Thursday, February 11, 2010

விஷ்ணு புராணம் - 83

05_03. தேவர்களின் துதிகளுடன் தேவகியும் ஸந்தோஷமாக அந்த கர்ப்பத்தைத் தரித்து வந்தாள். மறையாத ஸூர்யனாக அச்யுதனும் பூமி மலர ஆவணி க்ருஷ்ணாஷ்டமியில் தேவகியிடம் பிறந்தான். நடு நிசியில் அப்போது எவர்க்கும் மன மகிழ்ச்சி உண்டானது. திசைகள் பொலிவாயின. பெருங்காற்று அமைதியையும், பேராறுகள் தெளிவையும் அடைந்தன. கடலலைகள் தங்கள் ஒலிகளை மனங்கவரும் வாத்யங்களின் ஓசையாகக் கொண்டன. கந்தர்வர்கள் பாட, அப்ஸரஸ்ஸுக்கள் ஆனந்தத்தில் ஆடினர். தேவர் பூமாரி பொழிந்தனர். அக்னிகள் புகையின்றி ஜொலித்தன. மேகங்களும் கர்ஜித்தன. நான்கு கைகளுடன் கரு நெய்தல் நிறத்தில் ஸ்ரீ வத்ஸம் எனும் மருவை மார்பில் கொண்டு பிறந்தார்.

இந்த கோலத்தில் குழந்தையைக் கண்ட வஸுதேவர் "தேவதேவா, பிறப்பறியாத நீ லோக ஸம்ரக்ஷணத்துக்காக பிறந்திருக்கிறாய். சாமான்ய குழந்தைகளைப் போலல்லாது பஞ்சாயுதங்களுடன் திவ்ய மங்கல ரூபத்துடன் பிறந்திருக்கிறாய். கம்ஸன் இதை அறிந்தால் இங்கேயே உங்களைக் கொல்ல வந்து விடுவான். தயவு செய்து இந்த ரூபத்தை மறைத்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டிக் கொண்டார். தேவகியும் "அவனி யாவையும் வயிற்றில் தரிக்கும் தேவதேவனே இச்சையால் என் வயிற்றில் குழந்தையாக அவதரித்திருக்கிறீர்கள். இந்த அவதாரத்தை கம்ஸன் அறிய வேண்டாம். கருணை கூர்ந்து இந்த திவ்ய ரூபத்தை மறைத்துக் கொள்ளுங்கள். அவன் க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்திருந்தாலும், அவன் அஸுரனே.

உக்ரஸேன மஹாராஜரின் பத்னி ஒரு ஸமயம் நந்த வனத்தில் தனித்திருந்த போது, அவருருவம் கொண்டு த்ரமிடன் என்ற அஸுரன் ஒருவன் அவளை ஏமாற்றிச் சேர்ந்தான். ஆகையால் அஸுரனுக்குப் பிறந்தவனான இவனுக்குத் தங்களிடம் இயற்கையிலேயே பகை உண்டு. ஆதலால் அவனறியும் முன் இந்த ரூபத்தை மறைத்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டினாள். குழந்தை "இளவரசியே! உங்கள் விருப்பத்தை நிறைவேற்றவே இப்போதும் உங்கள் வயிற்றில் அவதரித்தேன். ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் மூன்று பிறவிகள் என்னைப் போன்ற ஒரு பிள்ளை வேண்டும் என்று நீங்கள் விரும்பியதாலேயே, நீங்களிருவரும் முன்பு ஸுதபஸ், ப்ருச்னியாக இருந்த போது ப்ருச்னிகர்ப்பன் என்ற பெயரிலும், மீண்டும் காச்யபராகவும், அதிதியாகவும் இருந்த போது வாமனனாகவும் ஏற்கனவே பிறந்தேன்.

இப்போது என்னை யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்" என்று அருளிவிட்டு சாமான்யர்களைப் போல உருக்கொண்டது. வஸுதேவரும் அவ்வாறே சிறைச்சாலையை விட்டு கிளம்பினார். யோக நித்ரையால் சிறையிலும், வழியெங்கிலும் எவரும் மயங்கிக் கிடக்க, கொட்டும் மழையில் ஆதி ஸேஷன் குடைபிடித்துப் பின் தொடர, சுழிகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த யமுனையும் தன் அளவைக் குறைத்துக் கொண்டு, நின்று வழி கொடுக்க நந்த கோகுலம் நோக்கி நடந்தார் வஸுதேவர். யமுனைக் கரையில் கம்ஸனுக்குக் கப்பம் கட்ட வந்து கொண்டிருந்த நந்தகோபன் முதலானோரை வழியில் வஸுதேவர் மட்டும் கண்டார். அவர்கள் இவரைக் காணவில்லை.

நந்தகோகுலத்திலும் யசோதையும், மற்றெவரும் மாயையின் பிடியிலிருக்க வஸுதேவர் ஒரு கஷ்டமுமின்றி யசோதையின் குழந்தையுடன் தன் குழந்தையை மாற்றிக் கொண்டார். அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததும் தெரியாது. அது இப்படி ஆணாக மாறியதும் தெரியாது. தங்களுக்குப் ஆண் குழந்தையே பிறந்துள்ளது என்று அவர்களும் கொண்டாட, இங்கே சிறைச்சாலையில் பெண் குழந்தையுடன் இவர்களும் மகிழ்ந்திருந்தனர். எல்லாம் சுபமாய் முடிந்த வேளையில் சிறைச்சாலையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டுக் காவலர்கள் வேகமாக ஓடிச் சென்று கம்ஸனிடம் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தைக் கூறினர். இதற்குத் தானே அவனும் காத்திருந்தான்.

வந்தான் வேகமாக, குழந்தையைத் தேவகியிடமிருந்து வெடுக் எனப் பிடுங்கினான். "இது பெண் குழந்தைதானே, இதனால் உனக்கு ஒரு தீங்கும் நேரிடாது. இது ஒன்றையாவது எங்களுக்கென்று கொடுத்து விடு" என்று தேவகி கதறக் கதறக் குழந்தையைக் கல்லில் மோதிக் கொல்வதற்காக ஓங்கினான். சாதாரணக் குழந்தையில்லையே இது. அவன் கையிலிருந்து மறைந்து ஆகாசத்தில் எட்டு கைகளுடனும், ஆயுதங்களுடனும், பெரிய கோர ரூபத்துடனும் தோன்றினாள் மாயா. இவனைப் பார்த்துக் கோபத்துடன் சிரிக்கவும் சிரித்து, "ஹே கம்ஸா! நீ காலநேமியாக இருந்த போது உன்னைக் கொன்றவனும், தேவர்களுக்குப் பெரும் சொத்தாக இருப்பவனும், இப்போதும் உன்னைக் கொல்லப் போகிறவனுமான அவன் பிறந்து விட்டான். இது உண்மை. இனி நீ என்னைக் கொன்று என்ன பயன். உனக்கு எது நன்மையானது என்பதை யோசித்து அதைச் செய்" என்று கூறி போஜராஜன் பார்த்துக் கொண்டிருக்கவே, பூமாலைகளுடனும், அணிகலன்களுடனும் கூடிய தேவி அவனை லக்ஷ்யம் செய்யாது ஸித்தர்களும், கந்தர்வர்களும் துதிக்க ஆகாயத்தில் மறைந்தாள்.

No comments:

Post a Comment