04_20. குருவின் மற்றொரு பிள்ளையான பரீக்ஷித்திற்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என்ற நால்வர் பிறந்தனர். இன்னொரு பிள்ளையான ஜஹ்னுவின் வம்சம் ஜஹ்னு, ஸுரதன், விதூரதன், ஸார்வபௌமன், ஜயத்ஸேனன், ஆராதிதன், அயுதாயு, அக்ரோதனன், தேவாதிதி, ருக்ஷன், பீமஸேனன், திலீபன், ப்ரதீபன், ப்ரதீபனுக்கு தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் மூவரும் பிறந்தனர். தேவாபி குழந்தையாயிருக்கும் போதே தவம் புரியச் சென்று விட்டான். சந்தனு எவரைத் தொட்டாலும் அவர்கள் முதுமை நீங்கி யௌவனமடைவர், மக்களுக்கு சாந்தியையும் தருபவன் சந்தனு என்று சிறப்பு. அப்படி தர்மவழியில் அரசாண்டு வந்தான் சந்தனு.
இப்படியிருக்கும் சந்தனுவின் ராஜ்யத்தில் பனிரெண்டு வருடங்கள் மழை பொய்த்தது. பெரிதும் கவலையுற்ற சந்தனு ப்ராஹ்மணர்களிடம் தான் செய்த தவறென்ன. ஏன் இப்படி நடந்தது என்று கேட்க, "அண்ணன் நலமுடன் இருக்கையிலேயே அவனுக்குரிய ராஜ்யத்தை நீ ஏற்று நடத்துவதே நீ செய்திருக்கும் தவறு. நீ பரிவேத்தாவாக (அண்ணன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தான் திருமணம் செய்து கொண்ட தம்பி)இருக்கிறாய். இந்த காரணத்தினாலேயே மழை பொய்த்து விட்டது. உடனே இந்த போகங்களையும், ராஜ்யத்தையும் தேவாபியிடமே விட்டு விடு" என்கின்றனர் அவர்கள். இதைக் கேட்ட சந்தனுவும், அவர்களோடு அண்ணாவைத் தேடி நாட்டை ஒப்படைப்பதற்காகக் கானகம் சென்றான்.
அச்மராவி என்ற சந்தனுவின் மந்திரிக்கு தர்மவானான சந்தனுவே ஆள வேண்டும் என்று விருப்பம். அவன் இதற்காக என்ன செய்வது என்று ஆராய்ந்து, தேவாபியை பதிதனாக்கி விடலாம், அப்படிச் செய்து விட்டால் அதைக் காரணம் கொண்டு தம்பியே அரசாளலாம் என்ற சாஸ்த்ரத்தைக் கொண்டு மீண்டும் சந்தனுவே அரசாள்வார் என்று அதன்படி சிலரை சந்தனுவிற்கு முன்னதாகவே அனுப்பி, அவர்கள் போதனையால் தேவாபியை வேத மார்க்கத்திலிருந்து விலகச் செய்தான். இந்த நிலையில் அவனைக் கண்ட ப்ராஹ்மணர்கள் அவன் போக்கைக் கண்டு, சந்தனுவையே அரசாளும்படியும், இப்போது அது குற்றமாகாது என்றும் கூறி அழைத்து வந்து விட்டனர். மழையும் நன்கு பொழிந்தது. சந்தனுவுக்கும், கங்கைக்கும் பீஷ்மரும், சந்தனுவின் தம்பி பாஹ்லீகனுக்கு ஸோமதத்தனும், அவனுக்கு பூரி, பூரிச்ரவன், சல்யன் என்ற மூவரும் பிறந்தனர்.
பீஷ்மர் சிறந்த புகழோடும், சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். சந்தனுவுக்கும், ஸத்யவதி என்பவளுக்கும் சித்ராங்கதன், விசித்ரவீர்யன் இருவரும் பிறந்தனர். இதில் சித்ராங்கதன் அவன் பெயருள்ள கந்தர்வனாலேயே கொல்லப்பட்டான். காசி ராஜனின் பெண்களான அம்பை, அம்பாலிகை என்ற இருவரை மணந்து கொண்ட அவன் தம்பி விசித்ரவீர்யன் காம போகத்திலேயே மூழ்கி காச நோயால் இறந்தான். ஸந்ததியில்லாமல் ராஜ்யம் இருந்த இந்த நிலையில், பராசரருக்கும், ஸத்யவதிக்கும் பிறந்திருந்த வேத வ்யாஸர் தாயின் கட்டளையால் விசித்ரவீர்யன் மனைவிகளிடம் த்ருதராஷ்ட்ரனையும், பாண்டுவையும் உண்டாக்கினார். அவர்களால் அனுப்பப்பட்ட வேலைக்காரியிடம் விதுரரையும் உண்டாக்கினார்.
ஸத்யவதி தான் கன்னிகையாயிருக்கும் போதே பராசரரிடம் கூடி வேத வ்யாஸரைப் பெற்று பின் மீண்டும் பராசரரின் அருளால் களங்கமற்றவளாகவும் ஆனவள். அதன் பின்னே அவள் சந்தனுவை மணந்திருந்தாள். த்ருதராஷ்ட்ரனுக்கும், காந்தாரிக்கும் துர்யோதனன், துச்சாஸனன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தனர். பாண்டு, சூரனின் புதல்வியான குந்தியை மணம் புரிந்தான். ஒரு ஸமயம் இவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது தர்மம் தெரிந்திருந்தும், மான் வேடத்தில் களித்திருந்த ஒரு ரிஷி தம்பதியரை வேட்டையாடி விட்டான். அவர்கள் இறப்பதற்கு முன் பாண்டுவையும் மனைவியோடு கூடினால், இவ்வாறே நீயும் இறந்து போவாய் என்று சபித்து விட்டு இறந்தனர். அது முதல் அவன் சிற்றின்பத்தைத் துறந்து, பிள்ளைப் பேறின்றி இருந்தான்.
இதற்காக, தான் கன்னிகையாயிருக்கும் போதே துர்வாஸரிடமிருந்து பெற்றிருந்த மந்த்ர உபதேஸங்களைக் கொண்டு தேவர்களை வசீகரீக்கலாம் என்பதைக் கொண்டு, குந்தி அந்த மந்த்ரங்களால் இப்போது வாரிசுகளாக யமன், வாயு, இந்த்ரன் இவர்களை வசீகரித்து முறையே யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் இவர்களைப் பெற்றாள். பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்ரீயும் குந்தியிடமிருந்து ஒரு மந்த்ரத்தைப் பெற்று, அதன் மூலம் அச்வினீ தேவதைகளிடமிருந்து நகுல, ஸஹதேவனைப் பெற்றாள். பாண்டுவின் இந்த ஐந்து புதல்வர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்களை மணந்த த்ரௌபதி என்பவள் யுதிஷ்ட்ரரிடம் ப்ரதிவிந்த்யனையும், பீமஸேனனிடம் ச்ருதஸேனனையும், அர்ஜுனனிடம் ச்ருதகீர்த்தியையும், நகுலனிடம் சதாநீகனையும், ஸஹதேவனிடம் ச்ருதகர்மாவையும் பெற்றாள்.
இதைத்தவிர யுதிஷ்ட்ரருக்கும், யௌதேயீ என்பவளுக்கும் தேவகனும், பீமஸேனன் ஹிடும்பைக்கு கடோத்கசனும், பீமஸேனன் காசீக்கு ஸர்வகனும், ஸஹதேவன் விஜயாவிற்கு ஸுஹோத்ரனும், நகுலன் ரேணுமதீக்கு நிரமித்ரனும் பிறந்தனர். அர்ஜுனன நாக கன்னியான உலூபியிடம் இராவானையும், மணலூர் அரசனின் பெண் மூலம் பப்ரூவாஹனனையும் பெற்றான். தனக்குப் புத்ரனில்லாததால் மகளுக்குப் பிறந்த இந்த பப்ருவாஹனனையே தனக்குப் புத்ரனாகத் தரவேண்டும் (புத்ரிகா தர்மம்)என்று அர்ஜுனனோடு மணலூர் அரசன் செய்திருந்த ஒப்பந்தப்படி அர்ஜுனனின் மகனான பப்ருவாஹனன் மணலூர் அரசனுக்கே பிள்ளையானான். அர்ஜுனனுக்கும் ஸுபத்ரைக்கும் பிறந்த அபிமன்யு இளமையிலேயே அதிரதன் என்ற பராக்ரமனாயிருந்தான். இவனுக்கும் உத்தரைக்கும் பரீக்ஷித் பிறந்தான்.
வம்சமே அழிந்திருந்த போது பிறந்ததால் பரீக்ஷித் என்ற பெயர் பெற்றிருந்தான் இவன். தாய் வயிற்றில் இருக்கும்போதே அச்வத்தாமாவின் அஸ்த்ரத்தால் அழிந்து போன இந்த பரீக்ஷித், மனித உருவில் அவதரித்திருக்கும் தேவரும், மூவரும், அஸுரரும் துதிக்கும் க்ருஷ்ணனின் மஹிமையால் மீண்டும் உயிர் பிழைத்தான். இவனே இப்போது இந்த பூமண்டலத்தைச் செழிப்போடும், சிறப்போடும் ஆண்டு வருகிறான்.
Monday, February 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment