Wednesday, February 3, 2010

விஷ்ணு புராணம் - 75

04_19. யயாதியின் கடைசி புத்ரனாக சர்மிஷ்டைக்குப் பிறந்த பூருவின் வம்சம், பூரு, ஜனமேஜயன், ப்ரசின்வான், ப்ரவீரன், மனஸ்யு, அபயதன், ஸுத்யு, பஹுகதன், ஸம்யாதி, ரௌத்ராச்வன் என வளர்ந்தது. இந்த ரௌத்ராச்வனுக்கு ருதேபு, கக்ஷேபு, ஸ்தண்டிலேபு, க்ருதேபு, ஜலேபு, தர்மேபு, த்ருதேபு, ஸதலேபு, ஸன்னதேபு, வனேபு என்று பத்து புத்ரர்கள். ருதேபு அந்திநாரனையும், அவன் ஸுமதி, அப்ரதிரதன், த்ருவன் என்ற மூவரையும் பெற்றனர். அப்ரதிரதனுக்கே கண்வர் பிறந்தார். அவருக்குப் பிறந்த மேதாதிதி முதல் இந்த வம்சத்தைச் சேர்ந்த அனைவரும் ப்ராஹ்மணர்கள் ஆயினர். கண்வரைத் தவிர அப்ரதிரதனுக்கு ஐலீனன் என்ற மற்றொரு மகன் உண்டு.

இந்த ஐலீனனுக்கு துஷ்யந்தன் முதலான நான்கு புத்ரர்கள். இந்த துஷ்யந்தனுக்கே சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பரதன் பிறந்தான். விச்வாமித்ர மஹரிஷிக்கும், அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த சகுந்தலையை கண்வர் காத்து வந்தார். அவளை காந்தர்வ முறையில் மணந்து, அவளை கர்ப்பவதியாக்கி விட்டு நாடு திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விட்டான். தன் பிள்ளையுடனும், கண்வ சிஷ்யர்களுடனும் ஸபைக்கு வந்திருந்த சகுந்தலையை ஏற்கவும் மறுத்து, அவமதித்துப் பேசி விடுகிறான். அப்போது "தாய் புத்ரனைத் தாங்கும் தோல் பை போன்றவளே. அவளிடம் எவன் கர்ப்பாதானம் செய்கிறானோ அவனுக்கே பிறக்கும் குழந்தை சொந்தம்.

தகப்பனே மீண்டும் புத்ரனாகப் பிறக்கிறான் என்கிறது வேதமும். எனவே துஷ்யந்த மஹாராஜனே! நீ தான் சகுந்தலையிடம் கர்ப்பாதானம் செய்திருக்கிறாய். அவள் உன் மனைவியே. எனவே அவளையும், உனக்கே உரிய இந்தக் குழந்தையையும் ஏற்றுக் கொண்டு காப்பாற்று(பரஸ்வ). அவளை அவமதிக்காதே. இந்த விஷயம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. யமனுடைய ஸபையில் இதேபோல் ஒரு முறை யாருக்குப் பிள்ளை சொந்தம் என்ற வாக்குவாதம் வந்த போது கர்ப்பாதானம் செய்தவனுக்கே பிள்ளை சொந்தம் என்று நிர்ணயிக்கப்பட்டது. எனவே இங்கும் நீயே இந்தக் குழந்தையைக் காக்க வேண்டியவன்.

உறையில் போட்டு வைக்கும் நெல், அதைக் கொட்டியவனுக்கே சொந்தமேயன்றி ஒருபோதும் உறைக்குச் சொந்தமில்லை. இங்கு சகுந்தலை கூறுவது போல் இந்தக் குழந்தையைக் காப்பதும் உன் கடமையே. நீயே அவனுக்குத் தந்தை. சகுந்தலைக்குக் கணவன்" என்று தேவர்கள் துஷ்யந்தனுக்கு உபதேஸித்த பின்பே அவன் இவர்களை ஏற்றுக் கொள்கிறான். காப்பாற்று (பரஸ்வ) என்ற பதத்திலிருந்தே அந்தக் குழந்தையும் பரதன் என்ற பெயரைப் பெற்றது. பரதனுக்கு மூன்று மனைவிகள். இவர்களிடமிருந்து பரதனுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளைக் கண்டு பரதன் தனக்குப் பிறந்தவர்கள் போல இல்லை, எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ஸந்தேகப்பட்டான். இதனால் இவன் மனைவிகள் மூவரும் வ்யபிசாரப் பேச்சுக்குப் பயந்து குழந்தைகளைக் கொன்று விட்டனர். பரதன் இப்படிக் குழந்தைகள் இல்லாமல் போனது பற்றியும், தன் வம்ச வ்ருத்தி பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

இது இப்படி இருக்க இதே ஸமயத்தில் தேவ குரு ப்ருஹஸ்பதி கர்ப்பவதியாயிருந்த தன் ஸகோதரன் உசத்யனின் மனைவி மமதையோடு புணர்ந்து தன் வீர்யத்தை அவளுக்குள் செலுத்தினான். தான் வளர்ந்து வரும் கருப்பையில் புதிதாக மற்றொரு கரு வளர்வதைக் கண்ட உசத்யனின் கரு, புதிதாக வந்திருக்கும் ப்ருஹஸ்பதியின் கருவை உதைத்து வெளியே தள்ளி விட்டது. இதனால் கோபம் கொண்ட ப்ருஹஸ்பதி உசத்யனின் கருவைக் குருடாகும்படி சபித்து விட்டார். அந்தக் குழந்தையே தீர்க்கதமஸ் என்ற பெயருடன் பிறந்தது. வெளியே விழுந்த வீர்யத்திலிருந்தும் ஒரு குழந்தை தோன்றியது. இது நம்மிருவரின் குழந்தை (த்வாஜம்). இதை நீயே காப்பாற்று (பர), என்று ப்ருஹஸ்பதியும், ஆண் உதவியின்றி நான் எப்படி காப்பாற்றுவது என்று மமதையும் அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.

காப்பாற்று (பர), இருவருக்கும் பிறந்த குழந்தையை(த்வாஜம்) என்ற தொடர்களால் இந்தக் குழந்தை பரத்வாஜர் என்று பெயர் பெற்றது. இந்த ஸமயத்தில் தான் பூலோகத்தில் பரதன் குழந்தைப்பேற்றுக்காக மருத்துக்களைக் குறித்து ஸோமயாகம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு இந்த பரத்வாஜனையே மகனாகக் கொடுத்து விட்டனர் மருத்துக்கள். ஸந்ததி அழிந்திருந்த போது கிடைத்ததால் பரதனின் இந்தக் குழந்தைக்கு விததன் என்ற பெயரும் உண்டு.

விததனுக்கு மன்யுவும், அவனுக்கு ப்ருஹத்க்ஷத்ரன், மஹாவீர்யன், நகரன், கர்கன் என்ற நால்வரும் பிறந்தனர். நகரனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு குருப்ரீதி, ரத்தி தேவன் என்ற இருவரும் பிறந்தனர். கர்கனுக்கு சினி பிறந்தான். இவர்களே சைன்யர் என்றும், கார்க்யர் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிறப்பால் க்ஷத்ரியர்களான இவர்கள் ப்ராஹ்மணர்களானார்கள். மஹாவீர்யனுக்கு துருக்ஷயனும், இவனுக்கு த்ரய்யாருணி, புஷ்கரிணன், கபி என்ற மூவரும் பிறந்து, இவர்களும் ப்ராஹ்மணர்களாக மாறினர். ப்ருஹத்க்ஷத்ரனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஹஸ்தியும்(ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கியவன்) பிறந்தனர். அஜமீடன், த்விஜமீடன், புருமீடன் மூவரும் ஹஸ்தியின் பிள்ளைகள்.

அஜமீடனுக்குக் கண்வர் (முன்பு அப்ரதிரதருக்குப் பிறந்தவர் கண்வர் என்று கூறப்பட்டிருந்தது, இப்போ அஜமீடனுக்கு, இன்னும் எவ்ளோ பேருக்கோ, ரிஷி மூலம் ஒண்ணும் புரியல, போங்க), ப்ருஹதிஷு என்று இரு புத்ரர்கள். கண்வரின் புதல்வர் மேதாதிதி. இவர்களும் ப்ராஹ்மணர்கள். ப்ருஹதிஷுவின் வம்சம் ப்ருஹதிஷு, ப்ருஹத்தனு, ப்ருஹத்கர்மா, ஜயத்ரதன், விச்வஜித், ஸேனஜித், அவனுக்கு ருசிராச்வன், காச்யன், த்ருடஹனு, வத்ஸஹனு என்பவர்களும், இதில் ருசிராச்வன், ப்ருதுஸேனன், பாரன், நீலன், அவனுக்கு ஸமரன் முதலாக நூற்றி ஒன்று பிள்ளைகளும், ஸமரனுக்கு பாரன், ஸுபாரன், ஸதச்வன் மூவரும் பிறந்தனர். இந்த ஸமரன் கம்பில்யா நகரத்திற்கு அதிபதியாக இருந்தான்.

ஸுபாரனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விப்ராஜனும், அவனுக்கு அணுஹரும் பிறந்தார். இந்த அணுஹரே வ்யாஸ புத்ரரான ஸுக ப்ரஹ்மத்தின் பெண்ணான கீர்த்தியை மணந்தார். இவருக்கு ப்ரஹ்மதத்தனும், அவனுக்கு விஷ்வக்ஸேனனும், அவனுக்கு உதக்ஸேனனும், அவனுக்கு பல்லாடனும் பிறந்தனர். ஹஸ்தியின் இன்னொரு மகனான த்விஜமீடன் வம்சம் த்விஜமீடன், யவநரன், த்ருதிமான், ஸத்யத்ருதி, த்ருடநேமி, ஸுபார்ச்வன், ஸுமதி, ஸந்ததிமான், க்ருதன், உக்ராயுதன், க்ஷேம்யன், ஸுதீரன், ஸஞ்ஜயன், பஹுரதன் என்பவர்களும் பிறந்தனர். இதில் க்ருதன் ஹிரண்யநாபன் என்பவனிடமிருந்து யோகம் பயின்றான். ப்ராச்ய ஸாமர்களுடைய இருபத்து நான்கு ஸம்ஹிதைகளையும் செய்தான். இவர்களே பௌரவ வம்சத்தவர்கள். இவன் மகன் உக்ராயுதன் நீபர்கள் எனும் க்ஷத்ரியர்களை அழித்தான்.

அஜமீடனுக்கு நளினி என்ற மனைவியிடம் நீலனும், அவனுக்கு சாந்தியும், அவனுக்கு ஸுசாந்தியும், அவனுக்குப் புரஞ்ஜயனும், அவனுக்கு ருக்ஷனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு முத்கலன், ஸ்ருஞ்ஜயன், ப்ருஹதிஷு, யவநரன், காம்பில்யன் என்ற ஐவரும் பிறந்தனர். இந்த ஐவரே பாஞ்சாலர்கள். ஹர்யச்வன் இவர்களை தன் ஐந்து ராஜ்யங்களையும் பாதுகாக்க நியமித்தான். முத்கலனிடமிருந்து மௌத்கல்யர்கள் தோன்றி அவர்களும் பின்னர் ப்ராஹ்மணர்களாயினர். முத்கலனுக்கு திவோதாஸன் என்ற மகனும், அஹல்யை என்ற பெண்ணும் இரட்டைகள். இந்த அஹல்யையின் கணவர் சரத்வதர் என்ற கௌதமர். இவர்களின் மகன் சதானந்தர்.

தனுர் வேதத்தில் முழுமை பெற்றிருந்த ஸத்யத்ருதி இவரது மகன். இவர் ஒரு ஸமயம் அப்ஸரஸ் ஊர்வஸியைப் பார்த்துக் காமமுற்ற போது இவரது வீர்யம் வெளிப்பட்டு ஒரு நாணற்புதரில் விழுந்தது. அதிலிருந்து ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தோன்றின. அவர்களை அந்த ஸமயம் வேட்டைக்கு வந்திருந்த ஸந்தனு மஹராஜன் க்ருபையால் எடுத்துச் சென்று வளர்த்தான். இதனால் இவர்களுக்கு க்ருபன், க்ருபி என்று பெயர். இந்த க்ருபி மஹரிஷி த்ரோணரை மணந்து அச்வத்தாமாவைப் பெற்றாள். திவோதாஸன் (அஹல்யையின் ஸஹோதரன்) மித்ராயுவைப் பெற்றான். அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு ஸௌதாஸனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு ஸோமகனும், அவனுக்கு ஜந்து முதலான நூறு பிள்ளைகளும் பிறந்தனர்.

ப்ருஷதன் இந்த நூறு பிள்ளைகளில் கடைசி. இவனுக்கு த்ருபதனும், அவனுக்கு த்ருஷ்டத்யும்னனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும் பிறந்தனர். அஜமீடனின் இன்னொரு புதல்வனான ருக்ஷனுக்கு ஸம்வரணனும், அவனுக்குக் குருவும் பிறந்தனர். இவன் நிர்மாணித்ததே தர்ம க்ஷேத்ரம் எனப்படும் குருக்ஷேத்ரம். இந்த குருவிற்கு ஸுதனு, ஜஹ்னு, பரீக்ஷித் முதலானோர் பிறந்தனர். இதில் ஸுதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு க்ருதகனும், அவனுக்கு உபரிச்ரவஸுவும், அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ரத்யக்ரன், குசாம்பன், குசேலன், மாத்ஸ்யன் முதலான எழுவரும், ப்ருஹத்ரதனுக்கு குசாக்ரனும், அவனுக்கு வ்ருஷபனும், அவனுக்கு புஷ்பவானும், அவனுக்கு ஸத்யஹிதனும், அவனுக்கு ஸுதன்வாவும், அவனுக்கு ஜந்துவும் பிறந்தனர்.

இந்த ப்ருஹத்ரதனுக்குப் பிறந்த இன்னொரு மகன் இரு பிளவுகளாகப் பிறந்ததால் தூக்கி எறியப்பட்டு, ஜரா என்ற ராக்ஷஸியால் மீண்டும் உடல்கள் சேர்க்கப்பட்டான். இதனால் அவன் ஜராஸந்தன் என்றழைக்கப்பட்டான். இவன் மகன் ஸஹதேவன், அவனுக்கு ஸோமபன், அவனுக்கு ச்ருதிச்ரவஸ்ஸும் பிறந்தனர்.

இதுவே மாகதர்களின் வரலாறு.

No comments:

Post a Comment