Monday, February 15, 2010

விஷ்ணு புராணம் - 86

05_06. ஒரு ஸமயம் வண்டியின் கீழே குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அந்த வண்டியின் வடிவில் குழந்தையைக் கொல்வதற்காக முராஸுரன் என்பவன் புகுந்தான். இதையறிந்த குழந்தை பாலுக்கு உதைத்துக் கொண்டு அழுவது போல் பாவனை செய்து, பாரத்தோடிருந்த வண்டியைத் தலைகீழாக உதைத்துத் தள்ளி உடைத்தது. அதிலிருந்த பானை முதலியன விழுந்து உடைந்து, பொருள்கள் சிதறின. இதைக் கண்ட கோபர்கள் மேலும் வியப்படைந்தனர். வண்டியை யார் இப்படித் தள்ளியது என்று கேட்ட கோபர்களிடம், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழந்தை க்ருஷ்ணன் தான் இப்படிச் செய்தது. தன் கால்களால் வண்டியை உதைத்துத் தள்ளியது, வேறு யாரும் தள்ளிவிட வில்லை என்று கூறவும் கூடியிருந்தவர்கள் மேலும் ஆச்சர்யமடைந்தனர். நந்தகோபன் ஓடிவந்து குழந்தையை எடுத்துக் கொள்ள யசோதை உடைந்து போன பானை ஓடுகளை தயிர், பூ, அக்ஷதைகளால் அர்ச்சித்தாள்.

இப்படி இருந்து கொண்டிருக்கையில் குழந்தை பலராம, க்ருஷ்ணர்களுக்கு ஜாதகர்மா, நாமகரணங்களைச் செய்து வைக்கும்படி வஸுதேவர் தன் புரோஹிதரான கர்கரை கோகுலத்துக்கு ரஹஸ்யமாக அனுப்பி வைத்தார். கோபர்களுக்கும் தெரியாதபடி மிகவும் ரஹஸ்யமாக, எளிமையாக நடந்த அந்த விழாவில் மூத்தவனுக்கு ராமன் என்றும், இளையவனுக்குக் க்ருஷ்ணன் என்றும் பெயர் சூட்டினார் கர்கர். குழந்தைகளின் விளையாட்டு தொடர்ந்தது. சாம்பலையும், புழுதியையும் உடலெங்கும் அப்பிக் கொண்டு அங்குமிங்கும் தவழத் தொடங்கினர். மாட்டுக் கொட்டிலிலும், கன்றின் கொட்டிலிலும், அவற்றின் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டும், ஒரு நிமிஷங்கூட ஓரிடத்தில் இருக்காமல் விளையாடிக் கொண்டிருந்த அவர்களை ரோஹிணியாலோ, யசோதையாலோ கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பார்த்தாள் யசோதை. ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டாள். சொல்வதைக் கேட்காமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணனை ஒரு குச்சியால் மிரட்டி, அவன் இடுப்பில் அந்தக் கயிற்றைக் கட்டி மறு நுனியை ஒரு மர உரலோடு சேர்த்துக் கட்டினாள். "குறும்பா! இப்ப முடிஞ்சா எங்கயாவது போ, பாக்கலாம்" என்று குழந்தையிடம் விரட்டி விட்டு நிம்மதியாக வீட்டு வேலைகளைச் செய்யச் சென்று விட்டாள். ம்.. வண்டி கிளம்பியாச்சு! ஆமாம், குழந்தை உரலையும் சேர்த்து உருட்டிக் கொண்டு செல்லத் தொடங்கியது. வீட்டுத் தோட்டத்தில் அருகருகில் வளர்ந்திருந்த இரு மருத மரங்களின் நடுவில் குழந்தை சென்று விட்டது. ஆனால் உரல் இரு மரங்களின் நடுவில் மாட்டிக் கொண்டது.

முடிந்த வரை உரலைச் சேர்த்து இழுத்து, இரு பெரும் மரங்களையும் மிகுந்த சப்தத்துடன் அடியோடு முறிந்து விழச்செய்து, கண்களை ஆச்சர்யமாக விரித்து அதை வேடிக்கை பார்த்து விட்டு, வித்யாசமான அந்த சத்தத்தையும் கேட்டு விட்டு, குழந்தை உரலோடு மீண்டும் செல்லத் தொடங்கி விட்டது. சப்தம் கேட்டு ஓடி வந்த கோபர்கள் காற்றே இல்லாமல் விழுந்து கிடக்கும் மரங்களையும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறோடும், அதன் தழும்போடும், தன் சிறு பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்த குழந்தையையும் கண்டனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு க்ருஷ்ணன் தாம(கயிறு, கயிறு கட்டப்பட்ட)உதரன் (வயிறு)= தாமோதரன் என்று எங்கும் கொண்டாடப்பட்டான்.

தொடர்ச்சியாக நடந்த இந்த துர்ஸகுனங்களை பூதனை மரணம், ஸகடம் உடைந்தது, மரங்கள் முறிந்தது என்று பார்த்துக் கவலையும், பயமுமடைந்த கோபர்கள் தலைவர்களுடன் ஒன்று கூடி "இனி இந்த இடமும், நம் சேரியும் மேலும் அழிவதற்குள் நாம் அருகிலிருக்கும் இன்னொரு வனப்பகுதியான ப்ருந்தாவனம் சென்று விடுவோம். அதுவே நமக்கு நல்லது. கெடுதல்கள் இன்றி நாம் இனி அங்கு வாழ்வோம்" என்று முடிவெடுத்து குடும்பங்களைப் பொருள்களோடுத் தயார் படுத்தி வண்டிகளில் புறப்பட்டனர். பசுக்கூட்டங்களையும், கன்றுகளையும், காளைகளையும் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றனர். எங்கும் தயிரும், பாலும் சிதறிக் கிடந்தது கோகுலம்.

இது நாள் வரை ராம, க்ருஷ்ணர்களின் லீலைகளால் பொலிந்திருந்த கோகுலம் சிறிது காலத்திற்குள் காக்கை, கழுகு இவைகளின் கூடாரமாகி விட்டது. காடாய்க் கிடந்த ப்ருந்தாவனமோ அந்த கோடைக்காலத்திலும் புல்லும், நீரும் பெற்று புதுப் பொலிவுடன் விளங்கியது. ஆயர்குடி அர்த்த சந்த்ர (அரைவட்ட) வடிவில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, வண்டிகள் நிறுத்த வசதிகளையும் செய்து கொண்டனர். குழந்தைகளிருவரும் கன்றுகளை மேய்க்கும் வயதடைந்தனர். மயில் தோகைகளாலும், வெவ்வேறு காட்டுப் பூக்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு, இலைகளால் குழல்களைச் செய்தும், புல்லாங்குழலாலும் ஓசைகளை எழுப்பிக் கொண்டு, தாங்களும் மகிழந்து, பிறரையும் மகிழச்செய்து கொண்டு, பக்கவாட்டுகளில் தவழும் சுருள் கேசங்களுடன் அக்னி குமாரர்களான சாக, விசாகர்களைப் போல ப்ருந்தாவனமெங்கும் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

தங்களை ஒத்த ஆயிரம் குழந்தைகளோடு ஒவ்வொருவர் தோள் மீது மற்றொருவர் ஏறியும், லோகபாலர்களான இருவரும் கோபாலர்களாக கன்றுகளை காத்துக் கொண்டும் விளையாடியும், சிரித்துக் கொண்டும் இப்படியே ஏழு வயதை எட்டினர். கோடை காலம் கழிந்து மழைக் காலம் தொடங்கியது. மழை நன்கு பொழிந்து எங்கு பார்த்தாலும் பசுமை விளங்கியது. பட்டுப் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. புதிதாய்ப் பணம் கிடைத்த துஷ்டனின் மனம் போல் கட்டுக்கடங்காது மழை நீர் திரண்டு வழிகளைப் புதிது, புதிதாகக் கண்டு பிடித்து ஓடியது. தூயவர்களின் வேதங்களுக்கும், நீதிகளுக்கும் ஒத்துப் போகும் பேச்சுக்களை, இவற்றை நம்பாத மூர்க்கர்கள் தங்கள் சத்தமான முரட்டுப் பேச்சுக்களால் மறைத்துப் பேசுவது போல், மேகங்கள் தங்கள் கறுமையால் நிர்மலனான சந்த்ரனை விளங்காதபடி மறைத்தன.

வில்லினுடைய குணமே அதன் நாண் கயிறு தான். ஆனால் நாண் இல்லாத இந்த்ர தனுஸ் மழைக் காலத்தில் உயர்ந்த இடத்திலே நிலையாக பளீரென்று இருக்கிறது. இது இந்நாளில் பகுத்தறிவில்லாத அரசனின் ஆதரவு பெற்று குணஹீனர்கள் உயர்ந்த பதவிகளில் நிலைத்திருப்பதை நினைவூட்டுகிறது. இப்படிப் பல வர்ணனைகளுடன் கூடிய மழைக் காலத்தில் அந்த ப்ருந்தாவனத்தில் ராம, க்ருஷ்ணர்கள் மற்ற இடைச்சிறுவர்களோடு கூடி உடலில் மூலிகைகளைக் கொண்டு பல வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாகத் திரிந்தனர். வனங்களில் திரிந்தனர். மயில் போலவும், தேனீக்களைப் போலவும், அடுத்தவர் போலவும் மாறிப் பேசி விளையாடுவார்கள். குழுவாகப் பாடுவார்கள். ஆடுவார்கள். மர நிழலில் தூங்குவார்கள். தூக்கம் வரும்போது இலைகளைக் குவித்து அதைப் படுக்கையாகக் கொண்டு அதில் உறங்குவர். மேகம் இடி இடிக்கும் போது கும்பலாகக் கூடி, பயப்படுவது போல் ஆ! ஆ! என்று கத்துவார்கள். இப்படி இவர்கள் இருவரும் பகலிலும், இரவிலும் பசுக்களோடும், மற்ற சிறுவர்களோடும் விளையாடி ப்ருந்தாவனத்தில் நந்த கோபன் க்ருஹத்தில் வளர்ந்து வந்தனர்.

No comments:

Post a Comment