Thursday, February 18, 2010

விஷ்ணு புராணம் - 93

05_13. தேவேந்த்ரன் புறப்பட்டபின், கோவர்த்தனகிரியை க்ருஷ்ணன் எளிதாகத் தூக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்திருந்த கோபர்கள் "க்ருஷ்ணா, பெரும் ஆபத்திலிருந்து எங்களையும், பசுக்களையும் மலையைக் குடையாய்ப் பிடித்துக் காத்தாய். உன் செயல் ஆச்சர்யகரமான குழந்தைத் தனமாயிருக்கிறது. இடையர் பிறப்பிற்குச் சம்பந்தம் இல்லாத, தெய்வீகச் செயல்களையே புரிந்து வருகிறாய். இது எப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. நீயே உண்மையைச் சொல்லி விடு. முன்பு பெரும் யமுனையின் மடுவில் காளியனை ஒடுக்கினாய். ப்ரலம்பனைக் கொன்றாய். இப்போது மலையைத் தூக்கி எங்களைக் காத்திருக்கிறாய். இந்த அரிய செயல்களைக் கண்டு நாங்கள் ஸந்தேஹத்தால் மிகவும் குழம்பியுள்ளோம்.

ஹரியின் பாதங்களில் ஆணையாய் உண்மையைச் சொல்கிறோம். எல்லையற்ற வல்லமை படைத்தவனே! உன்னுடைய பெரும் பலத்தை கண்ட எங்களால் உன்னை மனிதனாக நம்ப முடியவில்லை. இந்த சேரியில் குழந்தைகள், பெண்கள், எவருக்கும் உன் மீது அன்பு உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தாலும் செய்தற்கரிய செயல்களை நீ செய்துள்ளாய். ஆயர் குடியில் பிறந்ததையும், பிறப்பிற்கு ஒவ்வாத வீர்யத்தையும் நினைக்கும் போதெல்லாம் மிகுந்த ஸந்தேஹம் உண்டாகிறது. நீ யாரோ தேவ, ராக்ஷஸ, யக்ஷ, கந்தர்வனாகவோ தான் இருக்க முடியும். யாராயிருந்தாலும் எங்கள் உறவினன் நீ. அது ஒன்றே போதும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்" என்று கூறினர்.

சிறிது நேரம் இந்த வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டவன் போல் அமைதி காத்த க்ருஷ்ணன் "கோபர்களே, நீங்கள் என்னை உறவினன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறீர்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் உங்கள் சம்பந்தத்தை விரும்பி உங்கள் குலத்தில் பிறந்திருக்கும் என்னை ஏன் தேவன், தானவன் என்றெல்லாம் கூறவேண்டும். நான் கொண்டாடத் தக்கவனாகவே இருந்து, என் சம்பந்தத்தால் உங்களுக்கும் வெட்கமும் உண்டாகாமலிருந்தால் இந்த ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டாம். நான் தேவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, தானவனோ அல்ல. உங்கள் உறவினனே. வேறு வகையில் என்னை நினைக்காதீர்கள்" என்று கோபமாகக் கூறுவது போல் கூறினான். இப்படி இவன் கோபமாய்க் கூறியதைக் கண்ட கோபர்கள் மேலே எதுவும் பேசாமல் மௌனமாகி, க்ருஷ்ணனை உறவினனாகப் பெற்றதற்கு மகிழ்ந்து அவனோடு காட்டிற்குள் சென்றனர்.

இதன் பின் ஒருநாள் ஆகாயம் தெளிவாயிருக்க, சரத் காலத்து சந்த்ரன் உலா வந்து கொண்டிருக்க, அல்லிப் பூக்கள் நீர் நிலைகளெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்க, வண்டுகள் பாட என்று இப்படி எல்லாம் அழகாக இருந்த நிலையில் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடக் கருதினான். வீட்டை விட்டு வனத்திற்கு வந்து, கோபிகைகளையும் வீட்டிலிருந்து அங்கு வரவழைக்கக் கருதி புல்லாங்குழலில் ஏற்ற, இறக்கங்கங்களுடன் அவர்கள் விரும்பும் இனிய கானம் செய்தான். இதன் இனிய ஓசையைக் கேட்டதும் கோபிகைகளும் காவல்களைக் கடந்து தங்கள் வீட்டை விட்டு க்ருஷ்ணனிடம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒருத்தி அந்தக் குழலோசைக்கேற்ப தானும் மெல்லப் பாட, இன்னொருத்தி அவனையே மனதில் நினைத்திருக்க, மற்றொருத்தி "க்ருஷ்ணா! க்ருஷ்ணா" என்று அவன் பெயரைக் கூறிக் கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி க்ருஷ்ணன் பக்கம் சென்று நிற்க என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவன் குழலோசையை அனுபவித்திருந்தனர். இன்னொரு பெண் மாமனார், மாமியாருக்குப் பயந்து தன் வீட்டிற்குள்ளேயே அவன் நினைவாகவே இருந்தாள். அவனையே நினைத்திருந்தலால் அவள் செய்த புண்யங்களின் பலனும் கழிந்து, வீட்டை விட்டு வெளியேறி அவனிடம் சென்று சேர முடியாத துக்கத்தில் இருந்ததால் அவள் பாபப் பலன்களும் கழியப் பெற்று அந்த இரவிலேயே அவள் பகவத் த்யானத்தால் முக்தியும் அடைந்தாள்.

இப்படி எல்லோரோடும் க்ருஷ்ணன் அந்த இரவில் ராசலீலை செய்து கொண்டிருக்கையில் அவர்கள் கண்களிலிருந்து மறைந்தான். க்ருஷ்ணன் திடீரென மறைந்ததால் துயருற்று வ்ருந்தாவனத்தில் அங்குமிங்கும் அலைந்த கோபியர் அவன் லீலைகளைத் தாங்களே ஒவ்வொருவராக செய்து காட்டி மகிழத் தொடங்கினர். ஒருத்தி "தோழி, நானே க்ருஷ்ணன். அவனைப் போலவே அழகாய் நடக்கிறேன் பாருங்கள்" என்றாள். இன்னொருத்தி "நான் தான் க்ருஷ்ணன். அவனைப் போலவே பாடுகிறேன். அதைக் கேளுங்கள்" என்றாள். இன்னொருத்திக் காளியனாக ஒருத்தியைப் பாவித்து, "துஷ்டா! காளியா! நில்! ஓடாதே!" என்றவாறு தோள் கொட்டி அவளைப் பிடித்து இழுத்துக் காண்பித்தாள். நான்காமவள் இதேபோல் கோவர்த்தனகிரியைத் தூக்குவது போலவும், ஐந்தாமவள் தேனுகாவதத்தையும் இப்படி இவர்கள் க்ருஷ்ணனின் பற்பல லீலைகளைப் பாவித்துக் காண்பித்துக் கொண்டு திளைத்திருந்தார்கள்.

இப்படி இவர்கள் வ்ருந்தாவனத்தில் சுற்றி வருந்தி வருகையில் ஓரிடத்தில் த்வஜ, வஜ்ர ரேகைகள் பொருந்திய இரு காலடிச் சுவடுகளைக் கண்டாள் ஒருத்தி. மிகமகிழ்ந்த அவள் "இதோ க்ருஷ்ணனின் காலடிகள், இங்கே பாருங்கள்" என்று மற்றவர்களுக்கும் காண்பித்தாள். சிறிது தொலைவில் இன்னொருவரின் காலடிகளும் அதன் கூட இருந்தன. உடனே அவள் "இதோ பாருங்கள், க்ருஷ்ணனுடன் புண்யம் செய்த ஒருத்தியும் சென்றிருக்கிறாள். நமக்குக் கிடைக்காத பாக்யம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. சிறிய இந்த காலடிகள் நெருங்கி இருப்பதால் மெதுவாய் நடக்கும் இயல்புடையவள் அவள்" என்றும் கூறுகிறாள்.

