Thursday, February 18, 2010

விஷ்ணு புராணம் - 92

05_12. இந்த்ரன் ஐராவதத்தில் ஏறி ஆவலோடு க்ருஷ்ணனை வணங்குவதற்காகக் கோவர்த்தனத்திற்கு இறங்கி வந்தான். உலகையே காப்பவன் இங்கு இடைச் சிறுவன் வேஷத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். நித்ய ஸூரிகளால் சூழப்பட்டிருக்கும் க்ருஷ்ணன் இங்கு இடைச்சிறுவர்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். யார் கண்ணிற்கும் புலப்படாமல் கருடன் வானிலிருந்து தன் சிறகுகளை விரித்து க்ருஷ்ணனுக்கு குடையாக நிழல் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐராவதத்திலிருந்து கீழே இறங்கி தனிமையில் க்ருஷ்ணனிடம் வந்து வணங்கிக் கூறலானான். "க்ருஷ்ணா, நான் வந்த வேலையைச் சொல்கிறேன். தயவு செய்து கேட்டருள். மேலும் சண்டை போட வந்துள்ளேன் என்று தவறாக நினைத்து விடாதே.

பூபாரம் தீர்க்கவே நீ அவதரித்துள்ளாய் என்பதை நான் அறிவேன். ஆனால், எனக்கு செய்து வந்த யாகம் நிறுத்தப்பட்டதால் நான் பகை கொண்டு மேகங்களை கோகுலத்தை அழிக்குமாறு உத்தரவிட்டு விட்டேன். அவைகளும் அப்படியே செய்தன. ஆனால் நீயோ கிரிதாரியாய் பசுக்களை ரக்ஷித்து, எனக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தாய். ஆபத்தில் அண்டியவர்களைக் காத்தாய். நீ இந்தச் செயலை செய்ததைக் கண்டதும் உன் வலிமையை நான் அறிந்து கொண்டேன். நீ எங்களுக்கும் நன்மைகளைச் செய்து விடுவாய் என்று உறுதி படுத்திக் கொள்கிறேன். கோகுலத்தின் இந்தப் பசுக்களை நீ காத்ததைக் கண்டு இவைகளின் முன்னோர்களாக எனக்கும், ஸத்யலோகத்திற்கும் மேலாக கோலோகத்தில் இருக்கும் பசுக்களும் மகிழ்ந்துள்ளன.

இதற்காக உன்னை கௌரவிப்பதற்காகவும் என்னை அனுப்பியுள்ளன. அவைகளின் உத்தரவுப்படி உன்னையே கோலோகத்தின் செல்வத்திற்கெல்லாம் உன்னை உபேந்த்ரனாகப்(இன்னொரு இந்த்ரன்) பட்டாபிஷேகம் செய்ய நினைக்கிறேன். இதனால் நீ பசுக்களுகெல்லாம் இந்த்ரனாக, கோவிந்தனாக விளங்குவாய்". இப்படிக் கூறிவிட்டு இந்த்ரன் ஐராவதத்தினிடமிருந்து தீர்த்த பாத்ரத்தை எடுத்து அதில் சுத்த ஜலத்தை நிரப்பி, அதனால் க்ருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகத்தையும் செய்து வைத்தான். பசுக்கள் அப்போது தானாகவே தங்கள் மடியிலிருந்து பாலைப் பெருக்கி, பூமியை சேறாக்கின.

இதன் பின் க்ருஷ்ணனிடம் இந்த்ரன் பணிவாக இன்னொன்றையும் கீழுள்ளவாறு வேண்டிக் கொண்டான். "க்ருஷ்ணா! உன் பணியை எளிதாக்கும் விதமாக இப்போது நான் ஒன்று சொல்கிறேன். கேள். பூலோகத்தில் எனது அம்சமாக அர்ஜுனன் ப்ருதையின் மகனாகப் பிறந்துள்ளான். அவன் சிறந்த வீரன். பூபாரம் தீர்ப்பதில் உனக்கு உறுதுணையாய் இருப்பான். நீ அவனை உன் ஆத்மாவைப் போல் காத்துத் தர வேண்டும்" என்பதே அது. இந்த்ரனின் வணக்கங்களையும், ப்ரார்த்தனைகளையும் ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன் அவன் செய்த தீங்குகளை மறந்து, கருணையோடு "தேவேந்த்ர! உன் அம்சமாக பரத வம்சத்தில் அர்ஜுனன் பிறந்திருப்பதை நான் அறிவேன். வெல்ல முடியாதவனே! அவனைப் பற்றி நீ வீணாகக் கவலைப்படாதே. நான் பூவுலகில் இருக்கும் வரை அவனை நிச்சயம் காத்தருள்வேன். நான் இங்கு இருக்கும் வரை அவனை எவனும் யுத்தத்தில் வெல்லமாட்டான்.

கம்ஸன், அரிஷ்டன், கேசி, குவலயாபீடம் எனும் யானை, நரகன் இன்னும் மற்ற தைத்யர்கள் எல்லோரும் அழிந்த பிறகு பாரத யுத்தம் என்ற ஒரு பெரும் போர் உண்டாகப் போகிறது. அப்போதே பூபாரம் குறைந்தது என்று நீ நினைத்துக் கொள். அர்ஜுனனுக்குப் பகைவன் என்று ஒருவன் என் முன் நிற்க மாட்டான். அர்ஜுனனுக்காக, யுதிஷ்ட்ரன் முதலான மற்ற குந்தி புத்ரர்களையும் ஆயுதம் படாமல் காப்பாற்றி அந்த யுத்தத்தின் முடிவில் குந்தி தேவியிடம் கொடுப்பேன். இது உறுதி" என்று உறுதியளித்தான். இதைக் கேட்ட இந்த்ரன் மன நிம்மதியோடு பெரிதும் மகிழ்ந்து, கண்ணனைக் கட்டித்தழுவிக் கொண்டு, ஐராவதத்தில் ஏறி தன்னுலகத்திற்கு விடைபெற்றான்.

இதற்குள் இந்த்ரன் க்ருஷ்ணனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்த செய்தியைக் கேள்விப்பட்ட கோப ஸ்த்ரீகள் அவன் வரவைப் பெரிதும் எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர். கண்ணனும் மற்ற கோபர்களோடும், பசுக்களோடும் மீண்டும் சேரிக்கு வந்து சேர்ந்தான்.

No comments:

Post a Comment