05_25. உலகையே தாங்கும் ஆதிஸேஷன் தேவ கார்யங்களை சாதிப்பதற்காக, இப்படி பலராமராக அவதரித்து அவைகளைச் செய்து கொண்டு, இடையர்களோடு கானகங்களில் ஸஞ்சரித்து வந்தார். ஒரு ஸமயம் வருணன் மதுவர்க்கங்களுக்குத் தேவதையான மதிரை(வாருணி)யை அழைத்து "மதிரையே! நீ எப்போதும் அனந்தனுக்கு ப்ரியமானவள். ஆகவே நீ இப்போது அவர் ஸந்தோஷப்படும்படியான கார்யங்களைச் சென்று செய், அவர் அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யப் போகிறார். அவரிடம் சென்று சேர்" என்று வேண்டிக் கொண்டான். அவளும் அதற்கிசைந்து வ்ருந்தாவனத்தின் ஒரு கடம்ப மரப் பொந்தில் ஐக்யமானாள்.
கடம்ப மரத்திலிருந்து மது வழிந்தோடிக் கொண்டிருந்ததை, அதன் வாசனையால் இழுக்கப்பட்டு அங்கு வந்த பலராமர் கண்டு மகிழ்ந்து, கோபர்களுடனும், கோபிகைகளுடனும் உடனே அதைப் பருகி, களிப்பில் பாடி, ஆடிக் மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உடல் முத்து போன்ற வியர்வைத் துளிகளால் நிறைந்திருந்தது.
மது மயக்கத்தில் அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனா நதியை, நீராடுவதற்காகத் தன்னருகில் வருமாறு அழைத்தார் பலராமர். மதுவில் மூழ்கியிருந்த இவரது உத்தரவை யமுனை நதி மதிக்காமல் இருந்தது. இதனால் கோபம் கொண்ட பலராமர் தன் கலப்பையால் யமுனையை அதன் போக்கிலிருந்து மாற்றி, தன்னருகில் இழுத்துச் சென்று, "துஷ்ட நதியே, கர்வம் கொண்டவளே, வரமாட்டாயா! இப்போது உன்னிஷ்டம் போல் போ, பார்க்கலாம். என் பலத்தைத் தெரிந்து கொண்டாயா. இனி என்னை அவமதித்தால் உன்னை என் கலப்பை நுனியால் நூறு வழிகளில் கொண்டு போய் விடுவேன்" என்று எச்சரித்தார். மிகவும் பயந்து போன யமுனா நதி, உருக்கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரியது. அவரும் அதை விடுவித்தார். விடுதலையடைந்த யமுனை அந்த ப்ரதேஸத்தை நீரால் நிறைத்துச் சென்றது.
யமுனையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த பலராமருக்கு அப்போது மஹாலக்ஷ்மி தோன்றி, ஒரு காதணியாக அல்லிமலரையும், இன்னொரு காதணியாக குண்டலத்தையும், வருணனால் அனுப்பப்பட்ட வாடாத ஒரு தாமரை மாலையையும், கடலின் நிறம் கொண்ட நீல நிறப்பட்டாடைகளையும் தந்தருளினாள். யமுனையில் நீராடி, மதிப்பற்ற இவைகளை அணிந்து கொண்ட பலராமர் முன்னிலும் பொலிவு பெற்று விளங்கினார். இப்படி இரு மாதங்கள் நந்த கோகுலத்தில் கழித்த பலராமர், மீண்டும் த்வாரகைக்குத் திரும்பி, அங்கு ரைவத மஹராஜனின் பெண் ரேவதியை மணந்து கொண்டு, நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளையும் பெற்றார்.
Thursday, February 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment