Tuesday, February 23, 2010

விஷ்ணு புராணம் - 98

05_18. இப்படி மனதால் நினைத்தபடியே கண்ணனை நெருங்கிய அக்ரூரர் "நான் அக்ரூரன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, க்ருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆனால் க்ருஷ்ணன் உடனே அவரை கொடியும், தாமரைச் சின்னங்களும் பொறிக்கப் பெற்ற தன் கைகளால் வாரி அன்பாக அணைத்துக் கொண்டான். அதேபோல் பலராமனையும் வணங்கினார். அவர்கள் அக்ரூரரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களோடு உணவு உட்கொண்டு கௌரவமாக நடத்தப்பட்டார் அக்ரூரர். அவர்களிடம் உக்ரஸேனன், வஸுதேவன், இளவரசி தேவகி ஆகியோருக்குக் கம்ஸன் செய்த தீமைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்த அக்ரூரர் தான் வந்த காரணத்தையும் கூறினார்.

இவையனைத்தையும் கேட்ட கேசவர் "இவையனைத்தையும் நான் முன்னமே அறிவேன். செய்ய வேண்டியதை விரைவில் செய்வேன். ஏதாவது மாறாக நடந்து விடுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போதே கம்ஸன் அழிந்ததாக நினையுங்கள். நாளை நானும், பலராமனும் உங்களோடு கூடி மதுரை செல்வோம். கோபர்களில் மூத்தவர்களும் காணிக்கைகளோடு வரட்டும். இன்றிலிருந்து மூன்று இரவுகளுக்குள் கம்ஸனை அவன் கூட்டத்தாரோடு அழிப்பேன். நீங்கள் கவலைகளை விட்டொழித்து நிம்மதியாக இங்கு எங்களுடனேயே உறங்குங்கள்" என்று கூறினார். இதன் பின் அக்ரூரர் கம்ஸனின் உத்தரவுகளை கோபர்களிடன் தெரிவித்து விட்டு ராம, க்ருஷ்ணர்களோடு நந்தகோபரின் மாளிகையிலேயே சுகமாகப் படுத்து உறங்கினார்.

பொழுது விடிந்தது. அக்ரூரர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டார். ராம, க்ருஷ்ணர்களும் மகிழ்வோடு மதுரைக்குப் புறப்பட்டனர். இதையறிந்ததும் கோபியர்கள் கண்ணீர் விடலாயினர். க்ருஷ்ணன் பிரிவை நினைத்ததும் அவர்கள் கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்தன. "மதுரை சென்று விட்டால் அவன் எப்படி திரும்பி வருவான். ஒரு போதும் வர மாட்டான். அழகிய நாகரிக மங்கைகளின் அபிநயங்களோடு கூடிய தேன் மொழி வார்த்தைகளைப் பருகுவான். பட்டிக்காட்டுப் பெண்களான கோபியர்களிடம் இனி அவன் மனம் எப்படித் திரும்பும். நம்மை நினைக்கவும் மாட்டான். நம் அனைவருக்கும் ஸாரமான இவனை நம்மிடமிருந்து பிரித்து நகரத்துப் பெண்களின் நளினமான பேச்சு, வெளிப்படையான சிரிப்பு, அழகான தோற்றம், அர்த்தமுள்ள பார்வை இவைகளிடம் சேர்ப்பதால் அபலைகளான நம்மை இரக்கமில்லாத விதி அடித்து விட்டது.

மதுரை நகரத்துப் பெண்களின் பேச்சுக்கள் பாவங்கள் நிறைந்து, புன்சிரிப்போடு இருக்கும். அவர்கள் நடையும் அழகழகாயிருக்கும். பார்வைகள் கருத்தைக் கவர்ந்து விடும். க்ராமத்திலேயே பிறந்து வளர்ந்த கண்ணன் இவைகளைக் கண்டவுடன் மயங்கி, நம்மிடம் திரும்பப் போவதில்லை. இதோ, இதோ நம் கண் முன்னாலேயே கண்ணன் தேரிலேரி மதுரை செல்கிறானே. இந்த அக்ரூரர் என்பவர் நம்மை ஏமாற்றி விட்டார். இவருக்கு யார்தான் அக்ரூரர் (க்ரூரம் இல்லாதவர்) என்ற பெயரை வைத்தார்களோ. இவரை விட கொடியவர் யாரும் இருக்க மாட்டார்கள். நாமனைவரும் கண்ணனிடம் வைத்திருக்கும் அன்பை க்ரூரரான இந்த அக்ரூரர் அறியவில்லையா. கண்களுக்கு பரமானந்தத்தைத் தரும் இவனை நம்மிடமிருந்து பிரித்துச் செல்கிறாரே.

இந்தக் கண்ணனாவது நம்மீது தயை கொண்டு பிரியாமல் இருக்கக் கூடாதா. அவனும் சிறிதும் கருணையின்றி அண்ணனுடன் தேரிலேறிச் செல்கிறானே. யாராவது இவனைத் தடுக்கக் கூடாதா. நம் பெரியவர்களிடம் இவன் பிரிவை நம்மால் தாள முடியாது என்று சொல்லலாமா. அவன் பிரிவில் வாடும் நமக்கு அவர்களால் என்ன உதவி செய்ய முடியும். நந்தகோபன் தலைமையில் அவர்களும் தான் உடன் புறப்படுகிறார்கள். ஒருவரும் கோவிந்தனை இங்கேயே நிறுத்துவதற்கு முயலவில்லையே. இன்றைய இரவு கழிந்து, விடியும் பொழுது மதுரைப் பெண்களுக்கு மகிழ்வைத் தரப் போகிறது. தங்கள் கண்களாகிற வண்டுகளால் அச்யுதனின் முகமாகிற தாமரையைப் பருகிக் களிக்கப் போகிறார்கள் அவர்கள்.

மெய் மறந்து, கட்டுண்டு, கண்ணனோடு ஒரு தடையுமின்றி வழி நெடுக செல்லப் போகும் அவர்கள் பாக்யமுள்ளவர்கள். கண்ணனை நெருங்கி நின்று வணங்குவார்கள். நகரத்துப் பெண்களின் கண்கள் இமைக்காமல் க்ருஷ்ணனைக் கண்டு ஆனந்திக்கப் போகின்றன. ப்ரஹ்மன் ஒரு பெரும் நிதியை நம் கண்களில் காட்டி விட்டு அதை அனுபவிக்க விடாமல் பறித்து விட்டான். கண்ணனின் அன்பு எங்களை விட்டுப் பிரிவதைப் போல் வளையல்களும் எங்கள் கைகளை விட்டுக் கழலுகின்றனவே. இந்த க்ரூர அக்ரூரர் குதிரைகளை மெதுவாக ஓட்டக் கூடாதா. பெண்களை வருந்தவைக்கவே இந்த தயையில்லாத சதி நடக்கிறது. அந்தோ, தேர்ச் சக்ரங்களின் புழுதி மட்டும் தெரிகிறதே. வெகு தூரம் சென்று விட்டானே, புழுதியும் இப்போது காணவில்லையே" என்றெல்லாம் கோபியர் பொருமிக் கொண்டும், கதறிக் கொண்டும் இருக்க கேசவனும், ராமனும் சேரியின் எல்லையைத் தாண்டி சென்றார்கள்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் மதியம் யமுனைக் கரையை அடைந்தது. ரதத்தை நிறுத்தி விட்டுக் கீழிறங்கிய அக்ரூரர் "குழந்தைகளே! தேரிலேயே உட்கார்ந்து கொண்டிருங்கள். கீழே இறங்கினால் ஜலத்தில் விழுந்து விடுவீர்கள், நான் ஸ்னான, மாத்யாஹ்னிகங்களை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று ராம, க்ருஷ்ணர்களிடம் கூறிவிட்டு, "இந்தக் குழந்தைகள் எப்படி அந்த முரடன் கம்ஸனைக் கொல்வார்கள். வீணாக அழைத்து வந்து விட்டேனே" என்று மனதினுள் வருந்திக் கொண்டே, யமுனையில் இறங்கி, ஆசமனம் செய்து, பரப்ரஹ்மத்தைத் மனதால் த்யானித்து குளிப்பதற்காக நீரில் மூழ்கினார்.

அங்கே நீரினுள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷன் உருவில் பலராமனைக் காண்கிறார். மல்லிகை மலர் மாலைகளோடும், சிவந்து விரிந்த கண்களோடும், வாஸுகி, ரம்பை, மற்றும் மேலும் பல பலம் பொருந்திய ஸர்ப்பங்கள் சுற்றி நிற்க, கந்தர்வர்கள் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்க, வனமாலை மார்பை அலங்கரிக்க, அடர்ந்த நிறத்தில் ஆடைகளோடு, திருமுடியில் தாமரை மலர்கள் தாங்கி, அழகான குண்டலங்களோடு மனதை மயக்குமாறு அங்கே நீரினுள் பலராமனைக் காண்கிறார். அதன் மடியிலேயே ஒய்யாரமாக, கருமுகில் நிறத்தில், சற்று சிவந்த விரிந்த கண்கள், சக்ரம் முதலான பஞ்சாயுதங்களுடன் நாற்கரங்கள், பொன்னிறப் பட்டாடை, பல நிறப் பூக்கள் கொண்ட பூமாலைகள், இந்த்ரதனுஸ்ஸும், மின்னல்களும் பெற்றுப் பொலியும் மேகம் போன்று கண்ணன்.

மார்பில் ஸ்ரீவத்ஸம், ஒளிவீசும் அணிகலன்களோடு கரங்கள், மின்னிக் கொண்டிருக்கும் க்ரீடம், கொண்டையில் வெள்ளைத் தாமரை. சுற்றிலும் ஸனந்தாதி முனிவர்கள் மூக்கின் நுனியில் பார்வையைக் கொண்டு துதித்துத் த்யானித்துக் கொண்டு நிற்க இப்படி அவர்களைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார் அக்ரூரர். ரதத்திலிருந்த இவர்கள் எப்படி இவ்வளவு சீக்ரமாக இங்கு வர முடியும் என்று வியந்த அவர் ஏதோ கேட்க வாயெடுத்தார். வார்த்தைகளொன்றும் வெளியேறாமல் மாயம் செய்து விட்டான் கண்ணன். நீரிலிருந்து வேகமாக வெளியேறி ரதம் நின்றிருக்குமிடத்திற்குச் சென்றார். அங்கு ராம, க்ருஷ்ணர்கள் மனித உருவிலேயே அமைதியாக ரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார்.

குழப்பத்தில் மீண்டும் குளிக்கச் சென்று நீரில் மூழ்கினார். அங்கு மீண்டும் அவர்களையே கந்தர்வர்களும், முனிவர்களும், சாதுக்களும், ஸர்ப்பங்களும் துதித்திருக்கக் கண்டார். அவர்களின் இயற்கைக் குணங்களின் உண்மையைப் புரிந்து கொண்டார். அவர்களை துதித்துப் பாடினார். "ஒன்றானவன், பலவானவன், எங்கும் நிறைந்தவன், பரமாத்மா, சொல்ல முடியாத புகழுடையோன், எப்போதும் இருப்பவன், அறிவிற்கெட்டாதவன், உண்மைப் பொருள், உன் குணங்கள் யாருக்கும் தெரியாது, முதற்பொருள், நீயே ஆத்மாவாகவும், விஷயங்களாகவும், பொருள்களாகவும், அணுக்களாகவும், பரமாத்மாவாகவுமிருப்பவன். நீயே ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ மூர்த்தங்களாக இருக்கிறாய். உன்னையும், உன் கார்யங்களையும் யாரும் புரிந்து கொள்ள முடியாது.

உன் பெயர் கூட தெரியாது. நீயே அது. மாற்றமில்லாதவன், நீயே க்ருஷ்ணனாகவும், அச்யுதனாகவும், அனந்தனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறாய். பிறப்பில்லாதவன், நீயே உலகம். நீயே கடவுள், நீயே எல்லாமும். உலகிற்கு ஆத்மாவும், உன்னையன்றி வேறொன்றும் எதிலுமில்லை. நீயே ப்ரஹ்மா, பசுபதி, அர்யமன், தாத்ரி, விதாத்ரி, இந்த்ரன், நீர், நெருப்பு, காற்று, செல்வங்களுக்கு அதிபதி, வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்" என்று இன்னும் பலவாறுத் துதித்து அவர்களை வணங்கினார்.

No comments:

Post a Comment