05_01. எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு யாதவ குலத்தில், எவர்க்கும் எளியவனாய் அவதரித்துச் செய்த லீலைகளை விரிவாகக் கூறவேண்டும் என்று மைத்ரேயர் வினவ, அது பற்றிக் கூறுகிறார் பராசரர். தேவகனுக்கு தேவலோகத்துப் பெண் போன்ற அழகுடன் தேவகி என்ற ஒரு பெண் இருந்தாள். அவளை வஸுதேவன் திருமணம் செய்து கொண்டான். அவர்கள் அமர்ந்திருந்த தேரைத் தானே ஓட்டிச் சென்றான் கம்ஸன். "ஏய் மூடா! கம்ஸா! உடன் பிறந்த பாசத்தால் தேவகியை அவள் கணவனுடன் கூட்டிச் செல்கிறாய். இவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையே உன்னைக் கொல்லப் போகிறான்" என்று திடீரென வழியில் ஒரு அசரீரி கேட்டது. இதைக் கேட்டதும் கோபம் கொண்ட கம்ஸன் கடிவாளத்தை விட்டு, கத்தியைக் கையில் எடுத்தான். தேவகியைக் கொல்லத் திரும்பினான்.
இதைக் கண்ட வஸுதேவன் செய்வதறியாது அப்போதைக்கு சாதுர்யமாக "பெருமை வாய்ந்தவனே! இவளை ஏன் கொல்ல வேண்டும். இவளது எட்டாவது பிள்ளைதானே உனக்கு எமன். நான் இவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையுமே உன்னிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். அதை நீ உன் இஷ்டப்படி எதாவது செய்து கொள்" என்றான். இதைச் சரியென நினைத்து கம்ஸனும் அவர்களை அப்போதைக்கு விட்டான். அவர்கள் குழந்தைகளுக்காகக் காத்திருந்தான். இந்த ஸமயத்திலேயே பூபாரம் தாங்காத பூமாதேவி மேருமலையில் தேவர்களுடன் கூடியிருந்த ப்ரஹ்மாவிடம் சென்று "ஸ்வர்ணத்துக்குத் தந்தை அக்னியாவான். பசுக்களுக்கு ஸூர்யனே தந்தை.
அப்படியே எனக்கும் மற்ற லோகங்களுக்கும் நாராயணனே தந்தை. அவனுக்குத் தந்தை இல்லை. அந்த நாராயணனே என்னைக் காக்க வேண்டும். ப்ரஹ்மா, காலம், தேவ குலம், யக்ஷ, ராக்ஷஸ, அஸுர, க்ரஹ, நக்ஷத்ர, அக்னி, ஜலம், காற்று, நான், சப்தம் என அனைத்துமே விஷ்ணு மயம். விஷ்ணுவிற்கு சரீரம். இப்படி விஷ்ணுவின் சரீரமான இவைகளே ஒன்றையொன்று எதிர்த்துக் கொள்வது ஏன் என்ற சந்தேஹம் வேண்டாம். கடலிலும் பெரிய அலைகள் சிறிய அலைகளை அழிக்கவே செய்கின்றன. இப்படியே பலமுள்ளவர்கள் பலம் குன்றியவர்களை அழிக்கின்றனர். இப்பொதும் காலநேமி முதலான அப்படிப்பட்ட அஸுரர்கள் பூலோகத்தில் ப்ரஜைகளை அழித்து வருகிறார்கள்.
இவன் ஏற்கனவே விஷ்ணுவால் அழிக்கப்பட்டிருந்தும், இப்போது மீண்டும் உக்ரஸேனன் மகன் கம்ஸனாகப் பிறந்துள்ளான். அரிஷ்டன், கேசினி, ப்ரலம்பன், நரகன், தேனுகன், பாணாஸுரன் என இன்னும் பல துராத்மாக்கள் ராஜ குலங்களில் எண்ண முடியாதபடி பிறந்துள்ளனர். பல அக்ஷௌஹிணிக் கணக்கில் இருக்கும் இந்த அஸுரக் கூட்டங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதுவே என் வேண்டுகோள். நான் பாதாளம் சென்று விடாதபடி என்னைக் காக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். இதைக் கேட்ட தேவர்களும், ப்ரஹ்மனும் பாற்கடல் நோக்கிச் சென்றனர். "நீ வேதங்களுக்கும் எட்டாதவன், அணுவிற்கும் சிறியவன், பெரியதற்கும் பெரிதானவன்.
ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய பரவித்யையும் நீயே. சப்தத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய அபரவித்யையும் நீயே. உருவமும், அருவமுமானதும் நீயே. வேதங்களும், வேதாங்கங்களும், சாஸ்த்ரங்களும் நீயே. அனைத்துமறிந்தவனும் நீயே. உயர்ந்த வஸ்துவும் நீயே. வாக்கும் நீயே. நீயே ப்ரஹ்மன், அதற்கும் மேலானவனும் நீயே. மொழியும், அதன் உச்சரிப்பும், மாத்திரையும், அர்த்தமும், ஒலியும், கர்மாவும், வான சாஸ்த்ரமும், பரம்பரைகளும், பழக்கங்களும், இலக்கணமும், வேதாந்த சாரமும், தர்க்க சாஸ்த்ரமும், நீதியும் நீயே. அறியமுடியாதவன் நீ. ஆத்மா, வாழ்க்கை, உடல், குணங்கள், விஷயங்கள் இவைகளின் கோட்பாடுகளும் நீயே.
உன்னிடமிருந்தே எல்லாமும் தோன்றி, உன்னிடமே லயிக்கிறது. புலப்படாதவன் நீ, வர்ணிக்கமுடியாதவன் நீ, அறிவதற்கு முடியாதவன் நீ, முடிவில்லாதவன், உருவில்லாதவன், நிறமில்லாதவன், பெயரில்லாதவன், தூய்மையானவன், நிலையானவன் நீ. அனுபவிக்க மட்டுமே முடிந்தவன் நீ, அகக்கண்களுக்கே புலப்படுபவன் நீ. ஒன்றானதும், பலவானதும் நீ. வேகமானவன் நீ. அன்பிற்கு அகப்படுபவன் நீ. அனைத்துமாகவும், அனைத்தையும் அறிந்தவனாயினும் இருக்கும் உன்னை யாரும் அறியார். அறியாமையைப் போக்குபவன் நீ. உன்னை அறிந்தவர்கள் அனைத்தும் அறிந்தவர்களே. முதலாகவும், மத்யமாகவும், இறுதியாகவும் இருப்பவன் நீ. உலகைக் காப்பவன் நீ.
உன்னிடத்திலேயே அனைத்தும் நிலை கொண்டிருந்தது, நிலை கொண்டிருக்கிறது, இனியும் நிலை கொண்டிருக்கும். அணுவிற்கும் அணு நீ. ஆத்மாவும் நீ, வரலாறுகளுக்கெல்லாம் முந்தியவன் நீ, பூமிக்கு ஒளியும், வளமும் நீ. அனைத்துயிரின் கண் நீ, பல உருவங்களைக் கொண்டவன் நீ. எளிதில் மூவுலகும் செல்பவன் நீ. அக்னியைப் போல் ஒன்றாயிருந்தாலும் பல குணங்களானவன் நீ. உண்மையில் மாறுபாடில்லாவிடினும் எப்படி வேண்டுமானாலும் உருவகமாபவன் நீ. எங்கும் நிறைந்தவனும், இருக்கும் எல்லா உருவங்களையும் தரிப்பவன் நீ. ஞானிகளின் அறிவிற்கே புலப்படும் உயர்ந்த வஸ்து நீ. உன்னையன்றி எதுவும் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப்போவதுமில்லை.
கூறுகளாக்க முடியாததும், கூறுகளாக்க முடிந்ததும் நீயே, பொதுவானவன் நீ, தனியானவனும் நீயே. அளவிற்கரிய ஞானமும், பலமுமுடையவன் நீ, எல்லா ஞானத்தாலும், சக்தியாலும் அடையத்தக்கவனும் நீயே. வளர்ச்சியும், குறைவும் இல்லாதவன் நீ, சுயமானவனும், ஆரம்பமற்றவனும் நீ. அனைத்தையும் வெற்றி கொள்பவனும் நீ. களைப்பும், மந்தத்தன்மையும், பயமும், கோபமும், விருப்பும் உன்னைப் பாதிப்பதில்லை. செய்த தர்மத்தின் காரணமாக சுகத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் ஸ்வர்கத்திலும், அதர்மத்தின் காரணமாக துக்கத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் நரகத்திலும், இரண்டின் பயனையும் அனுபவிக்க இருக்கும் ஆத்மா பூமியிலும் பிறக்கிறது. ஆனால் உன் அவதாரங்கள் ஒன்றும் இப்படி எதனின் தொடர்ச்சியாகவும் இன்றி உலகில் பக்தியைச் செய்வதற்காகவே இருக்கிறது"
இப்படிப் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனைப் பலவாறுத் துதிக்கிறார் தேவர்களுடன் கூடிச் சென்றிருக்கும் ப்ரஹ்மா. இந்த துதிகளைக் கேட்டு மகிழ்ந்த பரமன் தன் விச்வரூபத்தைக் காட்டி, "நான்முகனே, உன் விருப்பம் நிறைவேறினதாகுக. உன் வரவிற்கானக் காரணத்தைக் கூறு" என்கிறான். ப்ரஹ்மா "ஆயிரம் உருவும், கைகளும் உடையவனே, பல முகங்களும், திருவடிகளும் கொண்டவனே, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யும் எல்லையற்றவனே, புத்தியும், இயற்கையும், நினைவுமாயிருப்பவனே, எங்களிடம் கருணை கூறுங்கள். அஸுரர்களால் எல்லையற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் பூதேவி இங்கு வந்துள்ளாள். நீயே அவள் குறை போக்கிக் காத்தருள வேண்டும்.
நானும், இந்த்ரனும், அச்வினிகளும், வருணனும், யமனும், ருத்ரனும், வஸுக்களும், ஸூர்யர்களும், காற்றும், நெருப்பும் இன்னும் அனைத்து வானவர்களும் உன் ஆணையைச் செய்ய சித்தமாயிருக்கிறோம். குறைகளற்றவனே, தேவர் தலைவனே, கட்டளையிடு" என்கிறார். இதைக் கேட்டதும் பரமன் வெள்ளையாக ஒன்றும், கருப்பாக ஒன்றுமாய் இரு மயிர்களைக் களைந்து "இவைகள் பூமியில் அவதரித்து, பூதேவின் சுமைகளையும், கவலையும் போக்கும். தேவர்களும் தங்கள் அம்சங்களோடு பூமியில் அவதரித்து, அஸுரர்களோடு யுத்தத்தில் ஈடுபடட்டும். என் பார்வையாலேயே அவர்கள் அழிவது திண்ணம். ஸந்தேஹப்படவேண்டாம். கருமையான இந்த தேஜஸ் வஸுதேவனின் பத்னி தேவகியின் கர்ப்பத்தில் எட்டாவதாகப் பிறந்து விரைவில் கம்ஸனைக் கொல்லும்" என்று கூறி மறைந்தான்.
தேவர்களும் நமஸ்கரித்து விட்டு மேருமலைக்குத் திரும்பினர். நாரதர் உடனே இந்த தேவ ரஹஸ்யத்தைக் கம்ஸனிடம் வந்து கூறிவிட்டார். அவன் உடனே வஸுதேவனையும், தேவகியையும் சிறை வைத்தான். அங்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் வஸுதேவர் கம்ஸனிடம் கொண்டு வந்து கொடுக்க, அவன் அவ்வப்பொழுதே அவர்கள் ஒவ்வொருவரையும் கல்லில் மோதி கொன்று விட்டான். இவர்கள் முன்பே ஹிரண்யகசிபுவிற்குக் குழந்தைகளாய்ப் பிறந்திருந்து விஷ்ணு பூஜைகளைச் செய்து வந்ததால் "அடுத்த பிறவியில் தந்தையாலேயே உங்களுக்கு மரணம்" என்று சபிக்கப் பட்டவர்கள். அவ்வாறே இப்போது நடந்தது.
