Tuesday, February 16, 2010

விஷ்ணு புராணம் - 88

05_08. பலராமனும், க்ருஷ்ணனும், மற்ற இடைச்சிறுவர்களும் மீண்டும் முன்பு போலவே காடுகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பனங்காட்டை அடைந்தனர். இடைச் சிறுவர்கள் "இந்த பனங்காட்டில் தேனுகன் என்ற ஒரு அஸுரன் கழுதை வடிவில் இருந்து கொண்டு இதைக் காத்துக் கொண்டு, ம்ருகங்களை ஹிம்ஸித்து உணவாக்கிக் கொண்டு இருக்கிறான். இவனிடம் பயந்து கொண்டு யாரும் இதனுள் செல்வதில்லையாதலால் இங்கு பனம் பழங்கள் அதிகமாகப் பழுத்துக் குலுங்கிக் கொண்டு, இந்தப் பகுதி முழுதும் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் பறித்துத் தந்தால், நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்" என்று க்ருஷ்ணனிடமும், பலராமனிடமும் கூறினர்.

க்ருஷ்ணனும், பலராமனும் உடனே இதற்குச் சம்மதித்துப் பழங்களை உதிர்க்கத் தொடங்கினர். அப்போது அவர்களை நோக்கி கொல்வதற்காக ஓடி வந்த தேனுகாஸுரன் சங்கர்சணன் மார்பில் தன் பின்னங்கால்களால் எட்டி உதைத்தான். அந்தக் கால்களைப் பிடித்து பலராமன் நன்றாக உயிர் போகும்படி சுழற்றி அவனை பனைமரங்களின் மீது எறிந்தான். மரங்களை சாய்த்துக் கொண்டு, பழங்களையும் மழைத்துளிகள் போல கீழே விழச்செய்து கொண்டு தேனுகன் உயிரை விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த கழுதை உருவிலிருந்த மற்ற அஸுரர்களையும் க்ருஷ்ணனும், பலராமனும் கொன்று எறிந்தனர். எங்கு பார்த்தாலும் பழுத்த பனம் பழங்களும், இறந்து கிடக்கும் அஸுரர்களும் நிறைந்திருந்தது அந்த வனம். இதன் பின் சிறுவர்களும் மகிழ்வுடன் பழங்களை சுவைத்தனர். பசுக்களும் அங்கிருந்த காடு போல் இருந்த புது புற்களை நன்கு உண்டன.

No comments:

Post a Comment