05_10. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் (இலையுதிர் காலம், சரத் ருது) வந்தது. நீர் நிலைகளில் தாமரைகள் பூத்துக் குலுங்கின. ஸூர்ய வெப்பத்தால் அந்த நீர் நிலைகளில் இருந்த நீர் சூடானது. மனை, மக்கள், சுற்றங்களிலுள்ள பற்றால் க்ருஹஸ்தன் மிகுந்த தாபமடைவது (கஷ்டம், ஆனால் ஆசை, பாசமிருப்பதால் விடவும் முடியாது) போல், தாங்கள் இது நாள் வரை பழகிய குட்டைகளை விட முடியாது தவித்தன அங்கிருந்த மீன்கள். அவைகளும் அந்த சூட்டிலேயே அந்த நீரில் இருந்தன. சாரமில்லாத இந்த வாழ்வைப் புரிந்து கொள்ளாது கண்டபடி இதில் திளைத்துத் திரிந்து, பின் இளைத்து, யோகம் செய்து, இது ஸாரமற்றது என்பதை உணர்ந்து மௌனமடைந்த யோகிகளைப் போல, மழைக்காலத்தில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த மயில்கள் இப்போது மௌனமாயிருந்தன.
எப்படி ஞானிகள் மனைவி, மக்கள், சுற்றங்களையும், அஹங்கார, மமகாரங்களையும், த்வேஷங்களையும் விட்டு பரிசுத்தமான உடலுடன் விலகுகிறார்களோ, அதேபோல் நீர் கொண்டு கருத்திருந்த மழைக்காலத்து மேகங்களும் நீரைப் பொழிந்து விட்டு, வெளுத்த நிறம் கொண்டு ஆகாயத்தை விட்டு மறைந்தன இந்த சரத் காலத்தில். பொருள்களில் பற்றுள்ளவர் மனம் போல, ஸூர்யக் கதிர்களால் குளங்களின் நீரும் வறண்டு விடுகிறது. ஞானத்தால் நல்லவர் மனம் சமத்வத்தில் நிறைந்தது போல் இந்த நீரும் வெள்ளை அல்லி மலர்களால் நிறைந்துள்ளது. பூர்ணமடைந்திருந்த சந்த்ரன், நற்குலத்தில் பிறந்து முக்தியடையத் தக்க கடைசி சரீரத்தைப் பெற்று விளங்கும் யோகிகளைப் போலிருந்தான்.
விவேகிகள் எப்படி தங்கள் மனைவி, மக்களிடமிருக்கும் பற்றிலிருந்து கொஞ்ச, கொஞ்சமாக விலகுகிறார்களோ, நதிகளும் அவ்வாறே கரைகளை விட்டு நகர்ந்து கொண்டிருந்தன. தேர்ச்சி அடையாதவர்கள் முதலில் யோகாப்யாஸம் செய்யும் போது அவர்கள் குறைகள் அவர்களை விட்டு விலகுகின்றன. பிறகு ஒரு ஸமயம் யோகத்தை விடும் போது மீண்டும் கணக்கற்ற மனக்கவலைகளும், குறைகளும் அவர்களிடமே வந்து சேர்ந்து விடுகின்றன. அதேபோல் இங்கும் மழைக்காலத்தில் நீர் நிலைகளை விட்டுச் சென்ற அன்னப்பறவைகள் இப்போது சரத்காலம் வந்தவுடன் மீண்டும் இங்கேயே வந்து சேர்கின்றன. ஸமுத்ரம் யோகத்தை அடைந்த ஸன்யாஸியின் மனம் போல் சலனமின்றி இருந்தது. விஷ்ணுமயம் ஜகத் என்பதை உணர்ந்தவனின் மனம் போல எங்கும் நீர் அழுக்கற்று விளங்கியது.