யோகநித்ரைக்கு இது விஷயமாக மஹாவிஷ்ணு இட்ட உத்தரவு "மாயா! பாதாளத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஹிரண்யகசிபுவின் ஆறு குழந்தைகளையும் தேவகியின் கர்ப்பத்தில் சேர்த்து விடு. அவர்களைக் கம்ஸன் பிறந்ததும் கொன்று விடுவான். ஏழாவது கர்ப்பமாக தேவகிக்கு ஆதிஸேஷன் இருப்பான். ஏற்கனவே நந்தகோபத்தில் வஸுதேவனின் இன்னொரு மனைவி ரோஹிணி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பம் வாயு ரூபத்திலேயே இருக்கிறது. எனவே தேவகியின் ஏழாவது கர்ப்பம் ஏழு மாதம் வளர்ந்தவுடன் அதை நீ எடுத்துச் சென்று ரோஹிணியின் வாயு ரூபமாயிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்து விட்டு இதை அங்கு வைத்து விடு. இழுத்துச் சென்று வைக்கப்பட்டதால் ஸங்கர்ஷணன் என்ற பெயரில் ரோஹிணிக்கு மகனாக மிகுந்த பலத்துடன் அவன் அங்கு பிறப்பான். இங்கு பயத்தில் தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டது என்று உலகம் நினைக்கும்.
இதன் பின் எட்டாவது கர்ப்பமாக தேவகிக்கு நானே மழை காலத்தில் ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பிறப்பேன். நீ யசோதையின் கர்ப்பத்தில் நவமியில் பிறப்பாய். வஸுதேவன் நம்மிருவரையும் என் ஏவலால், பலம் கொண்டு இடம் மாற்றுவான். கம்ஸன் உன்னைக் கொல்ல முற்படும்போது அவன் கையிலிருந்து விடுபட்டு நீ ஆகாசத்தில் நிற்பாய். மாயையான உன்னை ஆயிரம் கண் கொண்ட தேவராஜனும் தன் தங்கையாக ஏற்றுக் கொள்வான். சும்ப, நிசும்பன் முதலாக அஸுரக்கூட்டங்களை ஆயிரக்கணக்கில் நீ கொல்லப்போகிறாய். பல யோகபீடங்களை அமைத்துக் கொண்டு பூமண்டலத்தை நீ அலங்கரிக்கப் போகிறாய்.
செல்வமும், சந்ததிகளும், புகழும், பொறுமையும், ஸ்வர்க்கமும், பூமியும்,தைர்யமும், நாணமும், சக்தியும், காலைப்பொழுதும் என அனைத்து ஸ்த்ரீ வர்க்கங்களும் நீயே. ஆர்யா, துர்கா, வேதகர்பா, அம்பிகா, பத்ரா, பத்ரகாளீ, க்ஷேமதா, பாக்யதா என உன் திரு நாமங்களைத் தினமும் காலை, மாலைகளில் துதிப்பவர்களுக்கு என் அனுக்ரஹமும், அவர்கள் விருப்பங்களும் ஈடேறும். கள், மாம்ஸம், பக்ஷணங்கள், சாப்பாடு முதலியவைகளால் அனைவராலும் உபசரிக்கப்பட்டு நீயும் உன்னை பூஜிப்பவர்களுக்கு அனைத்தும் அளிப்பாய். உன் வரங்கள் அனைத்தும் என் அருளால் நிச்சயம் நடக்கும். ஆகையால் என் சொல்வதைச் செய்வாயாக". இந்த உத்தரவின் படியே யோகமாயாவும் நடந்தாள்.
Wednesday, February 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment