Wednesday, February 17, 2010

விஷ்ணு புராணம் - 91

05_11. பல காலமாக நடந்து கொண்டிருந்த இந்த்ர பூஜை நிறுத்தப்பட்டதை அறிந்த இந்த்ரன் கோபம் கொண்டு ஸம்வர்த்தகம் எனும் உலகையே அழிக்கக்கூடிய மேகக் கூட்டங்களைக் கூட்டி அந்த தேவதைகளிடம், "மேகங்களே, நான் சொல்வதைக் கேட்டு உடனே என் கட்டளையை நிறைவேற்றுங்கள். நந்த கோபன் க்ருஷ்ணனைப் பெற்றிருப்பதால் திமிர் கொண்டு, மற்ற கோபர்களோடு கூடி எனக்குச் செய்து வந்திருந்த யாகத்தை நிறுத்தி விட்டான். இந்த கோபர்களின் ஸுக வாழ்வுக்குக் காரணமாயிருக்கும் பசுக்களை ஒன்றும் விசாரிக்காமல் ஒன்று விடாமல் அழித்து விடுங்கள். நானும் யானையில் வருகிறேன். தண்ணீரையும், காற்றையும் ஒன்று சேர்த்து உதவுகிறேன். புறப்படுங்கள் உடனே. அப்போது தான் இவர்கள் திமிர் அடங்கும்" என்று உத்தரவிட்டுத் தானும் புறப்பட்டான்.

அதேபோல் எங்கும் அனைத்தும் அழியும்படி பலத்த மழை பெருங்காற்றோடு கூடி பொழிந்தது. கடும் இடியோடு, கண்ணைப் பறிக்கும் மின்னல்களோடு, இருள் சூழ்ந்து பொழிந்த இந்த மழையால் எங்கும் ஒரே வெள்ளக்காடானது. இதில் சிக்கி பசுக்கள் மூர்ச்சையடைந்தன. சில கன்றுகளைக் காத்துக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. கன்றுகளை வெள்ளத்தில் இழந்த வேறு சில பசுக்கள் கதறிக் கொண்டிருந்தன. கன்றுகள் வாட்டத்தால் சோர்ந்து தீனமாய்க் கத்திக் கொண்டிருந்தன. இப்படிப் பசுக்களும், கோபர்களும், கோபிகைகளும் துன்பப்படுவதைக் கண்ட க்ருஷ்ணன் "இந்த்ரன் தனக்கு நடந்து கொண்டிருந்த பூஜை நின்று விட்ட கோபத்தால் பகை கொண்டு இப்படிச் செய்கிறான். இதோ இந்த கோவர்த்தன மலையையே நான் பெயர்த்தெடுத்துக் இவர்களுக்குக் குடையாய்ப் பிடிப்பேன்" என்று நினைத்து அவ்வாறே அம்மலையைத் தன் ஒரு கையாலேயே பெயர்த்தெடுத்து இவையனைத்திற்கும் குடையாய்ப் பிடித்தான்.

இந்த்ரனை நினைத்து முகத்தில் புன்சிரிப்புடன் க்ருஷ்ணன் கோபர்களிடம், "கோபர்களே! காற்று, மழைக்கு அஞ்சாமல் இதற்கு அடியில் எங்கு ஸுகமோ அங்கு வந்து தங்குங்கள். இந்த மலை மேலே விழுந்து விடுமோ என்றும் அஞ்ச வேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைத் தாங்குவது போல்தான் தாங்கியிருக்கிறேன்" என்று கூறி அழைத்தான். அவர்களும் தங்கள் பசு, மனைவி, மக்கள், சட்டி, பானை, வண்டிகள் என அனைத்துப் பொருள்களோடும் இதனடியில் பள்ளத்தில் வந்து மகிழ்வோடு தங்கிக் கொண்டனர். தங்கள் வேலைகளையும் பால் கறப்பது, கடைவது எனத் தொடர்ந்தனர். ஏழு நாட்கள் விடாமல் இந்த மழை பொழிந்தது. இந்த ஏழு நாட்களும் க்ருஷ்ணனும் தன் விரல்களாலேயே ஆடாமல், அசையாமல் கோவர்த்தன கிரியைக் குடை போல் பிடித்து கொண்டிருந்தான்.

மேனியில் எங்கும் சிறிதும் வாட்டமில்லை. விரல்களும், நகங்களும் நோகவில்லை. சந்தோஷத்தாலும், வியப்பாலும் விரிந்த கண்களோடு கோபர்களும், கோபிகைகளும் க்ருஷ்ணனின் பெருமையைப் பாட ஆரம்பித்து விட்டனர். நந்தகோகுலம் அழிவதற்காக ஏழு நாட்கள் இரவு பகலாகப் பெய்த மழை வெற்றியைத் தராததால் தோல்வியடைந்த இந்த்ரன் மேகங்களைத் திருப்பி அழைத்துக் கொண்டான். மழை நின்றது. இந்த்ரனின் மிரட்டல் பயனற்றுப் போனது. மேகங்கள் வெளிர் வாங்கின. கோபர்கள் குடையிலிருந்து வெளிவந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களைச் சேர்ந்தனர். க்ருஷ்ணனும் கோவர்த்தனத்தை மீண்டும் அதனிடத்திலேயே வைத்தான்.

No comments:

Post a Comment