யோகிகளின் கவலைகள் யோகத்தால் அழிவது போல், ஆகாயத்தில் இருந்த மேகங்களும் இந்த சரத் காலத்தில் ஒழிந்தன. அஹங்காரத்தால் உண்டாகும் துக்கங்களை எப்படி பகுத்தறிவு போக்குகிறதோ, அதேபோல் இங்கு ஸூர்யனின் தாபத்தை சந்த்ரன் போக்குகிறான். யோகத்தின் மூலம் இந்த்ரியங்களை அவைகளின் செயல்களிலிருந்து ஒடுக்குவது போல் (ப்ரத்யாஹாரம்), சரத்காலமும் ஆகாயத்திலிருந்து மேகங்களையும், பூமியிலிருந்து சேற்றையும், தண்ணீரிலிருந்து கலக்கத்தையும் இழுக்கிறது. வாய்க்கால்கள் மூலம் நீர் நிலைகளிலிருந்து நீரை இழுத்து, தேவைப்படும் வயல் முதலான இடங்களிலே தேக்கி வைத்து, மீண்டும் அங்கிருந்து அவற்றை வெளியேற்றுவது, யோகிகள் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற ப்ராணாயாமத்தின் செயல்களைச் செய்வது போலுள்ளது. (மூச்சுப் பயிற்சி மூச்சை உள்ளே இழுப்பது, உள் நிறுத்துவது, வெளியே விடுவது என்ற மூன்று நிலைகளைக் கொண்டது)
இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அந்த சரத் காலத்தில் கோபர்கள் இந்த்ர விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்த உத்ஸவம் பற்றியும், இதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றியும் முதியோர்களிடம் க்ருஷ்ணன் ஆர்வத்தோடு கேட்டான். "குழந்தாய்! சதக்ரது என்ற இந்த்ரனே மேகங்களுக்கும், ஜலத்திற்கும் அதிபதி. அவனாலேயே ஏவப்பட்டு மேகங்கள் மழை பொழிகின்றன. மழையாலுண்டாகும் பயிர்களையே நாமும், மற்ற ப்ராணிகளும் உபயோகித்து ஸந்தோஷமாய் இருந்து வருகின்றன. தேவ பூஜைகள் நடக்கின்றன. புல்லைத்தின்று பசுக்களும் மிகுதியான பாலையும், நல்ல கன்றுகளையும் தருகின்றன. மழையாலேயே பூமி செழிக்கிறது. மழை பெய்யும் இடத்திலிருக்கும் மக்களுக்கு பசி, நோய் முதலியன இல்லை.
ஸூர்யன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியிலிருந்து நீரை எடுத்து மேகங்களில் விடுகிறான். இந்த்ரன் லோக க்ஷேமத்திற்காக அதை மீண்டும் மழையாகப் பொழிவிக்கிறான். இதனாலேயே மழைக்காலம் முடிந்ததும் அரசன் முதலனைவரும் யாகங்கள் மூலம் இந்த்ரனை பூஜிக்கின்றனர். நாமும் அப்படியே இந்த சரத் ருதுவிலும் இந்த உத்ஸவத்தை நடத்த முயன்று வருகிறோம்" என்று க்ருஷ்ணனுக்கு நந்தகோபன் பதிலளித்தான். இதைக் கேட்ட க்ருஷ்ணன் இந்த்ரனை வெறுப்பேற்றும் வகையில் "அப்பா! நாம் பயிரிடுபவர்களும் அல்ல, வாணிபம் செய்பவர்களும் அல்ல. காடுகளில் மாடு மேய்த்துத் திரிபவர்கள். எனவே பசுக்களல்லவா நமக்கு தெய்வம்.
தர்க்கம்(ஆன்வீக்ஷிகீ), மூன்று வேதங்கள்(த்ரயீ), வார்த்தா, அர்த்த சாஸ்த்ரம் என்ற நான்கு ப்ரதான சாஸ்த்ரங்களில் வார்த்தா சாஸ்த்ரம் பயிர் செய்வது, வணிகம் செய்வது, பசுக்களை மேய்ப்பது இவைகளைப் பற்றிக் கூறுவது. நமக்குத் தொழில் மாடு மேய்ப்பது. அதனாலேயே நாம் ஜீவிக்கிறோம். அதையே நாம் கொண்டாட வேண்டும். நமக்குப் பலன் கொடுப்பதை விட்டு மற்றொன்றை பூஜிப்பது இம்மை, மறுமை இரண்டிலும் பயன் தராது. பயிரிடும் நிலத்தின் எல்லைகளைத் தாண்டி உள்ளது காடுகள். அங்கேயே நாம் வஸிக்கிறோம். இந்தக் காடுகளின் எல்லைகளாக இருப்பவை மலைகள். ஆகவே மலைகளே நமக்கு மிகவும் முக்யம். வாசல், கதவுகளைக் கொண்ட வீடுகளில் வஸிக்கும் உழவர்கள், வணிகர்கள் போன்று நாம் இல்லை.
நாம் வண்டிகளில் சுற்றிக் கொண்டு, கண்ட இடங்களில் அவர்களை விட ஸுகமாக வாழ்கிறோம். நம் ஸுக வாழ்விற்கு இந்த மலைகளே முக்யம். மலைகள் விரும்பும் உருவெடுத்து எங்கும் ஸஞ்சரிப்பதாக அறிகிறோம். தனக்குத் தீங்கு செய்பவர்களை சிங்கம் முதலான பயங்கர ம்ருகங்களின் உருக்கொண்டு அவர்களைக் கொன்று விடுமாம். ஆகையால் இந்தப் பசுக்களும், மலைகளுமே நமக்குத் தெய்வங்கள். எனவே இவைகளைக் குறித்து யாகங்களைச் செய்யுங்கள். இந்த்ரனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. ப்ராஹ்மணர்களுக்கு மந்த்ர யக்ஞம், உழவர்களுக்கு ஸீர(கலப்பை) யக்ஞம், நமக்கு கிரியக்ஞம், கோயக்ஞம். இதோ இந்த சிறந்த கோவர்த்தன கிரியை நன்கு உபஸரித்து, பூஜை செய்யுங்கள்.
நம் சேரியிலுள்ள தயிர், பால், நெய் முதலியவைகளைக் கொண்டு அந்தணர்களுக்கும், இன்னும் விரும்பி வரும் அனைவருக்கும் அன்னமிட்டு உபஸரியுங்கள். இப்படி மலையைப் பூஜித்து, இவர்களுக்கு அன்னமிட்ட பின், இந்த சரத்கால புஷ்பங்களால் மாடுகளை நன்கு அலங்கரித்து, இந்த மலையை வலம் வரச் செய்யுங்கள். இதுவே என்னுடைய கருத்து. நீங்கள் மகிழ்வாக இவைகளைச் செய்தால் எனக்கும், பசுக்களுக்கும், இந்த மலைக்கும் மிகவும் பிடிக்கும்" என்று நந்தகோபரிடம் கூறினான். இப்படி க்ருஷ்ணன் சொன்னதைக் கேட்ட நந்தகோபனும், மற்ற கோபர்களும் மிகவும் மகிழ்ந்து அவன் கருத்தே சரியென கொண்டாடினார்கள். அதன்படியே கிரியக்ஞத்தையும் செய்து, கோயக்ஞத்தையும் சிறப்பாக செய்து மகிழ்ந்தனர்.
பசுக்கள் மிகுந்த ஸந்தோஷத்துடன் மலையை வலம் வந்தன. க்ருஷ்ணன் எவரும் அறியாதபடி தானே மற்றொரு உருவமும் கொண்டு மலையுச்சியில் இருந்து கொண்டு, தன்னையே கோவர்த்தன தெய்வம் என்று கோபர்களிடம் கூறிக் கொண்டு, அவர்கள் படைத்த உணவு பதார்த்தங்களை மகிழ்வாக உண்டான். கீழேயிருந்த உண்மையான க்ருஷ்ணனும் மற்றவர்களோடு இவைகளில் கலந்து கொண்டு மலையுச்சிக்கும் வந்து தன்னையே வணங்கிக் கொண்டான். இப்படி இந்த இருவர்களையும் தங்களின் புண்யம் செய்த கண்களால் கண்ட கோபர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு வியந்தனர். இதன் பின் மலைமீதிருந்த உருவம் மறைந்தது. அதனிடமிருந்து பல வரங்களைப் பெற்றுக் கொண்டு கோபர்களும் மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தனர்.
Wednesday, February 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment