Thursday, February 25, 2010

விஷ்ணு புராணம் - 103

05_23. ஒரு நாள் யாதவ ஸபையில், ப்ரஹ்மசர்யத்தில் நிலை பெற்றிருந்த அவர்கள் புரோஹிதரான கார்க்யர் என்பவரை, அவர் மைத்துனர் ச்யாளன் என்பவன் அலி என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிக் கிண்டல் செய்தான். சபையோர் சிரிக்க, நடந்த இந்த அவமானத்தைப் பொறுக்காத கார்க்யர் யாதவர்களை அஞ்சச் செய்யும் பலம் பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற விரும்பி, விந்தியத்தின் தென் திசைக்குச் சென்று பனிரெண்டு ஆண்டுகள் இரும்புத் தூளை மட்டுமே ஆஹாரமாக உட்கொண்டு கடுந்தவம் இயற்றி, பரமேச்வரனை மகிழச் செய்து, தான் நினைத்த வரத்தையும் பெற்றுத் திரும்பினார். அப்போது பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்திக் கொண்டிருந்த யவன தேசாதிபதி கார்க்யர் இப்படி ஒரு வரத்தைப் பெற்றிருப்பதை அறிந்து, அவரிடம் நட்பு பூண்டு, நன்கு உபஸரித்து, தன் மனைவியிடம் தனக்கு ஒரு பிள்ளையை உண்டுபண்ணுமாறு வேண்டிக் கொண்டான்.

அவரும் அப்படியே செய்தார். பிறந்த பிள்ளை வண்டு போல கருமை நிறத்தில், வஜ்ராயுதம் போன்ற மார்புடன் இருந்தான். இவனுக்குக் காலயவனன் என்ற பெயரை வைத்து, பருவம் வந்ததும் இவனுக்குப் பட்டம் சூட்டி விட்டு, யவனராஜன் தவம் செய்ய கானகம் சென்று விட்டான். பெரும் பலத்தால் கர்வம் கொண்ட இவன் ஒரு ஸமயம் நாரதரிடம் தன்னுடன் போர் புரியத் தகுந்த பலம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். நாரதர் யாதவர்களோடு போர் செய். அவர்களே பலசாலிகள் என்று கூற, காலயவனன் வெகு வேகமாக அனேக கோடி ம்லேச்சர்களுடன் ரத, கஜ, துரக, பதாதிகள் என நால்வகைப் படைகளையும் தயார் செய்து கொண்டு, ஏராளமான போர்த் தளவாடங்களோடும் மதுரையை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

தினம் ஒரு யானை, குதிரை, ரதம் என ஒவ்வொன்றும் களைப்படையும் போதும் வெவ்வேறு விலங்குகளை மாற்றிக் கொண்டு ரதங்களில் ஏறி விரைவாக மதுரை வந்து சேர்ந்து விட்டான் காலயவனன். காலயவனன் படையெடுப்பைக் கேள்விப்பட்ட க்ருஷ்ணன் "இவனோடு போரிட ஆரம்பித்தால் யாதவர்கள் மிகவும் பலம் குன்றி, அழிந்து விடுவார்கள். அப்போது ஜராஸந்தனும் வந்து யாதவர்களை பீடிக்கக் கூடும். எதிரிகள் வென்று விடக் கூடும். அல்லது ஜராஸந்தனும் இந்த கால யவனனுடன் சேர்ந்து யுத்தம் செய்யக் கூடும். இவர்களிருவரிடமிருந்தும் இந்த யாதவர்களைக் காக்க பகைவர்களால் நுழைய முடியாத கோட்டை ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். அங்குள்ள பெண்களும் போரிடுபவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வ்ருஷ்ணி குலத்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

எந்த இடத்தில் இந்த யாதவர்கள் குடித்திருந்தாலும், கவனக்குறைவாகவும், உறங்கிக் கொண்டிருந்தாலோ, அல்லது வெளியூர் சென்றிருந்தாலும் எந்த வித பயமும் இருக்காதோ, அங்கு இவர்களை குடியேற்ற வேண்டும். இப்படி யோசித்த கண்ணன் ஸமுத்ர ராஜனிடம் பனிரெண்டு யோஜனை அளவு இடம் தருமாறு வேண்டிப் பெற்றான். அந்த இடத்தில் த்வாரகையை நிர்மாணித்தான். வீடுகளும், மாளிகைகளும் நிறைந்திருக்க இந்த்ரனின் தலைநகரைப் போலிருந்தது அது. புது நகருக்கு மதுரா வாஸிகளைக் குடியேற்றி விட்டு, தான் மட்டும் மதுரையில் காலயவனனுக்காக நிராயுதபாணியாகக் காத்திருந்தான். க்ருஷ்ணனைக் கண்டதும் அடையாளங் கண்டு கொண்ட காலயவனன் நிராயுதபாணியான அவனைப் பிடிக்க எண்ணினான்.

கண்ணன் ஓடத் தொடங்கினான். யோகிகளின் மனதிற்கும் கிட்டாத அவனைப் பிடிக்க இவனும் பின் தொடர்ந்து ஓடினான். கண்ணன் ஓடிச் சென்று ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்து, அங்கு அவனைத் தேடிய காலயவனன் ஒருவன் அங்கு படுத்திருப்பதைக் கண்டு, அது கண்ணனாகத் தானிருக்க வேண்டும் என்று முடிவு செய்து, காலால் அவனை ஓங்கி ஒரு உதை விடுகிறான். படுத்துறங்கிக் கொண்டிருந்தவன் உடனே கண் விழித்து காலயவனனைக் கோபத்தோடு ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையிலுண்டான அக்னியால் காலயவனன் அந்த இடத்திலேயே வெந்து சாம்பலானான்.

அங்கு படுத்து, அப்படி உறங்கிக் கொண்டிருந்தது முசுகுந்த சக்ரவர்த்தி. தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் நடந்த ஒரு போரில் இந்த முசுகுந்த சக்ரவர்த்தி தேவர்கள் பக்கமிருந்து அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். வெகுநாட்களாக நடந்து முடிந்த இந்த யுத்தத்தில் தூக்கமின்றி மிகவும் களைத்துப் போயிருந்த சக்ரவர்த்தி, ஆழ்ந்த, நீண்ட உறக்கத்தைத் தேவர்களிடம் வரமாகக் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரத்தைக் கொடுத்ததோடு, "உன்னை எவன் தூக்கத்திலிருந்து எழுப்புகிறானோ அவன் உன் உடலில் இருந்து எழும் கோபாக்னியிலேயே சாம்பலாகி விடுவான்" என்ற வரத்தையும் தந்தனர். இந்த வரத்தைக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்த சக்ரவர்த்தியைக் கொண்டுதான் இப்போது காலயவனனை நிராயுதபாணியாக ஸம்ஹரித்துள்ளான் க்ருஷ்ணன்.

காலயவனன் இப்படி சாம்பலானதும், தன் கண் முன்னே இப்போது நின்றிருக்கும் க்ருஷ்ணனைப் பார்த்து "நீ யார்" என்கிறான் முசுகுந்தன். தன்னை சந்த்ர வம்சத்தின் யது குலத்தில் வஸுதேவனுக்குப் புத்ரன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் க்ருஷ்ணன். இதையறிந்ததும் முதியவரான கர்க்கர் தன்னிடம் முன்பு கூறியிருந்தவைகளை நினைவு படுத்திக் கொண்ட முசுகுந்தன் ஹரியின் பாதங்களில் விழுந்து "இறைவனே! விஷ்ணுவின் அம்சமே! இருபத்தெட்டாம் த்வாபர யுகத்தின் இறுதியில் ஹரி யதுக்களின் குடும்பத்தில் பிறப்பார் என்பதை முன்னமேயே நான் கர்க்கரிடமிருந்து அறிந்துள்ளேன். நீயே தான் அது. சந்தேகமேயில்லை. மனிதகுலம் உய்யவே நீ அவதரித்துள்ளாய். உன் தேஜஸ்ஸை என்னால் தாங்க முடியவில்லை.

மழைமேகங்களின் கர்ஜனையை விட உன் குரலொலி மேம்பட்டிருக்கிறது. நீ நடக்கையில் பாரத்தால் பூமியே அசைகிறது. முன்பு தேவாஸுர யுத்தத்தில் அஸுரர்கள் என் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் திணறினார்களோ, அது போல் இப்போது நானே உன் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் இருக்கிறேன். நீ ஒருவனே இந்த உலகில் தத்தளிப்போருக்கு அபயமளிக்க வல்லவன். நீயே தீவினைகள் யாவையும் போக்குபவன். என் மீதும் கருணை காட்டு. என் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கிவிடு. ஸமுத்ரங்கள், பர்வதங்கள், ஆறுகள், காடுகள், பூமி, வானம், காற்று, நீர், நெருப்பு, புத்தி, ஆத்மா, மனம், வாழ்வாதாரம், ஆத்மாவிற்கு அப்பாற்பட்டவை, எங்கும் நிறைந்தது அனைத்தும் நீயே. உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் நீ,

பிறப்பால் வரும் வ்யவஹாரங்கள் உனக்கில்லை. அழிவற்றவன், அளவில்லாதவன், ஏற்ற, இறக்கமற்றவன், ஆதி அந்தமில்லா ப்ரஹ்மனும் நீ. தேவ, கந்தர்வ, சித்தர், விலங்கு, மனித, பறவை, தாவரங்கள் முதல் அனைத்து ஸ்தாவர ஜங்கமங்களும் உன்னிடமிருந்தே தோன்றுகின்றன. உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. தேவா! நான் இந்த உலக வ்யவஹாரங்கள் அனைத்தையும் நன்கு அனுபவித்து விட்டேன். மூவகைத் தாபங்களால் அலைக்கழிக்கப்பட்ட எனக்கு எங்குமே ஸுகமில்லை. பூமி, ராஜ்யம், படைகள், பொருள்கள், நண்பர், குழந்தைகள், மனைவி, சுற்றத்தார் இன்னும் நான் ஸந்தோஷத்தைத் தருபவை என நினைத்து அடைந்த எதுவுமே அவைகளின் இயற்கையான மாறும் குணங்களால் எனக்குக் கடைசியில் கானல் நீர் போல் விரக்தியையும், துன்பத்தையுமே உண்டு பண்ணின.

ஸ்வர்க்கத்திலிருக்கும் தேவர்களே யுத்தத்தின் போது, தாழ்ந்த மனிதப் பிறவியைச் சேர்ந்த என்னிடமல்லவா உதவி கோரினர். ஆக அதுவும் ஆபத்தானதே. பின், எங்குதான் நிலையான ஸுகம் உள்ளது. உலகிற்குக் காரணமான உன்னை ஆராதனை செய்வதே நிலைத்த ஸுகம் பெற வழி. உன் மாயையாலும், இயற்கையான அறியாமையாலுமே மனிதன் பிறப்பு, இறப்புகளால் தளர்ந்து, பின் நரகத்திலும் யமனுடைய பிடியில் கொடிய துன்பங்களை அனுபவிக்கிறான். நானும் அப்படியே தானே உன் மாயையால் சுயநலம், பொறாமை முதலியவைகளால் இவைகளில் உழன்று வருகிறேன். இறுதியில் விரும்பி எவரும் அடையத் தக்கது உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் இப்படிப் பலவாறு துன்பப்பட்ட நான் இப்போது உன்னையே சரணமடைகிறேன். இந்தத் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து எனக்கு மோக்ஷத்தைக் கொடு" என்று வேண்டிக் கொண்டான்.

No comments:

Post a Comment