Monday, February 22, 2010

விஷ்ணு புராணம் - 97

05_17. அக்ரூரர் தேர் விரைவாகச் செல்கிறது. பரமாத்மாவின் அம்சமாய் அவதரித்த ஒருவனைத் தர்ஸிக்கத் தனக்குக் கிடைத்த உயர்ந்த வாய்ப்பை, தான் பெற்ற பெறும் பேற்றை எண்ணித் தன்னைத் தானே வியந்து கொள்கிறார் அவர். "மஹா பாவியான கம்ஸனின் பணியாளாக இருந்து கொண்டு, அவன் பாவச் சோற்றையே நிதமுண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த என் பிறவி, மலர்ந்த தாமரையை ஒத்த திருமுகத்தை தர்ஸிக்க இருப்பதால் சாபல்யமடைந்தது. இதுநாள் வரை கம்ஸனின் கோர முகத்திலேயே விழித்து வந்த எனக்கு, இப்போது கண்ணனின் திருமுகத்தில் விழிக்கும்படி நேர்ந்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்திருக்கிறேனோ. பாவத்தைப் பெருகச் செய்யும் பாவியின் முகத்தையே கண்டு வந்திருக்கும் நான் இப்போது பாவமனைத்தையும் போக்கக்கூடியவனின் திருமுகத்தைக் காணப் போகிறேன்.

எவன் உருவை மனதில் நினைத்தாலே பாபங்கள் அனைத்தும் தொலையுமோ அவனை நான் நேரிலேயே பார்க்கப் போகிறேன். இந்த முகத்திலிருந்தல்லவா வேத, வேதாந்தங்கள் வெளிவருகின்றன. ஒளிரும் பொருள்களுக்கெல்லாம் இந்தத் திருமுகமல்லவா ஆதாரம். சந்த்ர, ஸூர்யர் இரு கண்களாக இருப்பதும் இந்த முகத்திலல்லவா. எவனால் இந்த உலகம் படைக்கப்பட்டு நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனை சாதுக்கள் கொண்டாடுகிறார்களோ, எவன் யாக, பூஜைகளில் கொண்டாடப்படுகிறானோ அவனையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். நூறு யாகங்களால் எவனை ஆராதித்து ஒருவன் தேவேந்த்ரனாகிறானோ, அந்த ஆதி அந்தமில்லா பரம்பொருளையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். எவன் குணங்களை ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, அச்வினி, வஸுக்கள், மருத்துக்கள் எவரும் அறியாரோ அந்த ஹரி இன்று என்னைத் தொடும் பாக்யம் பெறுவேன்.

உலகிற்கு ஆத்மாவாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்துமாக இருப்பவனும், மறைந்தும், நிறைந்தும் இருப்பவனும், அளவிட முடியாதவனும், அழிவற்றவனுமாக இருப்பவன் இன்று என்னோடு பேசப் போகிறான். பிறப்பறியாதவனும், மீனாக, ஆமையாக, பன்றியாக, குதிரையாக, சிங்கமாகப் பிறந்து உலகைக் காத்தவனும் இன்று என்னோடு பேசப் போகிறான். பூபாலன், விருப்பப்படி தோற்றங்களை எடுக்கக்கூடியவன் இன்று எதையோ மனதில் நினைத்து அவதரித்துள்ளான். இந்த உலகையே தன் தலையில் தரித்துக் காக்கும், அவன் அண்ணன் பலராமனோ என்னை அக்ரூர என்று அழைக்கப் போகிறான்.

அறிந்தவனும், அறிய முடியாதவனுமான அவனைத் தங்கள் உள்ளத்தில் வைத்தே, யோகிகள் அறியாமையும், மாயைகளும் நிறைந்த இந்த ப்ரபஞ்சத்தைக் கடக்கிறார்கள். யாகம் செய்பவர்கள் யக்ஞபுருஷனென்றும், பக்தி முறையோடு பூஜிப்பவர்கள் வாஸுதேவனென்றும், தத்துவமறிந்தவர்கள் விஷ்ணு என்றும் எவனைத் துதிக்கிறார்களோ அவனை நான் வணங்குகிறேன். இவ்வுலகில் காரணமும், காரியமுமாயிருக்கும் அவன் என்னோடு அனுகூலமாயிருக்க வேண்டும். எவன் பிறப்பில்லாத அந்த ஹரியை நம்பிக்கையோடு, மனதால் த்யானிக்கிறார்களோ, அவன் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கிறான்" என்றெல்லாம் இப்படிப் பலவாறு க்ருஷ்ணனைப் பற்றி மகிழ்வோடு சிந்தித்துக் கொண்டு சென்ற அக்ரூரர் ஸூர்யாஸ்தமனத்திற்கு சற்று முன்பாக, பசுக்களிடம் கோபர்கள் பால் கறந்து கொண்டிருக்கும் வேளையில் கோகுலத்தை அடைந்தார்.

காடுகளிலிருந்து ஓட்டிக் கொண்டு வந்த மாடுகளைக் கொட்டில்களில் கட்டி விட்டு பால் கறப்பதற்காக அங்கு நின்றுக் கொண்டிருந்த கண்ணனை, பசுக்களுக்கு மத்தியில், அலர்ந்த அல்லியின் நிறத்து உடலோடு, தாமரைக் கண்களோடு, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் குறியோடு, நீண்ட கைகளோடு, அகன்ற மார்போடு, உயர்ந்த மூக்குடன் இப்படி எவரையும் கவரும் தோற்றத்துடன் புன்சிரிப்போடு பொலிந்து, சிவந்த நகங்களுள்ள கால்களால் பூமியில் அங்குமிங்கும் நடந்து கொண்டு, மஞ்சள் பட்டாடையும், வனமாலைகளும், கையில் அப்போதுதான் பறித்த கொடியோடு, தலையில் வெண்தாமரை மாலையணிந்திருக்கும் நிலையில் முதன் முதலாகக் கண்டார் அக்ரூரர்.

க்ருஷ்ணனை அடுத்து, அன்னப் பறவை, மல்லிகை, சந்த்ரன் இவைகளின் நிறத்தில் உடலோடு, நீலப்பட்டாடையுடுத்தி, பெருத்த பலம் பொருந்திய கைகளோடு, மேகங்கள் சூழ்ந்த கைலாஸ மலையைப் போல், ப்ரகாசமாய் நின்றிருந்த பலராமனையும் கண்டார். கண்டதும் உடல் மயிர் சிலிர்க்க, உடல் பூரித்து நின்ற அக்ரூரர் முகம் தாமரை மலர் போல் மலர்ந்து விரிந்தது. மனதிலேயே ரமித்து வந்த இந்த இரு வாஸுதேவர்களை நேரில் கண்டதும் பக்தி பொங்கியது. கண்கள் பெற்ற பேற்றை நினைக்கிறார். "இவன் என்னைத் தீண்டினால் என் உடலும் பேறு பெற்றதாகும். எல்லாப் பாபங்களையும், தீமைகளையும் போக்குவதல்லவா அந்தக் கை, அதன் ஸ்பர்சம்.

இந்தக் கரம் தானே சக்ராயுதத்தை ஏவி, அஸுரர்களை அழித்து, உலகிற்கு நன்மை தருகிறது. வேண்டுவதை எல்லாம் அளிப்பதும் இந்தக் கரம் தானே. இந்தக் கரத்தில் நீர் வார்த்துத் தானே தேவர்களுக்கும் மேலான போகங்களைப் பெற்று மன்வந்த்ரம் முடிய அனுபவித்தான் மஹாபலி. அந்தக் கைகளால் என்னை அணைப்பானா" என்றெல்லாம் நினைத்த அக்ரூரர் "ஆஹா! அந்தப் பாபி கம்ஸனுடன் எனக்குள்ள தொடர்பால் இவன் என்னை வெறுப்பானோ. இல்லை ஏற்று என் பாபங்களைப் போக்குவானா. நல்லோர் வெறுத்து விட்டால் இந்தப் பிறவி வீணல்லவா. ஆனால் எப்போதும், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருக்கும், களங்கமற்ற தூயவனான, உண்மைப் பரம்பொருளான இந்த க்ருஷ்ணனுக்கு இந்த உலகில் தெரியாதது ஒன்றுமில்லை. என்னையும் அவனறிவான். எனவே சிறிதும் ஸந்தேஹமின்றி முழுதாக என்னை பக்தியோடு அர்ப்பணித்து, முதலும், நடுவும், இறுதியுமில்லாத விஷ்ணுவின் அம்சமான இந்த தேவதேவனிடம் செல்வேன்" என்று நினைத்து க்ருஷ்ணனிடம் சென்றார்.

No comments:

Post a Comment