இன்னும் சிறிது தூரத்தில் க்ருஷ்ணனின் முன் பாதப்பகுதிகள் மட்டும் இருப்பதையும், அருகில் பூச்செடிகள் இருப்பதையும் கண்ட அவள் "உடன் சென்றிருப்பவள் தனக்குப் பூக்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். இவன் அவள் ஆசையை நிறைவேற்ற உயரத்தில் இருக்கும் அந்தப் பூக்களை முன்னங்கால்கள் மட்டும் பூமியில் படுமாறு எழும்பிப் பறித்துக் கொடுத்துள்ளான், அதனால் தான் கால்களின் பின் பகுதிகள் இங்கில்லை, பாருங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றாமல் அவள் ஆசையை மட்டும் நிறைவேற்றி இருக்கிறான், அவள் பாக்யமே பாக்யம்" என்று பெருமூச்சு விடுகிறாள். இன்னும் ஒரு இடத்தில் பூக்கள் கீழே சிதறி, காலால் மிதிபட்டிருப்பதைக் கண்டு "அவன் அவளுக்கு இங்கேதான் உட்கார வைத்து அலங்காரம் செய்திருக்கிறான் போலிருக்கிறது, முன் பிறவியில் இவள் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்திருப்பாள், அதன் பலனே இது" என்று பொருமுகிறாள்.

சிறிது தூரத்தில் கண்ணன் காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன. உடனே ஆராய்ச்சி செய்யும் இந்தப் பெண் "கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணனே பூக்களைப் பறித்து அவள் விரும்பியபடியெல்லாம் அவளுக்கு அலங்காரம் செய்து விட்டான் அல்லவா. அதனால் யாருக்கும் கிடைக்காத இந்த பாக்யம் நமக்கே கிடைத்தது என்று அவளுக்குக் கர்வம் வந்து விட்டது. கர்வம் கொண்டதால் அவளை விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளான். அதனால் தான் அவள் காலடிகளைக் காணவில்லை" என்கிறாள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் "இங்கே பாருங்கள், க்ருஷ்ணனின் காலடிகளைத் தொடர்ந்து இன்னொரு காலடிகளும் அழுந்தித் தெரிகின்றன. ஒருத்தியை அவன் விட்டு விட்டுத் தனித்துச் செல்வதை அறிந்த இன்னொருத்தி ஓடிச் சென்று கண்ணனைப் பிடித்திருக்கிறாள் போலும். அதனால்தான் இவள் காலடிகள் அழுந்தித் தெரிகின்றன. இதோ இங்கே, இங்கே அவள் காலடிகள் ஒழுங்கீனமாக இங்குமங்கும் காணப்படுகின்றன. தன்னை நெருங்கி விட்ட அவளைத் தன் கைகளால் பிடித்திழுத்துக் கூட்டிச் சென்றிருக்கிறான் கண்ணன். இவளும் தன்னிலையிழந்து அவனோடு லயித்துச் சென்றிருக்கிறாள். அதனால் தான் இப்படி தாறுமாறாக இருக்கின்றன இங்கே அவள் கால்கள்" என்கிறாள்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்ணின் காலடிகள் தலைகீழாகத் தெரிவதைக் கண்ட அவள் "இவள் கண்ணன் கையைப் பிடித்ததோடு சரி போலும், வேறெந்த பாக்யத்தையும் அடையாமல் அந்த மோசக்காரனால் இவள் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறாள். அது தான் இது" என்கிறாள். "இங்கேயே இரு, நாம் விளையாடி மகிழ நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவளை இங்கேயே விட்டு, வேகமாக ஓடிச் சென்றிருக்கிறான் இந்த அடர்ந்த கானகத்துள், இதற்குள் நிலவு கூடப் புகமுடியாது, இனி அவன் காலடிகளை நம்மால் தொடர முடியாது" என்று முடிக்கிறாள் அவள். இப்படி அவனைத் தேடிச் சென்ற அவர்கள் இப்போது வேறு வழியின்றி மீண்டும் வந்த வழியே திரும்பி, யமுனைக் கரையை அடைந்து அங்கேயே அவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி, விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கண்ணன் இவர்களின் பக்திக்கு மகிழ்ந்து மீண்டும் தோன்றி அவர்களை நோக்கி பரவசத்துடன் வரத்தொடங்கினான். அவன் வருவதைக் கண்ட ஒருத்தி வேறொன்றும் தோன்றாது "க்ருஷ்ணா! க்ருஷ்ணா" என்றே கூறிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி அவனை ஊடலுடன் புருவங்களை நெரித்துத் தன் வண்டுக் கண்களால் அவன் முகமாகிய தாமரையை நுகர்ந்து கொண்டிருந்தாள். இன்னொருத்தி கண்களால் அவனை மனதில் இருத்தி, மீண்டும் வெளியே சென்று விடாதவாறு கண்களை மூடிக் கொண்டு, அவனையே த்யானித்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்ணனும் சிரித்துப் பேசியும், தானும் புருவங்களை நெரித்தும், கைகளால் தழுவியும் தக்கபடி சமாதானம் செய்தான். இதனால் அவர்களும் மனக்கவலை தீர்ந்து மகிழ்வுற்றனர்.

இதன் பின் ராஸ லீலை (நர்த்தனமாடும் பெண்களை வட்டமாக நிற்க வைத்து விளையாடும் ஒரு விளையாட்டு) செய்ய விரும்பினான். ஆனால் ஒருவரும் அதற்கு இசையாதவாறு அவனிடமே, அவனை ஸ்பர்ஸித்துக் கொண்டே நின்றிருந்தனர். க்ருஷ்ணன் தானே ஒவ்வொருத்தியின் கையையும் பிடித்து இன்னொருத்தியின் கையோடு சேர்த்துப் பிடிக்க வைத்தான். அவன் கை பட்டதில் தங்களை மறந்த அவர்கள் க்ருஷ்ணன் தன் கையையே பிடித்துக் கொண்டிருப்பதாக எண்ணினர். மற்றவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாக அறியவில்லை. க்ருஷ்ணனும் தன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் இருப்பது போலவே தோற்றமளித்தான். க்ருஷ்ணன் சரத் காலத்து சந்த்ரனையும், அழகு பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளையும் பாட, கோபியர்களோ சலிப்பின்றி அவன் பெயரையே பாடிக் கொண்டிருக்க, அவர்கள் வளையொலிகளோடு சேர்ந்து ராஸக்ரீடை வளர்ந்தது.

இடையில் களைப்படைந்த இந்த பெண்கள் கண்ணன் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டும், அவன் தாடையோடு தங்கள் தாடையை சேர்த்து வைத்துக் கொண்டும், அவனைக் கட்டி அணைத்துக் கொண்டும் இப்படி ஒவ்வொரு முறையில் தங்கள் ச்ரமத்தைத் தீர்த்துக் கொண்டனர். அவன் பாடுவதை இரு முறை திரும்பப் பாடிக் கொண்டும், அவனோடு சேர்ந்தோடியும், அவனை எதிர்த்துச் சேர்ந்தும் பலவிதங்களில் அவனோடு ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். அவனைப் பிரியும் ஒரு நொடியும் அவர்களுக்கு ஒரு கோடி வருஷமாகத் தோன்றியது. இவ்வாறு அவர்களோடு கண்ணனும் ஆடிக் களித்தான்.

தங்கள் கணவன், தகப்பன், ஸஹோதரன் இப்படி அனைவரையும் விடுத்து அன்பிற்குரிய அவனோடே திரிந்து கொண்டிருந்தனர். எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாய், ஆத்மாவாய் இருப்பதனால் இவனோடு சேர்ந்து இப்படி விளையாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தோஷமில்லை. அவர்கள் தங்கள் ஆத்மாவோடு விளையாடி ஆத்மானுபவம் அடைந்தார்களே அன்றி வேறு புருஷனாக க்ருஷ்ணனையும், தங்கள் புருஷனை விட்டு இவனோடு விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த கோப ஸ்த்ரீகளையும் நினைப்பதில் ஒரு பொருளும் இல்லை. அவனுக்கு உலகமே உடல், இந்த கோபஸ்த்ரீகளும் அதில் அடக்கம். இந்த கோபஸ்த்ரீகள் உட்பட எல்லா உயிர்க்கும் அவனே ஆத்மா. ஆக இருவரிடத்தும் ஒரு தோஷமுமில்லை, குறையுமில்லை, அதர்மமுமில்லை.

No comments:

Post a Comment