Thursday, February 25, 2010

விஷ்ணு புராணம் - 107

05_27. மைத்ரேயர்: எப்படி ப்ரத்யும்னன் சம்பரனால் தூக்கிச் செல்லப் பட்டான். பலம் பொருந்திய அவனை எப்படி ப்ரத்யும்னன் கொன்றான். பராசரர்: ருக்மிணிக்கும், க்ருஷ்ணனுக்கும் பிறக்கும் குழந்தையே தன்னைக் கொல்லப் போகிறவன் என்பதை முன்னமே அறிந்திருந்த யமனை ஒத்த அந்த ஸம்பராஸுரன், ப்ரத்யும்னன் பிறந்து ஆறே நாட்களாயிருந்த போதே, ப்ரஸவ அறைக்குள் புகுந்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய், கடும் உயிரினங்கள் நிறைந்த, கொடுங்கடலில் வீசியெறிந்து விட்டான். ஒரு பெரும் மீன் அதை விழுங்கியும், குழந்தை அந்த மீனின் வயிற்றில் இறக்காமலேயே இருந்து வந்தது. ஒரு ஸமயம் மீனவர்கள் பிடியில் சிக்கிய பல மீன்களில் இந்த மீனும் ஒன்றாகக் கிடைக்க, அவர்கள் அவையத்தனையையும் கொண்டு போய் ஸம்பராஸுரனிடம் ஸமர்ப்பித்தார்கள்.

ஸம்பராஸுரன் அந்த மீன்களை சமையல் வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த தன் மனைவி மாயாதேவியிடம் கொடுத்தான். அவள் அந்த மீனை நறுக்கிய போது, மன்மதனையொத்த இந்த அழகான குழந்தையை அதன் வயிற்றில் கண்டாள். இது யாராக இருக்கும், இது மீனின் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்றெல்லாம் அவள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த போது, கருணையுள்ள அவளிடம் வந்த நாரதர் "உலகையே படைத்து, அழித்துக் கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் குழந்தை இது" என்று தொடங்கி குழந்தை பிறந்தது முதல் இவள் கைக்குக் கிடைத்தது வரையிலான விஷயங்களை விளக்கமாகக் கூறி, குழந்தையையும் அவளையே கவனமாக வளர்த்து வரும்படியும் கூறிச் சென்று விட்டார்.

குழந்தையின் அழகில் மயங்கிய அவளும் நாரதர் சொல்படி பொறுப்பாகவும், கவனமாகவும் அதை வளர்த்து வந்தாள். குழந்தை வளர்ந்து இளமைப் பருவம் எய்தியபோது, இவளது அன்பு காதலாக மாறியது. குலத்தில் சிறந்த ப்ரத்யும்னனிடம் மனதையும், கண்களையும் பறிகொடுத்த வைத்த மாயாவதி, முழு மதிப்புடன் அவனுக்கு எல்லா மாயைகளையும் கற்றுக் கொடுத்தாள். பெரும் உணர்ச்சி வயப்பட்ட இவளது அன்பைக் கண்ட க்ருஷ்ணனின் புத்ரன், ஒரு நாள் தாமரைக் கண்கள் கொண்ட மாயாவதியிடம் "அம்மா! உங்கள் ஆசை, தாயான தங்களுக்குத் தகாததே" என்று கூற, அவள் "நீங்கள் என் மகனல்ல, விஷ்ணுவின் மகன். காலஸம்பரன் உங்களைக் கடலில் எறிய, அங்குக் கிடைத்த ஒரு மீனின் வயிற்றிலிருந்து உங்களை எடுத்து வளர்த்து வருகிறேன். அன்பிற்குரியவரே, உங்கள் உண்மையான தாய் இன்னும் உங்களுக்காக அழுது கொண்டுதானிருப்பாள்" என்று பதிலுரைத்தாள்.

மாயாவதியின் இந்த பதிலைக் கேட்ட, துணிவுள்ள ப்ரத்யும்னன் கோபத்துடன் ஸம்பராஸுரனைப் போருக்கழைத்தான். அந்தப் போரில் ஸம்பராஸுரன் ஏழு மாயைகளை மாதவனின் புதல்வன் மேல் ஏவ, ப்ரத்யும்னன் அவைகளை அழித்து எட்டாவதான ஒரு மாயையால் அவனையும், அவன் ஸேனைகளையும் கொன்றான். பின் அதே வேகத்தில் மாயாவதியுடன் புறப்பட்டு, அப்பாவின் அந்தப் புறத்தில் வந்து குதித்தான். அவனைக் கண்டதும் அங்கிருந்த க்ருஷ்ணனின் மனைவியர்கள் க்ருஷ்ணனென்று நினைத்து விட்டனர். ஆனால், அவனைக் கண்ட ருக்மிணி கண்களில் கண்ணீர் மல்க "உன்னைப் போல் இப்படி யௌவனமாய் ஒருவனைப் பெற உன் தாய் தவம் செய்திருக்க வேண்டும். என் மகன் ப்ரத்யும்னன் உயிரோடு இருந்திருந்தால், அவனுக்கும் உன்னை ஒத்த வயதே இருக்கும். உன்னைப் பெற்ற அந்தப் புண்யவதி யாரோ.

உன் தோற்றத்தையும், எனக்கு உன் மீது உண்டாகும் பாசத்தையும் நோக்கும் போது, நீ நிச்சயமாக ஹரியின் மகனாகத் தானிருக்க வேண்டும்" என்று கனிவோடு அவனிடம் பேசினாள். அந்த ஸமயத்தில் க்ருஷ்ணன் நாரதருடன் அங்கு வந்தான். நாரதர் ருக்மிணியிடம் "குழந்தையாயிருக்கும் போது ப்ரஸவ அறையிலிருந்து ஸம்பராஸுரனால் கொண்டு செல்லப்பட்டு, அவனைக் கொன்று விட்டு இப்போது இங்கு வந்திருக்கும் இவன் உன் மகனே. மேலும், நற்குணமுள்ள மாயாவதி என்ற இந்தப் பெண், ப்ரத்யும்னனின் மனைவியே. ஸம்பராஸுரனின் மனைவியல்ல. நான் சொல்வதைக் கேள்.

மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்ட போது, அவன் மனைவி தன்னைக் காத்துக் கொள்ளவும், மன்மதன் திரும்பி வரும் வரை வாழவும் விரும்பி, தன் மாயைகளால் ஸம்பராஸுரனை மயக்கி ஆட்கொண்டிருந்தாள். அவனுடைய காம இச்சைகளிலிருந்து தன் கற்பைக் காத்துக் கொள்ள, வெவ்வேறு மாயா ரூபவதிகளை உண்டாக்கி, அவர்களிடமே அவனை மூழ்க வைத்திருந்தாள். இப்படி ஸம்பராஸுரனிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்ட இவளே ரதி தேவி. உன் மகனான இந்த ப்ரத்யும்னனே மீண்டும் அவதரித்திருக்கும் மன்மதன். எனவே இவள் ப்ரத்யும்னனுக்கு மனைவியே. ஸந்தேஹத்திற்கு எந்த இடமுமில்லை. இவள் உன் மருமகளே" என்று கூறி அவளுக்கும், மற்றவர்களுக்கும் இருந்த ஸந்தேஹங்களையும் தீர்த்து வைத்தார். நாரதரின் இந்த சொற்களால் ருக்மிணியும், கேசவரும் ஸந்தோஷம் கொண்டனர். தொலைந்து போன ருக்மிணியின் மகன் திரும்பக் கிடைக்கப் பெற்றதையறிந்த நகர மக்களும், த்வாரகையும் ஆச்சர்யங்களிலும், ஸந்தோஷத்திலும் மூழ்கித் திளைத்தது. விழாக் கோலம் பூண்டது.

No comments:

Post a Comment