Tuesday, February 2, 2010

விஷ்ணு புராணம் - 69

04_13. ஸத்வதனுக்கு பஜனன், பஜமானன், திவ்யன், அந்தகன், தேவாப்ருதன், மஹாபோஜன், வ்ருஷ்ணி என்ற புத்ரர்கள் பிறந்தனர். இவர்களில் பஜமானனுக்கு நிமி, க்ருகணன், வ்ருஷ்ணி என்ற மூவர் ஒரு மனைவியிடமும், சதஜித், ஸஹஸ்ரஜித், அயுதஜித் என்ற மூவர் மற்றொரு மனைவியின் வயிற்றிலும் பிறந்தனர். தேவாப்ருதனுக்குப் பப்ரு பிறந்தான். இந்த தேவாப்ருதனும், பப்ருவும் மிகவும் புகழ் பெற்றிருந்தனர். பக்கத்திலும், தூரத்திலும் இவர்களின் புகழுரைகள் ஒரே போல் இருந்தது. பிள்ளை மனிதர்களில் சிறந்தவன் என்றும், தகப்பன் தேவர்களுக்கு ஒப்பானவன் என்றும் போற்றப்பட்டனர். இவர்களிடம் உபதேசம் பெற்று எழுபத்து நாலாயிரம் பேர்கள் மோக்ஷம் பெற்றனர்.

மஹா போஜனுக்குப் பிறந்தவர்களே போஜர்கள். இவர்கள் ம்ருத்திகாவரம் என்ற நகரில் வஸித்ததால் மார்த்திகாவரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வ்ருஷ்ணிக்கு ஸுமித்ரன், யுதாஜித் என்ற இரு பிள்ளைகள். ஸுமித்ரனுக்கு அனமித்ரனும், அவனுக்கு நிக்னனும், அவனுக்கு ப்ரஸேனன், ஸத்ராஜித் என்ற இருவரும் பிறந்தனர். இந்த ஸத்ராஜித் ஸூர்ய உபாஸகன். ஸூர்யனின் நண்பன். ஒரு ஸமயம் கடற்கரையில் நின்று ஸூர்யனைத் துதிக்கையில், அதனால் மகிழ்ந்த ஸூர்ய பஹவான் அவனுக்குத் தன் தோற்றத்தைக் காண்பித்தார். ஆனால் ஸத்ராஜித்தால் அந்த உருவை அறிந்து கொள்ள முடியவில்லை.

எனவே "பகவானே! வானில் எப்படி உருண்டையாய் உள்ளீரோ அதோ போலவே என் முன்னேயும் காட்சி அளிக்கிறீர். எப்படி ஸ்தொத்ரம் செய்தாலும் உங்கள் உருவை அறிந்து கொள்ள முடியவில்லை. அனுக்ரஹித்துத் தங்கள் ஸ்வரூபத்தைக் காட்டுங்கள்" என்று வேண்டிக் கொண்டான். இதைக் கேட்ட ஸூர்ய பகவான் தான் அணிந்திருக்கும் ஸ்யமந்த்க மணியாலேயே இவனால் தன்னைக் காண முடியவில்லை. கூசி நிற்கிறான் என்பதை அறிந்து அதை எடுத்து மறைத்துக் கொண்டார். இப்போது சிறிது சிவந்ததும், குறுகியதுமான ஸூர்யனையும், அவரின் பொன்னிறம் போன்ற கண்களையும் ஸத்ராஜித் கண்டான். ஸூர்யனை இன்னும் மகிழ்வுடன் துதித்து வணங்கினான்.

இவன் துதியால் மகிழ்ந்த ஸூர்யன் வரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூறினார். ஸத்ராஜித் மிகுந்த ப்ரகாசம் பொருந்திய அந்த ஸ்யமந்தக மணியைத் தனக்குத் தந்து விடுமாறு கேட்டு அதைப் பெற்றுக் கொண்டு விட்டான். இந்த ரத்னத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு, மிகுந்த ப்ரகாசத்தோடு த்வாரகை சென்றான். த்வாரகாவாஸிகள் ஸூர்ய பகவானே தங்களைத் தரிஸிக்க இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று க்ருஷ்ணனிடம் கூறினர். அவர் அவர்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, பயமின்றி அவனைத் தரிஸிக்கச் சொன்னார். அதன் பின் தன்னிடம் சேர்ந்த ஸத்ராஜித்திற்கு, இந்த ஸ்யமந்தகம் தினம் தினம் எட்டு பாரம் பொன்னைத் தந்து கொண்டிருந்தது. மேலும் இதன் மஹிமையால் அவன் ராஜ்யத்தில் வ்யாதி, பாம்பு, நெருப்பும், நீர், பஞ்சம் இவைகளாலுண்டாகும் பயங்கள் எதுவும் இல்லாதிருந்தது.

க்ருஷ்ணன் ஸ்மந்தகத்தைக் கண்டதிலிருந்தே "இதைப் பறித்து ராஜா உக்ரஸேனருக்குத் தர வேண்டும், ஆனால் வீணாக குல பேதம் வந்து விடும்" என்று நினைத்து மௌனமாயிருந்தான். க்ருஷ்ணனின் விருப்பத்தையறிந்த ஸத்ராஜித், ஸ்யமந்தகத்தைத் தன் ஸஹோதரன் ப்ரஸேனனிடம் கொடுத்து விட்டான். சுத்தக் குறைவுள்ளவர் இந்த மணியைத் தரித்தால் அது அவர்களைக் கொன்று விடும். ப்ரஸேனன் இப்படிப்பட்டவன். எனவே அவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது ஒரு சிங்கம் இவனைக் கொன்று மணியை வாயில் கவ்விக் கொண்டு ஓடி விட்டது. அதனிடமிருந்து ஜாம்பவான் என்ற கரடியரசன், சிங்கத்தைக் கொன்று மணியைத் தன் குழந்தை ஸுகுமாரகனுக்கு விளையாடக் கொடுத்து விட்டது. இதையறியாமல் யாதவர்கள் க்ருஷ்ணன் தான் ப்ரஸேனனைக் கொன்று விட்டான் என்று நினைத்தனர்.

இவர்கள் எண்ணத்தை அறிந்த க்ருஷ்ணன் அபவாதத்தைப் போக்கிக் கொள்ளவும், ப்ரஸேனன் நிலையறியவும் தானே அவர்களுடன் காட்டிற்குள் சென்றார். வழியில் அனைவரும் ப்ரஸேனனையும், சிங்கத்தின் காலடிகளையும் கண்டனர். அதன் பின் சிங்கத்தின் காலடிகளைத் தொடர்ந்து சென்ற போது இறந்து கிடந்த சிங்கத்தையும், கரடியின் காலடிகளையும் கண்டனர். அதைத் தொடர்ந்து சென்ற போது அது ஒரு குகையில் போய் முடிந்தது. ஸைன்யங்களை மலைவாசலிலேயே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற க்ருஷ்ணர் அங்கு ஒரு பெண் ரத்னத்தைக் காட்டி குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டார். "ப்ரஸேனனைக் கொன்று இந்த ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்ற சிங்கத்தைக் கொன்று நம் ஜாம்பவான் அதை உனக்குக் கொடுத்திருக்கிறார், பார் இதை, இது உன்னுடையது" என்று அவள் கூறிக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து உண்மைகளைத் தெரிந்து கொண்ட க்ருஷ்ணனை அந்தப் பெண்ணும் பார்த்து விட்டாள். புதியதாக ஒருவனைப் பார்த்ததும் பயத்தில் அலறிய அவள் குரல் கேட்டு ஜாம்பவானும் அங்கு வந்தார். அவருக்கும் க்ருஷ்ணனுக்கும் இருபத்தொரு நாட்கள் பயங்கர யுத்தம் நடந்தது. வெளியே ஏழெட்டு நாட்கள் காத்திருந்த யாதவர்கள் க்ருஷ்ணன் ஒருவருடனும் இவ்வளவு காலம் சண்டை செய்ததில்லை. எனவே அவன் குகைக்குள்ளேயே இறந்து விட்டான் என்று உறுதி செய்து, அதை த்வாரகையிலும் சென்று பரப்பினர். இதைக் கேட்ட க்ருஷ்ணனின் உறவினர்களும் ச்ரத்தையும் க்ருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய உத்தர க்ரியைகளைச் செய்தனர்.

இந்த ச்ராத்தங்களால் தெம்பும், ப்ராணனும் வலுத்தது க்ருஷ்ணனுக்கு. இதே ஸமயம் ஜாம்பவானும் உணவின்றி வலுவிழந்து, க்ருஷ்ணனை வணங்கி, "தாங்கள் தேவ, தானவ, ராக்ஷஸ, கந்தர்வர் என எவராலும் வெல்ல முடியாதவர் போலும். உம்மை மனிதர்களோ, விலங்குகளான நாங்களோ வெல்ல இயலாது. நீங்களும் எங்கள் ராமனைப் போல நாராயணனின் அவதாரமாயிருக்க வேண்டும்" என்று துதித்தார். க்ருஷ்ணனும் பூபாரம் குறைப்பதற்காகத் தான் அவதரித்துள்ளதைத் தெரிவித்து, ஜாம்பவானை இறுகத் தழுவி, அவர் களைப்பைப் போக்கினார். விஷயத்தை முழுதும் அறிந்து கொண்ட ஜாம்பவான் மகிழ்ச்சியில் திளைத்தார். அதிதிக்கு உபசாரங்களைச் செய்து, தன் பெண்ணான ஜாம்பவதியையும் முறைப்படி கன்யாதானமாகக் கொடுத்தார். ஸ்யமந்தகத்தையும் க்ருஷ்ணனுக்கேக் கொடுத்தார்.

இறந்து விட்டதாக நினைத்திருந்த க்ருஷ்ணனை ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் கண்டு பெரும் உபஸரிப்புடன் வரவேற்றனர் த்வாரகாவாஸிகள். ஸபையில் அனைவர் முன்பாகவும் நடந்தவைகளை விவரித்துக் கூறிய க்ருஷ்ணர் ஸ்யமந்தகத்தை மீண்டும் ஸத்ராஜித்திடமே கொடுத்து விட்டு, ஜாம்பவதியுடன் அந்தப்புரம் சென்றார். க்ருஷ்ணனின் இந்த உதார குணத்தால் மிகவும் வெட்கப்பட்ட ஸத்ராஜித் தன் பெண் ஸத்யபாமையை க்ருஷ்ணனுக்கே மணம் முடித்தான். ஸத்யபாமாவை ஏற்கனவே அக்ரூரன், க்ருதவர்மா, சததன்வா முதலானவர்கள் கேட்டிருந்தனர். ஸத்ராஜித்தின் இந்த முடிவைக் கேட்ட அவர்கள் சததன்வாவைத் தலைமையாக்கி அவனைப் போருக்குத் தூண்டினர்.

"நாம் ஏற்கனவே கேட்டிருந்தும் பெண்ணை நமக்குத் தராமல் க்ருஷ்ணனுக்குத் தந்திருக்கிறான் ஸத்ராஜித். எங்களை மதித்திராவிடினும், உன்னையாவது மதித்திருக்க வேண்டும். எனவே இனி ஸத்ராஜித் இருப்பதில் ப்ரயோஜனமில்லை. நீ அவனைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் எடுத்துக் கொள். க்ருஷ்ணன் எதிர்த்து வந்தால் நாங்கள் இருக்கிறோம்" என்று அவர்கள் சததன்வாவிடம் கூற, அவனும் இதற்கிசைந்து ஸத்ராஜித்தைக் கொல்ல ஸந்தர்பத்தை எதிர்பார்த்திருந்தான். அந்த ஸமயத்தில் பாண்டு புத்ரர்கள் வாரணாவத அரக்கு மாளிகையில் இறந்து விட்டனர் என்ற செய்தி வந்தது. அவர்கள் இறக்கவில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும், துர்யோதனனுக்குப் பாண்டவர்கள் இறப்பில் சந்தேஹம் வராமலிருப்பதற்காக அவனை துக்கம் விசாரித்து விட்டு வருவதற்காக க்ருஷ்ணன் வாரணாவதம் சென்றான்.

இந்த ஸந்தர்பத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஸத்ராஜித்தைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் அபஹரித்து விட்டான் சததன்வா. இதையறிந்த ஸத்யபாமை மிகுந்த துயரமும், கோபமும் கொண்டு தன் தேரிலேறி வாரணாவதம் வந்தாள். கணவனிடம் சென்று "என்னை உங்களுக்கு மணம் முடித்த கோபத்தில் சததன்வா என் தந்தையைக் கொன்று உலகின் இருளைப் போக்கும் அந்த உயர்ந்த ஸ்யமந்தகத்தையும் எடுத்துச் சென்று விட்டான். இது உங்களுக்கே அவமானம். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்" என்று கூறி அழுதாள். உள்ளூர ஸத்ராஜித்தின் முடிவையும், ஸ்யமந்தகத்தையும் நினைத்து ஸந்தோஷப்பட்ட க்ருஷ்ணன் ஸத்யபாமாவிற்காகத் தன் கண்களைச் சிவப்பாகக் காட்டிக் கொண்டு "நீ சொன்னது சரியே.

இந்த அவமானம் என்னுடையதே. இதை நான் ஒருக்காலும் ஸஹிக்க மாட்டேன். இதற்குத் தீர்வு சததன்வாவின் முடிவேயாகும். அருகிலிருக்கும் மரத்தில் பறவைகள் கூடு கட்டிக் கொண்டு தொந்தரவு செய்தால் அதற்குச் சரியான தீர்வு அந்த மரத்தையே வெட்டி விடுவது தான். பக்ஷிகளைக் கொல்வதல்ல. அதேபோல் இங்கும் சததன்வாவைக் கொல்வதை விட வேறெந்த பரிஹாரமும் சிறந்ததாக இருக்காது. வேறு வழியில்லை. நீ அழாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறித் தேரிலேறி த்வாரகை திரும்பினான். அங்கு பலராமனுடன் சேர்ந்து "அண்ணா! ஸ்யமந்தகத்திற்கு இருவர் சொந்தம் கொண்டாடினர். ஒருவனைக் காட்டில் சிங்கம் கொன்று விட்டது. மற்றொருவனை சததன்வா கொன்று விட்டான். இப்போது அது பொது. எனவே சததன்வாவைக் கொன்று ஸ்யமந்தகத்தை நாமிருவரும் எடுத்துக் கொள்வோம், உடனே தேரிலேறுங்கள்" என்றான்.

இவர்களிருவரும் புறப்பட்டுத் தன்னைக் கொல்ல வருவதை அறிந்த சததன்வா, க்ருதவர்மாவிடம் ஓடினான். அவன் க்ருஷ்ணனையும், பலராமனையும் சேர்த்து என்னால் எதிர்க்க முடியாது என்று மறுத்து விட்டான். சததன்வா உடனே அக்ரூரனிடம் சென்றான். அவன் "இவர்களை தேவர்களாலும் வெல்ல இயலாது. சக்ரதாரி உலகத்தையே அடக்கி விடுவான். அஸுரர்களின் மனைவிகளை கணவனை இழந்தவர்களாகச் செய்தவர்கள் இவர்கள். எவராலும் இவர்களை வெல்ல இயலாது" என்று பயந்து மறுத்து விட்டான். வேறு வழியில்லாத சததன்வா அக்ரூரனிடமே "இந்த ஸ்யமந்தக மணியையாவதுப் பத்திரமாகக் காத்துக் கொடுக்க முடியுமா" என்று கேட்டான்.

"நீ இறக்க நேர்ந்தாலும் இது என்னிடமிருப்பதை எவரிடமும் சொல்லாமலிருப்பாயானால், நான் வைத்துக் கொள்கிறேன்" என்று நிபந்தனை விதிக்க, அதற்குட்பட்டு, ஸ்யமந்தகத்தை அக்ரூரனிடம் கொடுத்து விட்டு நாளொன்றுக்கு நூறு காத தூரம் (ஒரு காதம் தோராயமாக மூன்று மைல்கள்) ஓடக் கூடிய ஒரு பெண் குதிரையிலேறி ஓடி விட்டான் சததன்வா. பலராமனுடன் க்ருஷ்ணனும் உயர்ந்த நான்கு குதிரைகள் பூட்டிய தேரிலேறி அவனைத் துரத்தினான். நூறு காதம் முடிந்து மிதிலைக்கருகில் மிகவும் களைப்படைந்த சததன்வாவின் குதிரை இறந்து விழுந்து விட்டது. சததன்வா கால்களாலேயே ஓடத் தொடங்கினான். அவன் குதிரையைக் கண்ட க்ருஷ்ணன் பலராமனிடம் "நம் குதிரைகளும் களைத்து விட்டன. இந்த இறந்த குதிரையைப் பார்த்து பயந்தும் விட்டன. எனவே தாங்கள் தேரிலேயே இருங்கள். நானும் ஓடிச் சென்றே, அவனைக் கொல்கிறேன்" என்று கூறி விட்டு ஓடியே அவனைத் துரத்தினான்.

இரண்டு க்ரோச தூரம் துரத்திச் சென்ற க்ருஷ்ணன் சததன்வாவைக் குறித்து தன் சக்ரத்தைப் ப்ரயோகித்தான். அது அவன் தலையை அறுத்து, அவனைக் கொன்றது. அவனிடம் ஸ்யமந்தகத்தைத் தேடி, ஏமாந்து பலராமனிடம் வந்தான் க்ருஷ்ணன். "அண்ணா! நாம் சததன்வாவைக் கொன்றது வீண், அவனிடம் அந்த மணி இல்லை" என்றான் க்ருஷ்ணன். இதை நம்பாத பலராமன் "நீ பொருளாசையால் இப்படிப் பொய் கூறுகிறாய். நான் உன் ஸஹோதரனென்பதால் இதைப் பொறுக்கிறேன். நீ நிந்திக்கத் தக்கவன். உன்னாலோ, பந்துக்களாலோ எனக்கு இனி த்வாரகையில் ஒன்றும் ஆகத் தேவையில்லை. நான் என் வழி செல்கிறேன். த்வாரகைக்கு இனி நான் வரவில்லை. உன்னுடன் வஸிக்கவும் விரும்பவில்லை. நீ உன் இஷ்டப்படி செல்" என்று கூறிவிட்டான்.

க்ருஷ்ணன் பலமுறை பலராமனிடம் விஷயங்களைக் கூறி வேண்டியும், அவனைப் புறக்கணித்துக் கோபத்துடன் விதேஹம் சென்று விட்டான் பலராமன். க்ருஷ்ணன் வேறு வழியின்றி தான் மட்டும் த்வாரகை வந்து சேர்ந்தான். விதேஹத்தில் ஜனகரால் வரவேற்று, உபஸரிக்கப்பட்டுத் தங்கியிருந்த பலராமனிடம் அந்த ஸமயத்தில் தான் துர்யோதனன் வந்து கதாயுத்தம் செய்யக் கற்றுக் கொண்டான். மூன்று வருஷங்கள் இப்படி ஓடின. உக்ரஸேனன், பப்ரு முதலான மூத்த யாதவர்கள் உண்மையிலேயே க்ருஷ்ணனிடம் ஸ்யமந்தகம் இல்லை என்பதை அறிந்து, அதை பலராமனிடம் விளக்கிக் கூறி, மீண்டும் அவனை க்ருஷ்ணனிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

அக்ரூரர் அந்த ஸ்யமந்தகத்திற்குரிய யோக்யதையுடன் இருந்தார். அதுவும் அவருக்கு நிறைய பொன்னைத் தந்தது. தர்மத்திலும், பகவானிடத்திலும் ச்ரத்தையுள்ள அவர் அந்த செல்வத்தைக் கொண்டு பல யாகங்களைச் செய்து வந்தார். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அக்ரூரர் போஜ வம்சத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு க்ருஷ்ணனைச் சேர்ந்த யாதவர்களால் என்றுமே பகை பயம் உண்டு. யாக தீக்ஷையிலிருப்பவனைக் கொன்றால் வரும் ப்ரஹ்மஹத்தி தோஷத்திற்குப் பயந்து யாதவர்கள் தன்னைக் கொல்ல மாட்டார்கள் என்ற காரணத்தாலும் அக்ரூரர் எப்போது ஏதாவதொரு யாக தீக்ஷையிலேயே இருந்தார். இவர் இப்படி மணியுடன் இருந்ததால் த்வாரகையிலும் வ்யாதி, பஞ்சம், கொலை என்று எந்த தீயவைகளும் இல்லாதிருந்தது. இப்படியே அறுபத்திரண்டு வருஷங்கள் உருண்டோடின.

இந்த ஸமயத்தில் ஸத்வதனுடைய கொள்ளுப் பேரனான சத்ருக்னன் என்பவனை போஜர்கள் கொன்று விட்டனர். இந்த ஸாத்வதர்-போஜர் சண்டையை விரும்பாத அக்ரூரர் போஜர்களுடன் த்வாரகையிலிருந்து வெளியேறினார். இப்படி அக்ரூரர் வெளியேறியதும் த்வாரகைக்குத் பாம்புகள், வ்யாதி, அகால மரணம் என அனைத்துத் தீங்குகளும் வரத் தொடங்கின. க்ருஷ்ணன் முதியோர்களுடன் ஒரு ஸபையைக் கூட்டி இது குறித்து ஆராய்ந்த போது, யாதவர்களில் மூத்த அந்தகன் என்பவர் "அக்ரூரர் நாட்டை விட்டு வெளியேறினதாலேயே இவ்வாறெல்லாம் நடக்கின்றன. இவன் பெற்றோர்களும் இப்படியே. ச்வபல்கர் என்ற அக்ரூரரின் தகப்பனார் இருக்குமிடங்களிலும் எந்த துர்பிக்ஷங்களும் இருந்ததில்லை.

இதனாலேயே மழையே இல்லாதிருந்த காசிக்கு ஒரு முறை, காசிராஜன் ச்வபல்கரை அழைத்துச் சென்றார். அவர் சென்றதும் உடனே மழை பொழிந்து விட்டது. காசிராஜன் தன் பெண்ணையே அவருக்கு மணம் முடித்தான். அவளும் அப்படியே புண்யமானவள். காலம் ஆகியும் ப்ரஸவம் ஆகாதிருந்த காசீராஜன் தன் மனைவியின் கர்ப்பத்திடம் "குழந்தாய்! ஏன் இன்னும் வெளியில் வராதிருக்கிறாய். உன் முகத்தைப் பார்க்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம். தாயையும் வருத்தாமல் சீக்ரமாக வெளியே வந்து விடு" என்று கூறினான். பனிரெண்டு வருஷங்களாக கர்ப்பத்திலேயே இருந்த அந்தப் பெண் குழந்தை "அப்பா, நீங்கள் தினமும் ஒரு ப்ராஹ்மணனுக்கு ஒரு பசு வீதம் மூன்று வருஷங்கள் தானம் செய்தால் நான் பிறப்பேன்" என்று உறுதி கூறி, அதன்படி பிறந்தாள்.

கோதானம் செய்து பிறந்தவளாதலால் காந்தினீ என்று பெயரிடப்பட்டாள். இந்த காந்தினீயே அக்ரூரரின் தாய். இப்படி அவர்கள் அனைவருமே தூய்மையானவர்கள். எனவே சிறு குற்றங்களைப் பொறுத்து அக்ரூரரைத் திரும்ப அழைத்து வாருங்கள்" என்றார். யாதவர்களும் இதை ஒப்புக்கொண்டு அவரை மீண்டும் அழைக்க, உக்ரஸேனர், ராம, க்ருஷ்ணர்களின் அபயத்தில் அவரும் மீண்டும் வந்தார். த்வாரகையும் முன்பு போல் ஸுபிக்ஷமானது. ஆனால் க்ருஷ்ணன் ஸுதாரித்துக் கொண்டான். "அக்ரூரர் வம்சத்தார் பாவனமானவர்கள் என்பதும், அதனால் அவர்களிருக்குமிடத்தில் ஸுபிக்ஷம் இருக்கிறது என்பது அல்பமாயிருக்கிறதே. நடப்பதையெல்லாம் பார்த்தால் ஸ்யமந்தகத்தின் மஹிமை போல இருக்கிறது.

எனவே அது அக்ரூரனிடம் தான் இருக்க வேண்டும். மேலும் இவ்வளவு யாகங்கள் செய்ய அக்ரூரனுக்கும் அதுதான் செல்வத்தைப் பொழிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே ஸ்யமந்தகம் அக்ரூரனிடம் தான் இருக்கிறது. இது முடிவு" என்று நிச்சயித்துக் கொண்டான்.
அரண்மனையிலேயே கபடமாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து யாதவர்களையும், அக்ரூரையும் அழைத்தான். எல்லோரும் உற்சாகமாகவும், ஸந்தோஷமாகவும் பேசிக் கொண்டிருக்கும் போது, க்ருஷ்ணன் அக்ரூரரைப் பார்த்து "அக்ரூரரே! சததன்வா ஸ்யமந்தகத்தை உங்களிடம் கொடுத்திருப்பதை நான் அறிவேன். அது உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் வைத்திருந்தாலும் அதன் பயனைத் தேசமே அனுபவித்து வருகிறது.

ஆனால் அண்ணா பலராமர் அதை நான் வைத்துக் கொண்டிருப்பதாக நினைத்து என் மீது கோபத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார். அதை நீக்குவதற்காகவாவது எனக்காக அதைக் காட்டுங்கள்" என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிவிட்டார். அக்ரூரர் இதைச் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. இல்லை என்று கூறி, க்ருஷ்ணன் எல்லோர் முன்னிலையிலும் தன்னைச் சோதனை செய்து அதை வெளியே எடுத்து விட்டால், வீணான விரோதமும், அபவாதமும் வரும். வேறு வழியின்றி உரைக்கலானார் "க்ருஷ்ணா, நீ கூறுவது உண்மை. சததன்வா அதை என்னிடம் தான் தந்துள்ளான். அவன் இறந்ததும் என்றோ ஒரு நாள் நீ அதைக் கேட்பாயென்றே தான் தினமும் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்கு மதிப்பு கொடுத்து நானும் ஸுக போகங்களை சிறிதும் அனுபவிக்காமலேயே இருந்து வருகிறேன். உன்னிடம் இதை நானாகக் கொடுத்தாலும் விரோதம் வரக்கூடும் என்று நினைத்தேன். நானே இதை என்னிடமே வைத்திருந்தாலும் நாட்டுக்கு நல்லது தானே என்றும் நீ நினைப்பாயோ என்று இருந்தேன். இதோ, இப்போது நீயே அதை வெளிப்படையாகக் கேட்டு விட்டாய். நான் அதை உன்னிடமே கொடுத்து விடுகிறேன். நீ வைத்துக் கொள். அல்லது உனக்கு உகந்தவர்களுக்குக் கொடு" என்று கூறி அக்ரூரர் துணியில் முடிந்து, தங்கச் சிமிழில் வைத்துத் தன் மடியில் செருகி வைத்திருந்த அந்த ஸ்யமந்தகத்தை எல்லோர் முன்னிலையிலும் பிரித்தார்.

அதன் கண் கூசும் ப்ரகாசத்தால் ஸபையே ஜொலித்தது. ஸபையோர் முன்னே அதை வைத்து "இது தான் என்னிடம் சததன்வா தந்த மணி, இது யாருக்குச் சொந்தமோ அவர் எடுத்துக் கொள்ளட்டும்" என்று வைத்து விட்டார். வந்தது அடுத்த குழப்பம். மணி உண்மையில் ஸத்யபாமாவின் அப்பாவினுடையது. ஆனா சததன்வாவைக் கொன்று நாம் அந்த மணியை எடுத்துக் கொள்வோம் என்று ஏற்கனவே க்ருஷ்ணன் பலராமனிடம் கூறியுள்ளான். இப்போது அதை யாரிடம் கொடுப்பது. வண்டிச் சக்ரத்திற்கும், எருதுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட நிலை க்ருஷ்ணனுக்கு. "அக்ரூரரே! மணி என்னிடம் இல்லை என்பதை நிரூபிக்கவே நான் அதைக் காட்டச் சொன்னேன்.

இப்போது மணி யாருக்கு சொந்தம் என்றால் அது ஏற்கனவே எங்கள் வார்த்தைப்படி எனக்கும், அண்ணாவுக்கும் தான் சொந்தம். அதேபோல் அது ஸத்யபாமாவின் அப்பாவுடையது என்பதால் அவளுக்கும் சொந்தமானது. மேலும் இந்த மணியோ ப்ரஹ்மசர்யம், ஒழுக்கம் என்று பல நியமங்களுடன் இருப்பவர்களிடமே தானும் ஒழுங்காக இருக்கும். தேசத்தையும் ஸுபிக்ஷமாக்கும். இல்லையேல் வைத்திருப்பவர்களையே இது கொன்று விடும். இது இதன் ஸ்வபாவம். நானோ பதினாறாயிரம் மனைவிகளைக் கொண்டவன். ஆக நானும் இதை வைத்திருக்கத் தகுதியில்லாதவன், என் மனைவி என்பதால் ஸத்யபாமைக்கும் தகுதியில்லை என்றாகிறது.

அண்ணா இதை வைத்திருக்க நினைத்தால், அவர் இவ்வளவு நாள் பழகியிருக்கும் கள் குடிப்பது முதலான எல்லா போகங்களையும் அவரும் விட வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. எனவே அக்ரூரரே! யாதவர்கள், நான், ஸத்யபாமா, அண்ணா அனைவரும் உம்மை வேண்டுகிறோம். இதைத் தரித்துக் கொள்ள முழுத்தகுதியுள்ளவர் நீங்களே. எனவே நீங்களே இதை மறுப்புக் கூறாமல் லோகக்ஷேமத்திற்காகத் தரிக்க வேண்டும்" என்று முடிவாகக் கூறி, தன் மீதான பழியையும் போக்கிக் கொண்டதோடு, ஸ்யமந்தகத்தை யாருக்கு சொந்தமாக்குவது என்ற குழப்பத்தையும் ஒருவாறு போக்கிவிட்டான் க்ருஷ்ணன். தானும் எந்த புது ப்ரச்னைகளிலும் மாட்டிக் கொள்ளவில்லை.

அக்ரூரரும் க்ருஷ்ணனுக்கு இணங்கி எல்லோரும் பார்க்கும் படி ஸ்யமந்தகத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு இன்னொரு ஸூர்யன் போல ஸஞ்சரிக்கலானார். இப்படி இறைவனுக்கே வீண்பழி வந்து நீங்கிய இந்த பரம பாவனமான ஸ்யமந்த்க உபாக்யானத்தை நினைப்பவர்களுக்கு ஒரு நாளும் வீண் பழி வராது. இதைக் கேட்பவர் பூலோகத்தில் வாழும் வரை சரீரத்தில் எந்த கெடுதலும் இன்றி திடத்துடனும், வீண் பாபங்களின்றியும் வாழ்வார்கள்.

No comments:

Post a Comment