Wednesday, February 24, 2010

விஷ்ணு புராணம் - 101

05_21. இப்படி உண்மையறிவு பெற்று தன்னைத் துதித்த வஸுதேவ, தேவகியையும் மற்றும் அங்குள்ள மற்ற யாதவர்களையும் மீண்டும் மயங்குமாறுச் செய்தான் க்ருஷ்ணன். பெற்றோர்களிடம் "அம்மா! அப்பா! நானும் பலராமனும் வெகு நாட்களாகவே உங்களைத் தர்ஸிக்க எண்ணியும், கம்ஸ பயத்தால் அது கைகூடாமல் போய் விட்டது. இப்போது தான் அந்த பாக்யம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கொடியவர்களே இப்படி தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் காலத்தைக் கழிப்பார்கள். பெற்றோர்களையும், ஆசார்யர்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும் பூஜித்துப் பணிவிடை செய்பவர்கள் வாழ்க்கையே பலன் கொடுக்கும். கம்ஸனின் பலத்திற்கும், கொடுமைகளுக்கும் அஞ்சி, அயலாரிடம் வளர்ந்து வந்ததால் உங்களுக்கு இதுவரைப் பணிவிடை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த அபராதத்தைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும்" என்று கூறி கண்ணீர் மல்க அவர்களையும், மற்ற யாதவப் பெரியவர்களையும் தகுந்த முறையில் பூஜை செய்து, மரியாதைகளைச் செய்தனர் இருவரும்.

இதன் பின் பூமியில் விழுந்து கிடக்கும் கம்ஸனின் சடலத்தைச் சுற்றிக் கதறி அழுது கொண்டிருக்கும் அவனது மனைவிமார்கள், தாயார்கள் என அனைவருக்கும் அனுதாபத்தோடு தானே கண்களில் நீர் ததும்ப, பல வகைகளில் ஆறுதல் கூறித் தேற்றினான் கண்ணன். அதன் பின் சிறையிலிருக்கும் கம்ஸனின் தந்தை உக்ரஸேனரை விடுதலைச் செய்து ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான். தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் தகுந்த முறையில் ஈம க்ரியைகளைச் செய்து முடித்து, ராஜ்யம் செய்து கொண்டிருந்த யாதவ குல ச்ரேஷ்டரான உக்ரஸேனரிடம் ஒரு நாள் "மஹாராஜா! எனக்கு ஆணையிடுங்கள். தயக்கமின்றி கூறுங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை. அவற்றையெல்லாம் நிச்சயம் செய்து முடிக்கிறேன் நான்.

யதுவின் இந்த வம்சம் சாபத்தால் ராஜ்யமிழந்ததாயினும், என்னைப் பணியாளனாகப் பெற்ற நீர் எதற்கும் அஞ்சாமல், கவலையின்றி அரசாளுங்கள். தேவர்களே உங்களுக்குப் பணி செய்வர், அப்படியிருக்க இந்த அற்ப அரசர்கள் கீழ்ப்படிவதில் அதிசயமென்ன" என்று எளியோனாய் உக்ரஸேனரிடம் பணிந்து நின்ற க்ருஷ்ணன், உடனே வாயு பகவானை மனதால் நினைத்தான். உடனே அவனும் அங்கு தோன்றி, பணிந்து நின்றான். "வாயு பகவானே! இந்த்ரனிடம் சென்று இதைச் சொல். இது நாள் வரை கர்வம் கொண்டு திரிந்தது போதும். இப்போது உக்ரஸேனர் அரசாள்கிறார். எனவே உன்னிடமுள்ள ஸபைகளில் உயர்ந்ததான ஸுதர்மாவை உடனே உக்ரஸேனருக்குக் கொடுத்து விடு. இனி அதில் அவரும், யாதவர்களுமே அமர்ந்து, அலங்கரிப்பர்" என்று வாயு பகவானிடம் கட்டளையிட்டான் க்ருஷ்ணன்.

இந்தத் தகவலை வாயு சசியின் கணவனிடம் கூறியதும் அவனும் அதற்கு அடிபணிந்து உடனே அப்படியே செய்து விட்டான். அதை வாயுவிடமிருந்து பெற்று உக்ரஸேனருக்கு அர்ப்பணித்தான் க்ருஷ்ணன். நகைகளால் அலங்கரிக்கப் பெற்றிருந்த அந்த ஸபையில் அமர்ந்து யாதவர்கள் க்ருஷ்ணனின் புஜ பலத்தையே நம்பி, பல தேவ போகங்களையும் பெற்றுத் திளைத்தனர். இதன் பின் உபனயனம் செய்விக்கப் பெற்ற இரு குழந்தைகளும், காசியில் பிறந்து, அவந்தீயில் வாழ்ந்து வந்த ஸாந்தீபனி என்பவரிடம் குருமுகமாகக் கல்வி கற்கச் சென்றனர். அங்கு முறைப்படி நாள் தவறாமல் குருவிற்குப் பணிவிடை செய்து கொண்டு, முறைப்படி வேதங்கள், சாஸ்த்ரங்கள், தனுர்வேதம், உயர்ந்த அஸ்த்ரங்களின் ப்ரயோக ரஹஸ்யங்கள், ராணுவ விஷயங்கள் என அறுபத்து நான்கு கலைகளையும் அறுபத்து நாட்களிலேயே கற்றுத் தேர்ந்தனர்.

இப்படி மனித சக்திக்கு அப்பாற்பட்ட இவர்களது திறமையைக் கண்டு, ஸூர்ய, சந்த்ரர்களே தனக்கு சிஷ்யர்களாக வந்தது போல் சாந்திபனியே ஆச்சர்யமடைந்தார். தங்கள் படிப்பை முடித்துக் கொண்ட இருவரும் குருவிடம் வந்து விருப்பமான குரு தக்ஷிணையைக் கேட்டுப் பெறுமாறு வேண்டி நின்றனர். இவர்களது அமானுஷ்யமான திறமைகளை அறிந்திருந்த சாந்திபனியும் சாதுர்யமாக, முன்பு ப்ரபாஸ தீர்த்தத்தில் (ஸமுத்ரம்) இறந்து போன தன் மகனையே குருதக்ஷிணையாக மீண்டும் உயிருடன் வேண்டினார். ராம, க்ருஷ்ணர்களும் சிறிதும் தயங்காது அதை நிறைவேற்ற ஆயுதங்களோடு கடற்கரைக்குச் சென்றனர்.

இவர்களை இப்படி ஆயுதபாணிகளாகக் கண்ட ஸமுத்ரராஜன் தானே உருக்கொண்டு வெளியே வந்து இவர்களுக்கு அர்க்யாதிகளைக் கொடுத்து உபஸரித்து "சாந்தீபனியின் புதல்வனை நான் ஒன்றும் செய்து விட வில்லை. என்னுள் பஞ்சஜனன் என்ற அஸுரன் சங்கின் உருவில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் தான் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டு வந்தவன். இன்னும் அவன் இங்கு தான் இருக்கிறான்" என்று கூறினான். இதைக் கேட்டதும் கண்ணன் கடலினுள் சென்று பஞ்சஜனனைக் கொன்று, அவன் எலும்பினாலான பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அதைத் தன் வாயில் வைத்து ஊதியபோது எழுந்த பேரொலி அஸுரர்கள் பலத்தைக் குறைத்து, தேவபலத்தை அதிகரித்தது. அதர்மங்களையும் அழித்தது. இந்த சங்கத்துடன் வெளிவந்த க்ருஷ்ணன், ஸமுத்ரத்தில் சிறுவன் கிடைக்காததால், அண்ணனோடு யமப் பட்டணம் சென்று, அங்கு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையும் முன்பிருந்த உடலோடு மீட்டுக் கொண்டு வந்து, தங்கள் ஆசார்யருக்குக் குருதக்ஷிணையாகக் கொடுத்து விட்டு, மீண்டும் உக்ரஸேனன் அரசாட்சியில் அனைவரும் ஸந்தோஷமாக வஸித்து வரும் மதுரை மாநகருக்கு வந்தருளினார்கள்.

No comments:

Post a Comment