Sunday, February 14, 2010

விஷ்ணு புராணம் - 85

05_05. மதுராவிற்குக் கப்பம் கட்ட வந்திருந்த நந்தகோபனைக் காணச் சென்றார் வஸுதேவர். அவனிடம் "இந்த முதிர்ந்த வயதிலும் உமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது பற்றி மிக்க ஸந்தோஷம். பெரும் பாக்யமே இது. எனக்கும் அங்கு ரோஹிணியினிடம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீங்கள் வருடாந்திர கப்பம் செலுத்தி விட்டீர்களென்றால் விரைவில் கோகுலம் திரும்புங்கள். சொத்து படைத்தவர்கள் வந்த வேலை முடிந்து விட்டால் இப்படிப்பட்ட அரசனிடம் இருக்கக் கூடாது. கோகுலத்தில் என் குழந்தையையும் உங்கள் குழந்தை போல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறி கோபர்களை கோகுலம் திரும்ப வற்புறுத்தினார். அதன்படியே கப்பங்களைக் கட்டிய அவர்களும் பொருள்களுடன் வண்டிகளில் கோகுலம் திரும்பினர்.

அப்போது ஒரு இரவில் குழந்தைகளுக்குப் பாலூட்டி அவர்களைக் கொல்வதற்காக பூதனை அழகிய உருவில் வந்து தூங்கிக் கொண்டிருந்த க்ருஷ்ணனுக்கும் பால் கொடுத்தாள். அவளிடம் பாலுண்டால் குழந்தைகள் உடனே இறந்து விடும். ஆனால் க்ருஷ்ணன் கோபத்துடன் பலாத்காரமாக அவள் மார்பகங்களைத் தன்னிரு கைகளாலும் நன்கு பிடித்துக் கொண்டு பால் குடிப்பதாக அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சினான். பயங்கரமான அலறலுடன் உடல் சந்திகள் முறுக பூமியில் விழுந்து தன் உயிரை விட்டாள் பூதனை. உறங்கிக் கொண்டிருந்த கோகுலம் இவள் அலறல் சத்தம் கேட்டு திடீரென விழித்தெழுந்தது. வெளியே ஓடி வந்தவர்கள் இறந்து கிடக்கும் பூதனையையும், அவள் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் க்ருஷ்ணனையும் கண்டனர். யசோதை ஓடி வந்து வாரி எடுத்துக் கொண்டாள் குழந்தையை.!

பசுமாட்டின் வாலைச் சுற்றி த்ருஷ்டி கழித்தாள் குழந்தைக்கு. நந்தகோபனும் பஸ்மத்தை எடுத்து சாப்பிட்டான். "நாபிக்கமலத்திலிருந்து உலகை உண்டாக்கும் ஹரியும், வராஹமூர்த்தியும், கேசவனும், ந்ருஸிம்ஹமும் உன்னைக் காக்கட்டும். உன் ஸிரஸை கோவிந்தனும், கழுத்தைக் கேசவனும், வயிற்றை விஷ்ணுவும், முழங்காலையும், கால்களையும் ஜனார்த்தனனும், முகம், கைகள், மனம் இன்னும் இந்த்ரியங்களை நாராயணனும் காக்கட்டும். விஷ்ணுவின் வில்லும், சக்ரமும், வாளும், சங்கத்தின் ஒலியும் உனக்கு விரோதமானதும், கொடியதுமான பூத, ப்ரேத, பிசாசங்களை உன்னிடமிருந்து விரட்டட்டும்.

திசைகளில் வைகுந்தனும், மூலைகளில் மதுஸூதனனும், ஆகாயத்தில் ஹ்ருஷீகேசனும், பூமியில் மஹீதரனும் இருந்து கொண்டு உன்னைக் காக்கட்டும்" இப்படிக் கூறிக்கொண்டு நந்தனும், யசோதையும் குழந்தைக்கு ரக்ஷையிட்டனர். சாந்தி கர்மாக்களைச் செய்த பின் நந்தன் குழந்தையை வண்டியின் கீழே தொட்டிலில் இட்டான். பூதனையின் பெரிய உடலைக் கண்ட கோபர்கள் பயந்தும், திகைத்தும் நின்றிருந்தனர்.

No comments:

Post a Comment