04_10. புரூரவஸ்ஸின் மகன் ஆயுஸ்ஸின் மற்றொரு மகன் நஹுஷனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்று ஆறு ஸத்புத்ரர்கள். யதி ராஜ்யத்தை விரும்பாததால் யயாதி அரசனானான். இவன் சுக்ராச்சார்யாரின் பெண் தேவயானியையும், வ்ருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையையும் மணந்து, தேவயானியிடம் யது, துர்வஸு என்ற இரு பிள்ளைகளையும், சர்மிஷ்டையிடம் த்ருஹ்யன், அனு, பூரு என்ற மூன்று புத்ரர்களையும் பெற்றான். தனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தன்னுடன் வந்த சர்மிஷ்டையிடம் உரிமை கொண்டு பிள்ளைப் பெற்றதை அறிந்த தேவயானி, இதைப் பற்றித் தந்தையிடம் பொருமவே, சுக்ராச்சார்யார் யயாதிக்கு கிழத்தன்மை வரும்படி சபித்து விட்டார்.
அகாலத்தில் கிழத்தன்மை பெற்ற யயாதி ஆச்சார்யரின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கோர அவரும் மனங்கனிந்து, உன் மூப்பை மற்றொரு யுவனுடன் (யௌவனமாயுள்ளவன்) மாற்றிக் கொள் என்று அருளினார். யயாதி தன் பிள்ளைகளிடம் சென்று தன் மூப்பைப் பெற்றுக் கொண்டு அவர்களின் யௌவனத்தைத் தனக்குத் தருமாறு கேட்டான். இளையவன் பூருவைத் தவிர அனைவரும் மறுத்து விட்டனர். அவர்களுக்கு ராஜ்யம் கிடையாது என்று சபித்து விட்டு, பூருவுடன் தன் மூப்பை மாற்றிக் கொண்டான். விச்வாசீ என்ற அப்ஸரஸ்ஸுடனும், தேவயானியுடனும் பல ஆண்டுகள் ஸுகமாகக் கழித்தான். தர்மத்துடன் ஆட்சி செலுத்திப் பற்பல போகங்களையும் அனுபவித்தான். புதிது, புதிதாக ஆசையும், சுகமும் தோன்றியதே தவிர சலிப்பு உண்டாகவில்லை.
ஒரு நாள் புத்தி வந்தது யயாதிக்கு. "காமத்தை அனுபவிக்க, அனுபவிக்க அது அழிந்து விடும் என்று அனுபவித்தேன். ஆனால் அது வளர்ந்ததேயன்றி அழியவில்லை. அக்னி நெய்யால் நன்கு வளர்வது போல்தான் இந்தக் காமமும் அனுபவத்தால் நன்கு வளர்கிறது. உலகிலுள்ள அனைத்துத் தான்யங்களும், பொன், பசுக்கள், பெண்கள் என அனைத்தும் ஒருவனின் ஆசைக்கே போதாது. எனவே ஆசையை விடுவதே ஒரே வழி. நாம் தளர்ந்தாலும், பல்லும், மயிரும் உதிர்ந்து விட்டாலும் ஆசை தளர்வதில்லை. ஆசையே அனைத்துத் துக்கங்களுக்கும் காரணம். எனவே புத்தியுள்ளவன் ஆசையை விட வேண்டும். அப்போது தான் ஸுகம். இதற்கு நானே சரியான உதாரணம்.
என் புத்ரனின் யௌவனத்தைப் பெற்று ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் ஆசை ஒழியவில்லை. தினமும் புதிதாகவே தோன்றுகிறது. எனவே ஆசையை விடுத்து பசி, தாகம், நான், எனது என்ற எண்ணங்களை ஒழித்து, மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்தி, ம்ருகங்களுடன் வாழ்வதே சிறந்தது" என்று கூறிவிட்டு மீண்டும் பூருவுடன் தன் யௌவனத்தை மாற்றிக் கொள்கிறான். தென் கிழக்கு ராஜ்யங்களுக்கு துர்வஸுவையும், மேற்கே த்ருஹ்யனையும், தெற்கே யதுவையும், வடக்கே அனுவையும் சிற்றரசர்களாக்கி விட்டு யௌவனமடைந்த பூருவை பூமண்டல அதிபதியாக்கி விட்டுத் தவம் செய்ய கானகம் சென்று விடுகிறான் யயாதி.
Monday, February 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment