Tuesday, February 23, 2010

விஷ்ணு புராணம் - 99

05_19. யமுனையில் மூழ்கியிருந்தவாறே க்ருஷ்ணனைத் துதித்தார் அக்ரூரர். மானஸீகமாக புஷ்பங்களால் அர்ச்சித்து, தூப உபசாரங்களைச் செய்தார். மற்றதையெல்லாம் மறந்து வெகுநேரம் அவர் மனம் அந்த பரப்ரஹ்மத்தினிடமே நிலைத்திருந்தது. இப்படி த்யானத்தில் இருந்து விட்டுப் பின் ஆத்ம லாபம் பெற்றதை நினைத்துக் கொண்டே நீரிலிருந்து வெளியேறி தேரிருக்கும் இடத்தை அடைந்தார். ஒன்றுமறியாத குழந்தைகளாக அங்கே தேரில் பலராமனும், க்ருஷ்ணனும் இருக்கக் கண்டார். அவரது ஆச்சர்யமான பார்வையைப் பார்த்த கண்ணன் "அக்ரூரரே, உமது கண்கள் மலர்ந்திருக்கின்றனவே. ஏதோ அற்புதமான ஒன்றைப் பார்த்தால் தான் கண்கள் இப்படியாகும். யமுனை நீரில் என்ன அற்புதத்தைக் கண்டீர்" என்றான்.

அக்ரூரர் "கண்ணா! நீரினுள் நான் எந்த அற்புதத்தைக் கண்டேனோ அதுவேதான் இதோ என்னெதிரில் உருக்கொண்டிருக்கிறது. உலகையே உடலாகக் கொண்ட பரமாத்மாவாகவேதான் நீ காட்சி தருகிறாய். அங்கும் இங்கும் ஒரே பரம்பொருளுடன் தான் நான களித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது என்னை கம்ஸ பயம் வாட்டுகிறது. உன் விளையாட்டால் நேரமும் ஆகிவிட்டது. இனிமேல் கம்ஸன் நேரமாகிவிட்டதே என்று கோபிப்பான். அடுத்தவரிடம் வேலை செய்து அவர்கள் தருவதைக் கொண்டு ஜீவனம் செய்யும் எவர்க்கும் இதுதான் கதி. எனவே நாம் விரைந்து மதுரையை அடைவோம்" என்று கூறிக் கொண்டு, தேரிலேறி குதிரைகளை விரட்டினார்.

மாலைப் பொழுதில் மதுரை நகர எல்லையை வந்தடைந்ததும், அக்ரூரர் ராம, க்ருஷ்ணர்களிடம் "நீங்களிருவரும் நடந்தே கம்ஸன் மாளிகைக்கு வாருங்கள். நான் தேரில் செல்கிறேன். வாஸுதேவர் க்ருஹத்திற்குச் செல்லாதீர்கள். ஏற்கனவே அவர் உங்களால் பல துன்பங்களை கம்ஸனிடம் அனுபவித்து வருகிறார். எனவே நேராக கம்ஸன் மாளிகைக்கே வந்து விடுங்கள்" என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தேரில் கம்ஸனிடம் சென்றார். ராம, க்ருஷ்ணர்கள் ராஜ வீதியில் நடந்து செல்லலானார்கள். வழியெங்கிலும் ஆண்களும், பெண்களுமாக பலர் நின்று இவர்களைத் தர்ஸித்து ஆனந்திக்க, இரு இளம் யானைகள் போல இவர்கள் விளையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கம்ஸனுக்குத் துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் சென்று கொண்டிருந்தான். அவன் வைத்திருக்கும் உயர்ந்த வஸ்த்ரங்களைப் பார்த்ததும், தங்களுக்கு உடுத்திக் கொள்ள அவற்றில் இரண்டைத் தருமாறு அவனிடம் புன்சிரிப்புடன் கேட்டனர். கம்ஸனின் ஆதரவில் இருக்கும் அவன் இவர்கள் இருவரையும் வாயில் வந்தபடி தீய சொற்களால் அர்ச்சித்தான். இதனால் கோபம் கொண்ட கண்ணன் அவனை அங்கேயே அடித்துக் கொன்று போட்டான். பொன்னிறப் பட்டாடை ஒன்றை எடுத்து க்ருஷ்ணனும், நீல நிறத்தில் ஒன்றை பலராமனும் உடுத்திக் கொண்டு, ஒரு பூக்கடைக்காரனிடம் சென்றனர் இருவரும். அவன் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

இவர்கள் யாராக இருக்கக் கூடும், எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று திகைப்போடு யோசித்தான். இவ்வளவு அழகாக பொன்னிறத்திலும், நீல நிறத்திலும் பட்டாடைகள் அணிந்து வந்திருக்கும் இவர்கள் பூலோகத்திற்கும் வந்திருக்கும் தேவர்களோ என்று நினைத்தான். குழந்தைகள் அவனிடம் கொஞ்சம் பூக்கள் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் துள்ளினான். கீழே விழுந்து கைகூப்பி, சிரஸால் அவர்களை வணங்கினான். "தெய்வங்கள் பெருங்கருணையோடு என்னை உய்விக்க என் வீட்டிற்கே வந்திருக்கின்றன. எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் நான். இவர்களுக்கு நன்கு மரியாதை செய்வேன்" என்று கூறிக் கொண்டே அந்த பூக்காரர் பலமுறை அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கியபடி, ஸந்தோஷமான முகத்தோடு, குழந்தைகள் விரும்பியபடி, அவர்கள் த்ருப்தி அடையும்படி, உயர்ந்த, பல வண்ணங்களில், அழகழகாக, பல வாசனைகளில், புத்தம் புதிதாக பூக்களை எடுத்து, எடுத்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி இந்த பூக்காரரின் உபஸரிப்பில் பெரிதும் மகிழ்ந்த க்ருஷ்ணன் "நண்பா, புண்யம் செய்தவனே, என்னை அர்ச்சித்த உன்னை நான் ஒரு போதும் கைவிடேன். லக்ஷ்மி உன்னிடம் எப்போதும் நிலையாக இருப்பாள். உனக்கு சோர்வோ, பொருட்குறைவோ ஒருபோதும் நேராது. உன் ஸந்ததிகள் மேன் மேலும் பெருகும். பூலோகத்தில் பல போகங்களையும் அனுபவித்து, இறுதியில் என்னையே த்யானத்து, என் அனுக்ரஹத்தால் உயர்ந்த லோகத்தை அடைவாய். உன் மனம் எப்போதும் தர்மத்திலேயே லயித்திருக்கும். நீயும் உன் ஸந்ததிகளும் எந்தவொரு இயற்கை உபாதைகளும் அண்டாது, நீண்ட ஆயுளோடு வாழ்வீர்களாக" என்று பல ஆசிகளை அவனுக்கு அருளிச் செய்து விட்டு, பலராமனோடு அங்கிருந்து சென்றான்.

No comments:

Post a Comment