Friday, February 26, 2010

விஷ்ணு புராணம் - 108

05_28. ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுஷேணன், சாருகுப்தன், பத்ரசாரு, சாருவிந்தன், ஸுசாரு, சாரு ஆகிய பிள்ளைகளையும், சாருமதி என்ற பெண்ணையும் ருக்மிணி க்ருஷ்ணனுக்குப் பெற்றுத் தந்தாள். ருக்மிணி முதலாக மித்ரவிந்தை, ஸத்யை, ஜாம்பவதி, ரோஹிணி, ஸுசீலை, ஸத்யபாமை, லக்ஷ்மணை என்ற எழுவரோடு க்ருஷ்ணனுக்கு மொத்தம் அஷ்ட மஹிஷிகள். இவர்களைத் தவிர அவனுக்கு வேறு பதினாறாயிரம் மனைவிகளும் உண்டு. இதில் மித்ரவிந்தை களிந்த ராஜனின் புதல்வி என்பதால் காளிந்தி என்றும் அழைக்கப் படுவாள். ஸத்யை நக்னஜித்தின் மகள். ஜாம்பவதி ஜாம்பவானின் மகள். ரோஹிணி இஷ்டப்படி ரூபமெடுத்துக் கொள்வாள். நல்ல குணமுள்ள ஸுசீலை மத்ர தேசத்து இளவரசி. ஸத்யபாமா ஸத்ராஜித்தின் மகள். லக்ஷ்மணைத் தன் அழகான சிரிப்பால் சாருஹாஸினி என்றும் அழைக்கப்பட்டாள்.

தன்னிடம் விருப்பமுள்ள, வீரனான ப்ரத்யும்னனை, ருக்மியின் மகள் ஸுயம்வரத்தில் விரும்பி மணந்து பலமும், பெருந்தன்மையுமுள்ள அனிருத்தனைப் பெற்றெடுத்தாள். கவனமாகவும், விருப்பத்துடனும் யுத்த முறைகளைப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்த இவன் எவராலும் தடுக்க முடியாத பராக்ரமத்துடன், எதிரிகளின் படைகளை உடைப்பவனாயிருந்தான். ருக்மியின் மகன் வழி பேத்தியை இந்த அனிருத்தனுக்கு மனைவியாகக் கொடுக்குமாறு தானே ருக்மியிடம் சென்று பெண் கேட்டான் க்ருஷ்ணன். க்ருஷ்ணனிடம் பகையிருந்தாலும், அவனே நேரில் வந்து கேட்டதால் ருக்மி தன் மகன் வழிப் பேத்தியை, மகள் வழிப் பேரனுக்கு மணம் முடிக்க சம்மதித்தான். நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்திற்கு பலராமனும், மற்ற யாதவர்களும் க்ருஷ்ணனோடு சேர்ந்து ருக்மியின் நகரமான போஜகடத்திற்கு வந்தனர். க்ருஷ்ணனின் பேரனுக்கும், ருக்மியின் பேத்திக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

அதன்பின் அரசர்கள் பலரும் களிங்கன் என்பவனின் தலைமையில் ருக்மியிடம் வந்து "கலப்பையைக் கையாளும் இந்த பலராமனுக்கு முறையாக சூதாடத் தெரியாது. ஆனால் சூதாட்டத்தில் ஆசையுண்டு. இதையே அவன் துரத்ருஷ்டமாகப் பயன்படுத்தி நாம் அவனை வெற்றி கொள்ளலாம், அவனைச் சூதாட அழை" என்று கூற, சக்தியுள்ள ருக்மியும் அழைக்க, பலராமனும் ஒப்புக்கொண்டு வர, அரண்மனையில் தொடங்கியது சூதாட்டம். ஆயிரம் வராகன் பொன்னை ருக்மியிடம் முதலில் இழந்தான் பலராமன். மறுமுறை, மறுமுறை என்று மூன்று முறை சூதில் வல்லவனான ருக்மியிடம் ஆயிரமாயிரம் வராகன்களாகப் பொன்னை இழந்தான்.

பலராமன் தொடர்ந்து இப்படித் தோற்பதைக் கண்ட களிங்கன் சத்தமாகச் சிரித்தான். கர்வங்கொண்ட ருக்மியும் "கொஞ்சம் கூட ஆடத் தெரியாத இந்த பலராமன் வெறும் கர்வத்தாலும், ஆசையாலும் மிகவும் விளையாடத் தெரிந்தது போல் ஆடி மீண்டும், மீண்டும் என்னிடம் தோற்கிறான்" என்று பலராமனைப் பார்த்துக் கூறினான். களிங்க தேசத்தரசனின் ஏளனமாக சிரிப்பாலும், ருக்மியின் இறுமாப்பான பேச்சாலும் அவமானமும், கோபமும் கொண்ட ஹலாயுதர் பொறுமையிழந்து ஒரு கோடி வராகனை மீண்டும் பந்தயமாக வைத்தார். பந்தயத்தை ஏற்று காய்களை உருட்டிய ருக்மி இம்முறை தோற்றான். ஆட்டத்தில் வெற்றி பெற்ற பலராமர் இப்போது நானே வென்றேன் என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.

ஆனால் ருக்மி, பலராமரின் வெற்றியை ஒப்புக் கொள்ளாது "ராமா, பொய் சொல்லாதே. இது செல்லாது. பந்தயத்தை இருவரும் ஒப்புக் கொண்டால் தானே அது செல்லும். உங்கள் கோடி வராகன் பந்தயத்தை நீங்கள் தான் சொன்னீர். நான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை. எனவே இது செல்லாது. நானே வென்றவன்" என்றான். அப்போது அசரீரி ஒன்று "பலராமனே இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். ருக்மியே தவறாக, பொய் பேசுகிறான். வாயால் பந்தயத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், செய்கையால் ஒப்புக்கொண்டிருக்கிறான். பந்தயத்தை ஒப்புக்கொள்ளாதவன் காய்களை உருட்டுவானா" என்றது.

அசரீரி வாக்கைக் கேட்டதும் பலராமர் கண்கள் சிவக்க மேலும் பெருங்கோபம் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த சூதாட்டப் பலகையாலேயே ருக்மியை அடித்து, அங்கேயே கொன்று போட்டு விட்டார். இவர் தோற்றபோது பற்களைக் காட்டிச் சிரித்த களிங்கன் இப்போது பயத்தில் உறைந்து போயிருந்தான். அவனையும் பிடித்திழுத்து அந்தப் பலகையாலேயே அவன் பற்களனைத்தையும் தகர்த்தெறிந்தார். மேலும் எதிர்த்து வந்த இளவரசர்களையும் அங்கிருந்த ஒரு தங்க மயமான தூணைப் பிடுங்கியெடுத்து, அதையே ஆயுதாகக் கொண்டு அடித்துப் போட்டார். உயிர் பிழைத்த மீதம் பேர்களனைவரும் இவரது கோபத்தைக் கண்டு அழுது கொண்டும், அலறிக் கொண்டும் ஓடி விட்டனர். பெரும் சப்தமும், ஆரவாரமும் எழுந்தது அங்கு. இப்படி கல்யாணத்திற்கு வந்த இடத்தில் மணமக்களின் தாத்தா ருக்மி, தன் அண்ணனால் கொல்லப்பட்டதை அறிந்த க்ருஷ்ணன், ஒரு பக்கம் மனைவி ருக்மிணிக்கும், மறுபக்கம் பலராமனுக்கும் பயந்து இதைப் பற்றி ஒன்றும் கருத்து கூறாமல், புது மண தம்பதிகளோடும், யாதவர்களோடும் த்வாரகைக்கு வந்து சேர்ந்தான்.

No comments:

Post a Comment