05_26. விதர்ப தேசத்தரசன் பீஷ்மகனென்பவன் குண்டினமெனும் தலைநகரப் பட்டணத்திலிருந்து கொண்டு ஆண்டு வந்தான். இவனுக்கு ருக்மி என்ற புத்ரனும், ருக்மிணி என்ற அழகான பெண்ணும் இருந்தனர். இவளை க்ருஷ்ணன் காதல் வயப்பட்டு மணம் புரிய விரும்பினான். ருக்மிக்கு ருக்மிணியை க்ருஷ்ணனுக்கு மணம் செய்து கொடுப்பதில் விருப்பமில்லை. ஜராஸந்தனின் கருத்துப்படியும், ருக்மியின் கட்டாயப்படியும் பலம் பொருந்திய பீஷ்மகன் தன் பெண்ணை சிசுபாலனுக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்தான். திருமணத்திற்கு ஜராஸந்தன், சிசுபாலனைச் சேர்ந்த அனைத்து அரசர்களும், இளவரசர்களும் அழைக்கப்பட்டு விதர்ப தேசத்திற்கு வந்திருந்தனர். க்ருஷ்ணனும், பலராமனும் யாதவர்களோடு திருமணத்தைக் காண குண்டினபுரிக்கு வந்திருந்தனர்.
தான் ருக்மிணியைக் கடத்திச் செல்லவும், மற்றவர்கள் அண்ணாவோடு சேர்ந்து எதிரிகளைச் சமாளிக்கவும் திட்டம் போட்டு வந்திருந்தான் க்ருஷ்ணன். அதைச் செய்தும் விட்டான். பௌண்ட்ரகன், சிறப்புமிக்க தந்தவக்ரன், விதூரதன், சிசுபாலன், ஜராஸந்தன், சல்யன், இன்னும் பல அரசர்கள் இந்த அவமானத்தால் கோபம் கொண்டு, க்ருஷ்ணனைக் கொன்று விடுவதற்காகப் புறப்பட்டனர். ஏற்பாட்டின் படி இவர்களனைவரையும் பலராமர், யாதவ சைன்யத்தோடு தோற்கடித்துத் துரத்தி விட்டார். ருக்மி மட்டும் க்ருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரிக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு துரத்திச் சென்றான். அந்தப் போரில் க்ருஷ்ணன் விளையாட்டாக தன் சக்ரத்தாலேயே அவனுடைய குதிரை, யானை, ரதம், காலாட்படை என அனைத்தையும் அழித்து, அவனையும் வென்று கீழே தள்ளினார்.
"ருக்மி என்னுடைய ஒரே ஸஹோதரன், கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். தேவ! என் ஸஹோதரனை கருணை கூர்ந்து விட்டு விடுங்கள்" என்று ருக்மிணி ப்ரார்த்தித்ததற்கிணங்க ருக்மியைக் கொல்லாமல் விட்டான் க்ருஷ்ணன். செயல்களின் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட க்ருஷ்ணனின் கருணையால் இப்படி உயிர் பிழைத்த ருக்மி, அதன் பின் போஜகடம் என்ற நகரை உருவாக்கிக் கொண்டு, அங்கேயே வஸித்து வந்தான். ராக்ஷஸ விவாஹ(போர் செய்து கன்னிகையை அபஹரித்துச் சென்று திருமணம் செய்து கொள்வது) முறைப்படி இப்படியாக ருக்மிணி கல்யாணமும் த்வாரகையில் சிறப்பாக நடந்தேறியது. அவளிடம் மன்மதனின் அம்சமாக ப்ரத்யும்னன் என்ற பிள்ளையைப் பெற்றான் க்ருஷ்ணன். இந்த ப்ரத்யும்னனை சம்பரன் என்ற அஸுரன் தூக்கிச் சென்றான். ஆனால் ப்ரத்யும்னனால் கொல்லப்பட்டான்.
Thursday, February 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment