Tuesday, February 16, 2010

விஷ்ணு புராணம் - 89

05_09. இதற்குப் பின்னொரு ஸமயம், பாண்டீரம் என்ற ஆலமரத்தினருகில் இந்தச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பால் கறக்கும் போது மாட்டின் கால்களைக் கட்டும் கயிற்றைத் தோளில் போட்டுக் கொண்டு, காட்டு இலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளை (வனமாலை) அணிந்து கொண்டு சின்னஞ்சிறு எருதுகள் போல ராம, க்ருஷ்ணர்கள் அப்போது விளங்கினர். சிங்கம் போல கத்திக் கொண்டும், ஏறுவதற்குத் தகுந்த மரங்களைத் தேடிக் கொண்டும், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் கன்றுகளின் பெயரைக் கூவி அழைத்துக் கொண்டும், கருப்புப் பட்டாடையில் ராமனும், பொன்னிறப் பட்டாடையில் க்ருஷ்ணனும் மேகங்களைப் போல் திரிந்து கொண்டிருந்தனர். இப்படி உலகைக் காக்கும் இவர்கள் மனிதர்களிடையே பிறந்து அந்தத் தன்மைகளையே காட்டிக் கொண்டு, மனித வர்க்கத்தைப் பெருமைப் படுத்திக் கொண்டு இருந்தனர்.

கைகளை இரு சிறுவர்கள் பிணைத்திருக்க அதில் ஏறி விளையாடுவது, மர விழுதுகளைக் கட்டி அதில் ஊஞ்சலாடுவது, கல், மரக்கட்டைகளை சுற்றி எறிவது என பல விளையாடல்களை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஹரிணாக்ரீடனம் என்ற ஒரு விளையாட்டை அவர்கள் ஒரு ஸமயம் ஆரம்பித்தனர். அதாவது இருவர், இருவராக மான் போலத் துள்ளிக் குதித்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும். முதலில் வருபவரைத் தோற்றவர் முதுகில் தூக்கிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை ஓடவேண்டும். இதுதான் ஹரிணாக்ரீடனம். க்ருஷ்ணனும், ஸ்ரீதாமன் என்பவனும் ஜோடி சேர்ந்தனர். பலராமனுடன் ப்ரலம்பன் என்ற அஸுரன் இடைச்சிறுவன் உருவில் யாருக்கும் ஸந்தேஹம் வராதபடி ஜோடி சேர்ந்தான்.

க்ருஷ்ணனைத் தன்னால் கொல்ல முடியாதென்பதை உணர்ந்த அவன் பலராமனைக் குறி வைத்தான். இதில் க்ருஷ்ணனும், அவன் கட்சியைச் சேர்ந்தவர்களும் வென்றனர். தோற்றவர்கள் வென்றவர்களை சுமந்து கொண்டு பாண்டீரம் வரை ஓடிச் சென்று திரும்பினர். ஆனால் பலராமனைத் தூக்கிச் சென்ற ப்ரலம்பன் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான். கருத்த மழைக்காலத்து மேகம் போல் இருந்த அந்த அஸுரன் மேல் வெளுத்த சந்த்ரன் போலமர்ந்திருந்த பலராமன் இதைக் கண்டதும் தன்னை அதிக எடை கொண்டவனாகச் செய்து கொண்டு ப்ரலம்பனை அழுத்தினான். ஆனால் அஸுரன் அதைத் தாங்குமளவு மலை போல உருவெடுத்துக் கொண்டு தொடர்ந்து பறந்தான். பலராமன் உடனே க்ருஷ்ணனிடம் திரும்பி, "க்ருஷ்ணா! மலைபோலிருக்கும் இவனை யாரென்று அறியாமல் இருந்து விட்டோம். இப்போது நான் என்ன செய்வது" என்று கேட்டான்.

இப்போது க்ருஷ்ணர் அண்ணாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, "அண்ணா! நீர் ஸர்வ ஸ்வரூபி, ஸூக்ஷ்மங்களுக்கெல்லாம் ஸூக்ஷமமானவர். அனைத்திற்கும் முன்பாகத் தோன்றி ப்ரளயத்திலும் எஞ்சியிருப்பவர். பரப்ரஹ்ம ஸ்வரூபமான நீர் எதற்கு இப்படி மனுஷனைப் போல் நடிக்கிறீர். உங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள், உலகிற்கெல்லாம் மூலக் காரணமல்லவா தாங்கள். பூபாரம் தீர்க்கவே நாம் அவதரித்தொமென்பதை மறந்து விட்டீர்களா. உமக்கு ஆகாயமே தலை. மேகங்கள் கேசங்கள். பூமியே பாதம். அக்னி முகம். சந்த்ரன் உங்கள் மனம். வாயு மூச்சு. நான்கு திசைகளும் நான்கு தோள்கள். பலம் பொருந்திய தேவரே, ஆயிரம் தலை, கை, கால்களைக் கொண்டவரே, உங்களிடமிருந்தே ப்ரஹ்மாக்கள் தோன்றுகிறார்கள்.

அனைத்திற்கும் முந்தியவர் தாங்கள். சாதுக்கள் பலவாறு புகழும் உங்கள் ஸ்வரூபத்தை நானறிவேன். தேவர்கள் உங்களைப் புகழ்கிறார்களல்லவா. உங்களிடமிருந்தே உலகம் தோன்றி, லயிக்கிறது. ஸமுத்ரத்தின் நீர் ஆவியாகி, காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, இமயத்திலே பனியாய்ப் படர்ந்து, ஸூர்யக் கதிர்களால் மீண்டும் நீராகவே ஆவது போல இந்த உலகும் ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் மீண்டும் தோற்றுவிப்பதற்காகவே உங்களால் அழிக்கப்படுகிறதல்லவா. அளவற்ற உங்கள் பலத்தால் அந்த கொடியவனை மனுஷ்ய பாவத்தோடே கொல்லுங்கள், சரி எனப்படுவதைச் செய்யுங்கள்" என்று பதில் கூறினார்.

இப்படி இந்த தயாளனால் தன் பெருமைகளை நினைவு படுத்திக் கொண்ட பலராமன் சிரித்துக் கொண்டு ப்ரலம்பனைத் தன் கை, முட்டிகளால் ரத்தம் வரும்படி த்வம்சம் செய்ய, விழிகள் வெளியே வந்து விழ, மூளை மண்டையோட்டைப் பிளந்து கொண்டு பிதுங்க, வாயில் ரத்தம் கக்கிக் கொண்டு பூமியில் விழுந்து இறந்தான் ப்ரலம்பன். ப்ரலம்பன் பிணமாய் விழுந்ததைக் கண்ட கோபர்கள் அதிசயித்து, எல்லோரும் ஒன்று கூடி, பலராமனைப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டு க்ருஷ்ணனுடன் கோகுலம் திரும்பினர்.

No comments:

Post a Comment