05_02. பிறப்பறியாத இறைவனும் தேவகியின் வயிற்றில் எட்டாவது கர்ப்பமாக மூவுலகிற்கும் க்ஷேமம் செய்யும் பொருட்டு உண்டானான். ஜகத்தாத்ரியும் அதே தினத்தில் யசோதையின் கர்ப்பத்தில் ப்ரவேசித்தாள். க்ரஹங்கள் பொலிவுடன் இருக்க, ருதுக்கள் ஸந்தோஷிக்க, தேவகியும் புதுப் பொலிவு பெற்றாள். அவளை எவராலும் பார்க்க முடியவில்லை. பார்த்தவர் சித்தம் கலங்கின. தேவர்களும் "ப்ரக்ருதி மஹத் தத்வத்தைத் தரித்திருப்பது போல், ப்ரணவம் வேதங்களைத் தரித்திருப்பது போல், ஸ்ருஷ்டி ஸ்ருஷ்டிக்க இருக்கும் பொருள்களைத் தரிப்பது போல், வேதங்கள் யக்ஞங்களைத் தரிப்பது போல், பூஜை பலனைத் தரித்திருப்பது போல், அரணிக்கட்டை அக்னியைத் தரித்திருப்பது போல், அதிதி தேவர்களைத் தரித்திருப்பது போல்,
பின்மாலைப் பொழுது பகலைத் தரித்திருப்பது போல், பெரியோருக்குச் செய்யும் பணிவிடை ஞானத்தைத் தரித்திருப்பது போல், வெட்கம் வணக்கத்தைத் தரித்திருப்பது போல், ஆசை பொருள்களைத் தரித்திருப்பது போல், த்ருப்தி ஸந்தோஷத்தைத் தரித்திருப்பது போல், நினைவு அறிவைத் தரித்திருப்பது போல், ஆகாசம் க்ரஹங்களையும், நக்ஷத்ரங்களையும் தரித்திருப்பது போல் இந்த தேவகியும் பரமாத்மாவைத் தரித்திருக்கிறாள். எனவே அவைகளும், இந்த தேவகியும் ஒன்றே.
ஸமுத்ரங்கள், ஆறுகள், கண்டங்கள், சிறிதும் பெரிதுமான நகரங்கள், க்ராமங்கள், குக்ராமங்கள், அக்னிகள், நீர் நிலைகள், காற்றுகள், நக்ஷத்ரங்கள், நக்ஷத்ரக் கூட்டங்கள், க்ரஹங்கள், ஆகாயம், பல்வேறுபட்ட ரதங்களுடன் கூடிய தேவக்கூட்டங்கள், மூலக்கூறுகளின் மூலங்கள், பல குணங்களுடைய நிலப் பகுதிகள், ஸ்வர்க்கம், சாதுக்கள், ஞானிகள், துறவிகள், ப்ரஹ்மாவின் தேவ பூத பிசாச நாக புருஷ ம்ருக என அனைத்தையும் அடக்கிய ப்ரஹ்மாண்டமும், ப்ரஹ்மாவும், இன்னும் அனைத்து உயிர்களும் யாரிடம் லயித்து அடங்கியிருக்கிறதோ, எவனின் உண்மை ஸ்வரூபத்தையும், குணங்களையும், பெயர்களையும், பரிமாணங்களையும் எவராலும் அறிய முடியாதோ அந்த விஷ்ணுவே உலகங்களைக் காக்க இங்கு கர்ப்பத்தில் இருக்கிறார். தேவியே, உலகுக்கு நல்லதைச் செய்வாயாக, உலகைக் காக்கும் உத்தமனான இவனை நீயும் ஆசையோடு தரிப்பாயாக" என தேவகியைத் துதித்து நின்றனர்.
Wednesday, February 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment