05_24. "எதிர்க்க முடியாத வல்லமை பொருந்திய அரசே! நீ விரும்பும் லோகங்களுக்கெல்லாம் சென்று போகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒரு உயர்ந்த குலத்திலே முன் ஜன்ம நினைவோடு நீ பிறப்பாய். அந்தப் பிறவியில் என் அருளால் முடிவில் மோக்ஷத்தை அடையப் போகிறாய்" என்று முசுகுந்த சக்ரவர்த்திக்கு பேரருள் புரிந்தான் க்ருஷ்ணன். இந்த நிச்சயத்தைப் பெற்றுக் கொண்ட முசுகுந்தன் அச்யுதனை நமஸ்கரித்து விட்டு குகையை விட்டு வெளியே வந்தான். யுகம் மாறிவிட்டது. மனிதர்களின் குள்ள உருவத்தைக் கண்டு கலியுகம் வந்து விட்டதை அறிந்து கொண்ட முசுகுந்த சக்ரவர்த்தி, மேலும் வைராக்யத்தை வேண்டித் தவம் புரிவதற்காக நர, நாராயணர்களின் இருப்பிடமான கந்தமாதனத்திற்குச் சென்று விட்டான்.
இப்படித் தந்திரமாக காலயவனனை ஒழித்துக் கட்டிய க்ருஷ்ணன், மதுராவை சூழ்ந்திருந்த யானைகள், குதிரைகள், ரதங்கள் நிறைந்திருந்த அவனது படைகளையும் கைப்பற்றி, அதை த்வாரகையில் இருந்த உக்ரஸேன மஹாராஜருக்கு அர்ப்பணித்தான். அதன் பின் யது வம்சம் அங்கு எந்த பகை பயமும் இன்றி வாழ்ந்திருந்தனர். இப்படியாக யுத்தம் முடிந்ததும் பலராமர் நந்தகோகுலத்தில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க விரும்பி, அங்கு சென்று பெரியோர்களால் தழுவப்பெற்று, சிறியோர்களைத் தழுவி, தனக்குச் சமமானவர்களோடு சிரித்துப் பேசியும் மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் க்ருஷ்ணனிடம் ஊடல் கொண்டும், பொறாமையோடும் அவனைப் பற்றியும் பலராமரிடம் விசாரித்தனர்.
"எங்களைப் பிரிந்து போன கண்ணன் அங்கு மதுரை நகரத்துப் பெண்களுடன் நலமாக இருக்கிறானா. எங்கும், எவரிடமும் அவன் நிலைத்த அன்பு கொள்ள மாட்டானே அவன். அந்தப் பெண்களோடு அவர்களது செயல்களைப் பாராட்டும் போது, அவர்களை மகிழ்விக்க எங்களது பட்டிக்காட்டுப் பழக்கங்களைப் பரிஹஸிக்காமல் இருக்கிறானா. எங்களைப் பற்றி நினைக்கவாவது செய்கிறானா. அவனோடுப் பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருந்தோம். அவன் அம்மாவைப் பார்க்கவாவது இங்கு ஒரு முறை வருவானா. ஆனால் ஏன் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். வேறு எதையாவது செய்து பொழுதைப் போக்கலாம். நாம் தான் அவன் நினைவாக வருந்திக் கொண்டிருக்கிறோம்.
அவனுக்காக அம்மா, அப்பா, ஸஹோதரன், புருஷன், உறவினர் என்று அனைத்தையும் மதிக்காதிருந்தோம். ஆனால் அவன் நன்றி மறந்தவர்களின் இலக்கணமாக இருக்கிறான். அதுதான் தாமோதரன், அதுதான் கோவிந்தன். நகரத்துப் பெண்களிடம் மனதைக் கொடுத்தவன், நம்மைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாதவன். நம்மை அலக்ஷ்யம் செய்தவன்" இப்படிக் கொஞ்சமும் பொறுமையின்றி, கோபத்தோடும், வருத்தத்தோடும், ஏக்கத்தோடும் தங்கள் நிலையை வெளிப்படுத்துகின்றனர். நிலை கடந்து பலராமரையே கண்ணனாக நினைக்கின்றனர். பின் அதையுணர்ந்து வெட்கத்தால் சிரிக்கின்றனர். இவர்களது பல நிலைகளை இப்படி கண்ட பலராமர் இவர்களிடம் மிகவும் குழைந்து போகிறார். க்ருஷ்ணனின் ஆறுதலான, ஏற்றுக் கொள்ளத்தக்க, ஆசையான, வசீகரமான, குணமான செய்திகளை அவர்களுக்குக் கூறி அவர்களைத் தேற்றுகிறார். இப்படியாக இடையர்களோடு பேசியும், விளையாடியும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
Thursday, February 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment