Monday, February 15, 2010

விஷ்ணு புராணம் - 87

05_07. இப்படி அண்ணாவுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணன் ஒரு நாள் தனியாக, நண்பர்களுடன் கூடி யமுனைக் கரையில் காட்டுப் பூக்களைச் சூடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்படியே யமுனையின் ஒரு மடுவிற்குச் சென்றான். அந்த மடுவில் தான் காளியன் என்ற ஒரு மஹா ஸர்ப்பம் வஸித்துக் கொண்டிருந்தது. அதன் விஷத்தால் அந்தப் பகுதியில் நீர் எப்போதும் கொதிப்போடிருந்து வந்தது. கரையிலிருந்த மரங்களும், வானில் பறக்கும் சிறு பறவைகளும் கூட அதன் கொடிய விஷத்தால் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இப்படி எமனின் வாயாக இருந்து வந்தது அந்த மடு.

"இந்த மடுவில் தான் காளியன் இருக்கிறான். இந்த துஷ்டனை இங்கிருந்து விரட்டி விட்டால் அவன் ஸமுத்ரத்திற்குச் சென்று விடுவான். யாருக்கும் பயன்படாமலிருக்கும் இந்த இடமும், மடுவும், யமுனையும் பசுக்களுக்கும், இடையர்களுக்கும் இன்னும் எல்லோருக்கும் பயன்படும் இடமாக மாறும். ஆக இவனை இங்கிருந்து நிக்ரஹம் செய்து விட வேண்டும்" என்று கூறிக்கொண்டு க்ருஷ்ணன் அருகில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த கடம்ப மரத்தின் மேலேறி, உடைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு காளியன் இருக்கும் அந்த மடுவில் வேகமாகக் குதித்தான். அப்போது அங்கிருந்து தெளித்த விஷ நீரில் நனைந்த மரங்கள் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன. கண்ணனும் தன் தோள்களைத் தட்டி சத்தம் போட்டான்.

சத்தம் கேட்டு ஸர்ப்பராஜனும், மேலும் பல ஸர்ப்பங்களும், ஹாரங்களுடனும், குண்டலங்களுடனும் நாக பத்னிகளும் நூற்றுக் கணக்கில் அங்கு வந்து கூடினர். சிவந்திருந்த காளியன் முகத்திலிருந்து விஷத்தீ வெளி வந்தது. ஸர்ப்பங்கள் க்ருஷ்ணனை இறுக்கிக் கட்டிக் கொண்டு, விஷத்தைக் கக்கிக் கொண்டு கடித்தன. இதைக் கண்ட மற்ற இடைச் சிறுவர்கள் கோகுலத்திற்கு ஓடி "க்ருஷ்ணன் முட்டாள் தனமாகக் காளியன் மடுவில் விழுந்து விட்டான், காளியன் அவனைக் கடித்து விழுங்குகிறான். வாருங்கள், வந்து பாருங்கள்" என்று கூக்குரலிட்டனர். இடி விழுந்தது போன்ற இந்த வார்த்தைகளைக் கேட்டு கோபியர்கள், யசோதையை முன்னிட்டுக் கொண்டு கால்கள் தடுமாறி, பயத்துடனும், அழுது கொண்டும் மடுவை நோக்கி ஓடினர்.

நந்தனும், மற்ற கோபர்களும், ஜயிக்கமுடியாத ராமனும் க்ருஷ்ணனுக்கு உதவ யமுனைக் கரைக்கு ஓடினர். மடுவில் காளியனால் தப்ப வழியில்லாமல் கட்டப்பட்டு, பொலிவற்று, செயலற்றிருக்கும் க்ருஷ்ணனைக் கண்டனர். நந்தகோபனும், யசோதையும் உணர்வற்று, நினைவற்றவராயினர். கோபியர்கள் "நாமும் யசோதையோடு இந்த மடுவிலேயே குதித்து விடுவோம். ஸூர்யனில்லாத பகலும், சந்த்ரனில்லாத இரவும், எருதுகள் இல்லாத பசுக்களும் போன்றது க்ருஷ்ணன் இல்லாத கோகுலம். நாம் அங்கு செல்ல வேண்டாம். பிறந்த வீடாக இருந்தாலும், க்ருஷ்ணன் இல்லாத கோகுலம் நீரில்லாத ஆறு போல் அழகழிந்து போனதே. நமக்கு அங்கு மகிழ்ச்சி இருக்காது. காளியன் பிடியில் இருந்தும் க்ருஷ்ணன் நம்மைக் கண்டதும் சிரிக்கிறான் பாருங்கள்" என்றெல்லாம் கூறி அழுது கொண்டிருந்தனர்.

இப்படி கோபியர் அழவும், நந்த கோபனும், யசோதையும் மூர்ச்சிக்கவும் கண்ட ரோஹிணியின் மகன் யாருக்கும் புரியாதபடி க்ருஷ்ணனைத் துதிக்கிறான். "தேவதேவ, என்ன இது. நீ மனிதர்களின் ஸ்வபாவத்தையே காட்டுகிறாயே. இந்தக் காளியன் கடிக்க, மூர்ச்சையடைகிறாயே. இன்னும் நீ உன்னை உணரவில்லையா. நீ அனந்தன் அல்லவா. ஸர்வேச்வரனல்லவா. வண்டிச் சக்ரத்தின் மையம் போல, நீயல்லவோ இந்த உலகிற்கு ஆதாரம். நீதானே முச்செயல் புரிபவனும். வேத ஸ்வரூபியே! உன்னையல்லவா தேவர்களும், யோகிகளும் பூஜிக்கின்றனர்.

பூதேவியின் ப்ரார்த்தனைப்படி அவள் பாரத்தைக் குறைக்கத் தானே நீ அவதரித்திருக்கிறாய். அப்படித்தானே உன் அம்சமான நானும் உனக்கு அண்ணனாகப் பிறந்திருக்கிறேன். நீ இப்படி மனுஷ்யனாக லீலைகள் செய்வதால், மற்ற தேவர்களும் அப்படியே இடையர்களாகப் பிறந்து உன்னுடனே வாழ்கின்றனர். நீயும் இடையனில்லை. அவர்களும் இடையர்கள் அல்ல. அவர்கள் தேவர்கள். நீ அவர்களுக்கெல்லாம் தேவன். கோபிகைகளையும் உன்னுடன் விளையாடுவதற்காக, நீயன்றோ முன்பாக அவதரிக்கச் செய்து, நீ பின்னால் பிறந்துள்ளாய். இப்போது நமக்கு இவர்களன்றோ பந்துக்களும் நண்பர்களும். உன் நிலைக் கண்டு கலங்கும் இவர்களை இப்போது புறக்கணிக்காமல் காக்க வேண்டுமல்லவா. உன் பிள்ளை ஸ்வபாவம் போதும். விளையாட்டை நிறுத்து. இந்த கொடிய காளியனை இப்போதே அடக்கி விடு"

இதைக் கேட்ட க்ருஷ்ணன் அண்ணாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தான். ஸர்ப்பங்களின் பிடிகளிலிருந்து வேகமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். காளியனின் வணங்காத தலையைத் தன்னிரு கைகளால் பிடித்து வளைத்து, அதன் மீதேறினான். பல தலைகள் கொண்ட காளியனின் தலைகளில் வெற்றி நடனமாடி அவனை வணங்கச் செய்தான். தலைகளைத் தூக்கும்போதெல்லாம் அவைகளை மீண்டும் வணங்கச் செய்து, கொடுமையான காயங்களை ஏற்படுத்தினான். இப்படி அங்குமிங்கும் நடனமாடிய க்ருஷ்ணனால் வாய்களில் ரத்தத்தைக் கக்கிக் கொண்டு மூர்ச்சையானான் காளியன். அவனின் இந்த நிலை கண்ட அவன் பத்னிகள் க்ருஷ்ணனையே துதித்தனர்.

"தேவ தேவா! உன்னைப் புரிந்து கொண்டோம். நீயல்லவோ அனைத்திற்கும் தலைவன். உயர்ந்தவன். அறிவுக்கெட்டாதவன். பரப்ரஹ்மத்தின் அம்சம். தேவர்களே உன்னைப் புகழ முடியாதல்லவா. அப்படியிருக்கும் போது பெண்களான நாங்கள் உன்னைத் துதிப்பது எப்படி. இந்த பஞ்ச பூத மயமான ப்ரஹ்மாண்டம் உனது ஓர் சிறு அம்சத்திலும், சிறு அம்சமல்லவா. அணுவிற்கும் அணுவான, பெரியதெற்கெல்லாம் பெரிதான உன் ஸ்வரூபத்தையும் யோகிகளும் அறியார்கள். ப்ரஹ்மாவும் உன்னைப் படைக்க இயலாது. சிவனாலும் உன்னை அழிக்க இயலாது. உன்னிருப்பிற்கும் எவரும் காரணமாக இயலாது. உன்னை வணங்குகிறோம். உனக்குக் கோபம் கிடையாது. உலக நன்மைக்காகவே இந்தக் காளியனை நீ அடக்குகிறாய்.

எங்களிடம் தயை கூர். பெண்களிடம் சாதுக்கள் இரக்கப் படுவார்களே. முட்டாள்களும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வார்களே. எனவே இளைத்துள்ள இந்த அல்ப ப்ராணியிடம் இரக்கம் காட்டு. உன் திருவடிகளால் துகைக்கப்பட்ட இந்த காளியன் சிறிது நேரத்தில் இறந்து விடுவான். உன் பெருமை எங்கே, இவன் எங்கே. உயர்ந்தவர்களிடம் பகையையும், ஸமமானவர்களிடம் நட்பையும் கொள்ள வேண்டும் என்பதல்லவா நீதி. இவன் உனக்குத் தாழ்ந்தவனல்லவா. இவனிடம் நீ த்வேஷம் கொள்ளாதே. இறக்கும் தருவாயில், துன்புற்றுக் கொண்டிருக்கும் இவனை அருள் கூர்ந்து விட்டு விடு. எங்களுக்கு பர்த்ரு பிக்ஷை இடு" என்றெல்லாம் வேண்டித் துதித்தார்கள்.

இப்படி நாக கன்னிகைகள் துதித்த பின், இறக்கும் தறுவாயிலிருந்த காளியனும், "என்னை மன்னித்து விடு. அணிமா முதலிய எட்டு குணங்களும், சக்தியும் உனக்கு இயல்பானதல்லவா. உன்னிடமிருந்தே தேவர்கள் முதற்கொண்டு அனைத்தும் உண்டாகிறது. நீ அனைத்திற்கும் அப்பாற்பட்டவனல்லவா. ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, மருத்துக்கள், அச்வினிகள், வஸுக்கள், ஆதித்யர்கள் என அனைவரும் கூடின இந்த உலகம் உன்னுடைய சிறு துளிதானே. ப்ரஹ்மா முதற்கொண்டு அனைவரும் உன்னை தேவலோகத்துப் பூக்களால் பூஜிக்கின்றனர். ரிஷிகளும் உன்னை இந்த்ரிய நிக்ரஹம் என்ற பூக்களால் பூஜித்துத் த்யானிக்கின்றனர். நான் எப்படி உன்னைத் துதிப்பேன்.

நீ மிகவும் பெரியவனல்லவா. நான் மிகவும் சிறியவனல்லவா. அதனாலன்றோ உன்னைத் துதிக்காமல் இருந்து விட்டேன். எனினும் உன் தயையால் என்னை நீ அனுக்ரஹிக்க வேண்டும்.
மிகக் கொடிதான எங்கள் ஸர்ப்ப ஜாதிக்குக் கடிப்பதென்பது ஸ்வபாவமல்லவா. அதனாலன்றோ உன்னை நான் கடித்து விட்டேன். என்னிடம் இதிலென்ன தவறு இருக்கிறது. உலகையும், ஜாதிகளையும் படைத்து, அவைகளின் ஸ்வபாவங்களையும் நீயன்றோ ஸ்ருஷ்டித்தவன். அப்படி நீ என்னை படைத்தபடிதானே நான் நடந்து கொண்டேன். இது ஒரு பெருந்தவறா. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. இயல்புக்கு மாறாக நடந்து கொண்டால் தானே நான் தீயவனாவேன். நல்லவர்களைக் காப்பதற்காகத்தானே உன் அவதாரமும்.

அப்படி நல்லவனாக ஒரு குற்றமும் செய்யாமல் நீ ஸ்ருஷ்டித்தபடி நானிருக்கும் போது நீ என்னைத் தண்டிப்பது எப்படி ந்யாயமாகும். எனினும் இதையும் என் கொடுந்தன்மை அழிவதற்காக நீ கொடுத்த வரமாகவே நான் நினைக்கிறேன். உன்னிடமிருந்து இந்த வரத்தைப் பெற்றிருப்பதால் இந்த வரம் மேலும் சிறப்படைகிறது. நான் இனி ஒருவருக்கும் தீங்கு செய்யேன். என் விஷமும், வீர்யமும் நன்கு அழிந்தன. என்னை நன்கு ஒடுக்கியிருக்கிறாய். ப்ராணனை மட்டும் எனக்கு விட்டு விடு. நான் இனி உன் உத்தரவுப் படி நடந்து கொள்கிறேன்" என்று பலவாறுத் துதித்து வேண்டிக் கொண்டான்.

பரமனும் "காளிய! உன் மனைவி, மக்கள், பந்துக்களோடு உடனடியாக நீ ஸமுத்ரம் சென்று விட வேண்டும். யமுனை மடுவில் இனி நீ இருக்கக் கூடாது. என் பாதம் பதிந்த அடையாளங்களைக் கண்டு உங்கள் சத்ருவான கருடனும் உன்னை ஹிம்ஸிக்கமாட்டான். பயம் வேண்டாம்" என்று அபயமளித்து அனுப்பி வைத்தான். தானும் மடுவிலிருந்து வெளியேறினான். மீண்டும் பிழைத்து வந்ததாகவே க்ருஷ்ணனை எண்ணிய கோபர்கள் அவனைப் பெரிதும் கொண்டாடி அவனைக் கட்டியணைத்து, கண்ணீரால் நனைத்தனர். அண்ணன் வந்திருந்தால் இந்த க்ருஷ்ணனை அவர் மடுவில் குதிக்கவே அனுமதித்திருக்க மாட்டார். இவ்வளவும் நடந்திருக்கவும் நடந்திருக்காது. யமுனையும் சுத்தமானது. எவரும் புகழ்பாட க்ருஷ்ணனும் கோப, கோபியருடன் மகிழ்ச்சி பொங்க ப்ருந்தாவனத்திற்குத் திரும்பினான்.

No comments:

Post a Comment