05_04. மாயையின் பேச்சுக்களைக் கேட்டுக் கலங்கிய கம்ஸன் உடனே மந்த்ராலோசனைக்கு ஏற்பாடு செய்தான். ப்ரலம்பன், கேசி, தேனுகன், பூதனை, அரிஷ்டன் இன்னும் பல கொடியவர்களைக் கூட்டி "மஹா அஸுரர்களே! பல முறை முயற்சித்த போதும் இந்த தேவர்களால் என்னைக் கொல்லவா முடிந்தது. இவர்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னால் அவர்கள் அனைவரும் பொசுங்கினவர்களே. அல்ப வீர்யம் கொண்ட இந்த்ரன், தனித்துத் தவம் செய்யும் பரமேச்வரன், ஏமாந்த ஸமயம் பார்த்து அஸுரர்களைக் கொல்லும் இந்த விஷ்ணு. இவர்களே இப்படிப் பட்டவர்கள் என்றால் மிச்ச தேவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
முன்பொரு ஸமயம் யுத்தத்தின் போது என் அம்புகளை மார்பில் தாங்காமல், முதுகில் ஏற்றுக் கொண்டு ஓடினவன் தானே இந்த தேவர் தலைவன் இந்த்ரன். அதையும் நீங்கள் அறிவீர்கள். என் நாட்டில் மழை பொழியாமல் அவன் தடுத்த போது, நான் என் பாணங்களாலேயே மேகங்களைப் பிளந்து மழையை வேண்டுமளவு பொழியச் செய்யவில்லையா. என் மாமனார் ஜராஸந்தனைத் தவிர வேறெவரும் என்னிடம் பணிந்து கிடப்பவர்களே. இப்படியிருக்க மீண்டும் தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டு எனக்கு சிரிப்பும், அவர்களிடம் அவமதிப்புமே உண்டாகிறது. ஆனாலும் கெட்ட புத்தியுடைய, ஒழுக்கமற்ற தேவர்களிடம் நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு இதுவே தக்க வழி. நான் சொல்வதைக் கேளுங்கள்.
பூலோகத்தில் தானம் செய்பவர்களிடமிருந்தும், யாகம் செய்பவர்களிடமிருந்துமே தேவர்கள் ஹவிஸ் முதலியவைகளைப் பெற்று வாழ்கின்றனர். எனவே இந்த யாகங்களையும், தானங்களையும், இவைகளைச் செய்பவர்களையும் நாம் அழிக்க வேண்டும். அப்போது தான் தேவர்களும் வாழ்வறியாது அழிவார்கள். மேலும் தேவகியின் வயிற்றில் பிறந்த அந்தப் பெண் என்னைக் கொல்லப் போகிறவன் ஏற்கனவே பிறந்து விட்டான் என்று கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கொன்று விட வேண்டும். விசித்ரமான பலமும், தோற்றமும் பொருந்திய குழந்தைகளைத் தேடித் தேடிக் கருணையின்றி கொல்ல வேண்டும். இவைகளை உடனே செய்யுங்கள்" என்று உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு தேவகி, வஸுதேவரிடம் சென்றான்.
அவர்களை விடுவித்து "வீணாக உங்கள் குழந்தைகளைக் கொன்று விட்டேன். அவர்கள் விதி அப்படி. உங்களின் தீவினைப் பயனாகவும் இது நடந்திருக்கலாம். வருந்தாதீர்கள். இவ்வளவு செய்தும் என்னைக் கொல்லப் போகிறவன் எங்கேயோ, எப்படியோ பிறந்து விட்டான். உங்கள் விதி முடியும் வரை இனி உங்களுக்குத் துயரில்லை. ஸந்தோஷமாயிருங்கள்" என்று ஆறுதல் கூறிவிட்டு, ஸந்தேகங்களுடனும், குழப்பங்களுடனும் தன் மாளிகை திரும்பினான்.
Thursday, February 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment