கலாம்" என்று நினைத்தான். ஆனால் சைப்யையிடம் இருக்கும் பயத்தால் இவளை அவளிடம் உத்தரவு கேட்டே மணக்க வேண்டும் என்று நிச்சயித்துத் தன்னுடன் அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டான்.
வெற்றி வாகை சூடி வரும் அரசனை வரவேற்க வந்த சைப்யை, புதிதாக ஒரு பெண்ணை அவனிடம் கண்டதும் யாரிவள் என்று கோபத்துடன் கேட்கிறாள். அவளைக் கண்டதும் கதி கலங்கிய ஜ்யாமகன் நாக்குழறி மாற்றுப்பெண் என்று கூறி விடுகிறான். "நமக்கேது பிள்ளை, எந்தப் பிள்ளைக்கு இவளை மணம் முடிக்கப் போகிறீர்கள்" என்று மீண்டும் சைப்யை கேட்க, தான் முன்னம் கூறியதையே ஒட்டி "அன்பானவளே, உனக்கே ஒருவன் பிறப்பான். அவனுக்கு மணம் முடிக்கவே இவளை அழைத்து வந்தேன்" என்று ஒருவாறு முடித்தான். தனக்கு மகன் பிறக்கப் போவதாகக் கூறியதைக் கேட்ட சைப்யை இப்போது கோபம் மறைந்து ஸந்தோஷத்துடன் "அப்படியே ஆகட்டும்" என்கிறாள். தர்மம் தவறாத அரசனும், பதிவ்ரதையான சைப்யையும் இப்படிக் கூறியதால் அஸ்து தேவதைகளும் அதை உறுதி செய்தன.
வயது முதிர்ந்திருந்த போதும் இப்படி சில நாட்களில் கர்ப்பவதியான சைப்யை விதர்பன் என்ற புத்ரனைப் பெற்றெடுத்தாள். விதர்பனும் தன் தந்தை முன்பே தனக்காகக் கொண்டு வந்திருந்த ஸ்நுஷை (மருமகள்) என்பவளையே மணந்து கொண்டான். இவர்களுக்கு க்ரதன், கைசிகன், ரோமபாதன் என்று மூன்று குழந்தைகள். நாரதரிடமிருந்து ஞானத்தைப் பெற்றுச் சிறந்த ரோமபாதனுக்கு பப்ருவும், அவனுக்கு த்ருதியும், அவனுக்குக் கைசிகனும், அவனுக்கு சேதியும் பிறந்தனர். இவன் வம்சத்தவர்கள் சேதி நாட்டரசர்கள் ஆவர். விதர்பனின் இன்னொரு புதல்வனான க்ரதனுக்குக் குந்தியும், அவனுக்கு த்ருஷ்டியும், அவனுக்கு நித்ருதியும், அவனுக்குத் தாசார்ஹனும், அவனுக்கு வ்யோமனும், அவனுக்கு ஜீமூதனும், அவனுக்கு விக்ருதியும், அவனுக்குப் பீமரதனும், அவனுக்கு நவரதனும், அவனுக்குத் தசரதனும், அவனுக்குச் சகுனியும், அவனுக்குக் கரம்பியும், அவனுக்கு மதுவும், பின் குருவம்சன், அனு, புருஹோத்ரன், அம்சு, ஸத்வதன் என இந்த வம்சம் நீண்டது. இந்த ஸத்வதனிடமிருந்து ஸாத்வதர்கல் உண்டாயினர். இந்த ஜ்யாமக வம்ச வ்ருத்தியைக் கேட்பவர்கள் பாபங்களிலிருந்து விடுபடுகின்றனர்.
Tuesday, February 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment