Sunday, February 21, 2010

விஷ்ணு புராணம் - 96

05_16. இதன்படியே கம்ஸனின் தூதன் கூறியபடி, வ்ருந்தாவனத்தில் கேசினி என்ற அஸுரன், தன் பலத்தில் கர்வங்கொண்டு குதிரை உருக்கொண்டு கண்ணனைக் கொல்வதற்காக மேகம் நடுங்கக் கனைத்துக் கொண்டு, ஸூர்ய, சந்த்ரர்களையும் தாண்டி விடுவது போல் தாவிக் கொண்டு, ஓடி வந்தான். அவன் கனைப்பைக் கேட்ட அனைவரும் பயந்து கொண்டு க்ருஷ்ணனிடம் ஓடினர். க்ருஷ்ணன் "நீங்கள் ஏன் இந்தக் கேசினிக்கெல்லாம் பயப்படுகிறீர்கள். கம்ஸனே நம்மைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் அவன் வராமல் இப்படி ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட வீரர்களான நீங்கள் இந்தக் குதிரைக்குப் பயப்பட்டால், உங்களுக்கு வீர்யமே இல்லையென்றாகிவிடும்.

மேலும் நானிருக்கையில் நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். அப்போதுதான் பலம் பொருந்திய தலைவன் இருப்பதால் தான் அவர்கள் பயப்படாமலிருக்கிறார்கள் என்று உலகம் கூறும். நீங்கள் இப்படிப் பயந்தால் இவர்கள் தலைவன் பலமற்ற கோழை போலும் என்று எவரும் இகழ்வார்கள். எனவே நீங்களும் பயப்பட்டு, என் பலத்தையும் அழிக்கப் பார்க்கிறீர்கள். உங்களைக் காப்பதற்காக இருக்கும் நான் வீரன் என்றால் நீங்கள் அஞ்சாதீர்கள், தக்ஷயக்ஞத்தில் வீரபத்ரன் பூஷாவின் பற்களை உதிர்த்தது போல், நானும் இவனைச் செய்வேன்" என்று அவர்களைத் தேற்றிக் கொண்டே முன் வந்தான் க்ருஷ்ணன்.

தன்னை நோக்கி வாயைப் பிளந்து கொண்டு ஓடி வந்த கேசினியின் வாயில் தன் கையை விட்டான் க்ருஷ்ணன். அந்தக் கை வளர்ந்து கொண்டே சென்றது. உடலை மாய்க்கும் வரை வளரும் நோய் போல் வளர்ந்த அந்தக் கையால் பற்கள் வெண் மேகம் போல் உதிரப் பெற்று, ரத்தத்தையும், நுரையையும் கக்கிக் கொண்டும், கண்கள் சுழல அலறிக் கொண்டும், சந்திகள் உடைய, உடல் இரு பாகமாய்க் கிழியப் பெற்றும், மின்னலால் தாக்குண்ட மரம் போல், பூமியதிர கீழே விழுந்து துடிதுடித்து மாண்டான் கேசினி. ஒவ்வொரு பகுதியும் இரு கால்கள், பாதிப் பின் பகுதி, பாதி வால், ஒரு காது, ஒரு கண், ஒரு மூக்கு என பாகங்களைக் கொண்டிருந்தது. தான் ஒரு பங்கமோ, சோர்வோ இன்றி சிரித்துக் கொண்டு நின்றான் கண்ணன். கோபர்கள் மீண்டும் மகிழ்ந்து கண்ணனைச் சூழ்ந்து கொண்டு, பாடிக் கொண்டாடிப் பரவசமானார்கள்.

கேசினியுடனான க்ருஷ்ணனின் யுத்தத்தை இதுவரை வானிலிருந்து மறைந்து பார்த்துக் கொண்டிருந்த நாரத முனிவர், அவன் ஜயிக்கப்பட்டதைக் கண்டு ஸந்தோஷத்துடன் கண்ணனிடம் வந்து "க்ருஷ்ணா! குதிரைக்கும், மனிதனுக்கும் இதுவரை நடந்த இந்த யுத்தத்தை வேறெங்கும் காண முடியாது. இதைக் காணவே நான் ஸ்வர்கத்திலிருந்து வந்தேன். இந்த கேசி தேவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்தவன். இவன் கனைப்பைக் கேட்டால் தேவேந்த்ரனே பயப்படுவானென்றால், மற்ற தேவர்களைப் பற்றி நான் சொல்வதற்கென்ன. அப்படிப்பட்ட இவனை நீ கொன்றொழித்தாய். இது மிகவும் நல்ல காரியம். நீ நிகழ்த்தும் இப்படிப்பட்ட அற்புதச்செயல்களைக் கேட்டு எப்போதும் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். கேசினியைக் கொன்ற நீ இனி கேசவன் என்றழைக்கப்படுவாய்.

க்ஷேமம் உண்டாகட்டும் உனக்கு. நான் புறப்படுகிறேன். நாளை மறுநாள் நீ கம்ஸனோடு யுத்தம் செய்யும் போது மறுபடி உன்னை வந்து பார்க்கிறேன். இவர்களைக் கொன்றதெல்லாம் போதாது. நீ அவனைக் கொன்றால் தான் பூமியின் பாரம் குறைந்ததாகும். பூபாரம் குறைப்பதில் நீ பல அரசர்களோடு போரிட வேண்டியிருக்கும். நீ நீண்ட ஆயுளோடு அவர்களோடுப் புரியப் போகும் அந்த அற்புத யுத்தங்களை நான் கண்டு களிக்க வேண்டும். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. நான் புறப்படுகிறேன். இந்தக் கேசினி வதத்தின் மூலம் நீ தேவர்களுக்குப் பெரிய உதவி செய்துள்ளாய். இன்னும் நீ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அனைத்தையும் நான் உனக்கு உரைக்கத் தேவையில்லை. உனக்கே தெரியும். நான் வருகிறேன். உனக்கு மங்களமுண்டாகட்டும்" என்று ஆசி கூறி விடை பெற்றுச் சென்றார் நாரதர். அதன் பின் கோபர்கள் கொண்டாட, அவர்கள் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டு க்ருஷ்ணன் கோகுலம் சேர்ந்தான்.

No comments:

Post a Comment