Sunday, February 21, 2010

விஷ்ணு புராணம் - 95

05_15. க்ருஷ்ணனைக் கொல்வதற்காகச் சென்ற அஸுரர்கள் ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்டன் என்று அனைவருமே அழிந்தனர். கண்ணனோ வ்ருந்தாவனத்தில் கோவர்த்தனத்தைத் தூக்கித் தாங்குகிறான். காளியனை ஒடுக்குகிறான். மரங்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். பூதனை, சகடாஸுரனை வீழ்த்தி விட்டான். இப்படி இவன் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், பூலோகம் வந்த நாரதர் நேரே கம்ஸனிடம் சென்று க்ருஷ்ணன் பிறந்தது, வஸுதேவர் குழந்தைகளை ஒரே இரவில் இடம் மாற்றியது என இது வரை அவனுக்குத் தெளிவாயிராத அனைத்து ரஹஸ்யங்களையும் அவனிடம் கூறி விட்டார். இந்த விஷயங்களைக் கேட்டதும் கம்ஸன் வஸுதேவரிடமும், யாதவர்களிடமும் கடும் கோபம் கொண்டான்.

இளம் வயதிலேயே இவ்வளவு பேரை வதைக்கும் இந்த பலராம, க்ருஷ்ணர்கள் இன்னும் யுவர்கள் ஆனால் என்ன செய்வார்களோ என்ற பயத்தில், இப்போதே அவர்களைக் கொன்று விட வேண்டும் எனத் தீர்மானித்தான். "வ்ருந்தாவனத்திலேயே இருக்கும் கேசி என்பவனைக் கொண்டு மீண்டும் இவர்களைக் கொல்ல முயற்சி செய்வோம். அவன் அவர்களை நிச்சயம் கொன்று விடுவான். அவனிடம் தப்பி விட்டால், இங்கே ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு ச்வபல்கனின் புதல்வரும், யதுக்களில் மதிப்பிற்குரியவருமான அக்ரூரர் மூலம் ராம, க்ருஷ்ணர்களை அழைப்போம். அதற்கு வரும் வஸுதேவனின் மகன்களான, அந்த இடைச்சிறுவர்களை நம் யானை குவலயாபீடம் கொன்று விடும், அதனிடமும் அவர்கள் தப்பி வந்தால், நம்முடைய ப்ரதான மல்யுத்தர்களான சாணூரன், முஷ்டிகன் இவ்விருவர்களைக் கொண்டு அவர்களைப் போட்டியில் கொன்று விடலாம்" என்று முடிவு செய்தான்.

உடனே அக்ரூரரையும் அழைத்து "அக்ரூரரே! நீர் எனக்கு நெருங்கிய நண்பர் அல்லவா. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் கட்டளையை நிறைவேற்றுங்கள். தேரில் ஏறி, நந்தகோகுலம் சென்று பலராமன், க்ருஷ்ணன் இருவரையும் இங்கு அழைத்து வாருங்கள். விஷ்ணுவின் அம்சங்களான அவர்கள் என்னைக் கொல்வதற்காகவே அவதரித்துள்ளார்களாம். என் வீரர்களையும் அனுதினமும் கொன்று வருகிறார்கள். வரும் சதுர்தசியில் இங்கு ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்கு நீங்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு வரும் அந்த வஸுதேவன் புத்ரர்களை என் யானை குவலயாபீடமே கொன்று விடும். மீறினால் இதே தனுர்யாகத்தில் ஒரு பகுதியாக பொது மக்கள் முன்னிலையில் ஒரு மல்யுத்தம் நடக்கும். அதில் என் வீரர்களான சாணூரன், முஷ்டிகன் இருவரும் அவர்களைத் திறமையாக நிச்சயம் கொல்வார்கள்.

அவ்விருவரும் ஒழிந்த பின் என்னைக் கொல்ல நினைப்பவர்களான வஸுதேவன், அந்த இடையன் நந்தகோபன், என் முட்டாள் தந்தை உக்ரஸேனன் இவர்களை நானே கொன்று விட்டு இவர்களின் தனத்தையும், பசுக்களையும் மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். உம்மைத் தவிர மற்ற யாதவர்களனைவரும் எனக்குப் பகைவர்களே. கொஞ்சம், கொஞ்சமாக அவர்களையும் வேரில்லாமல் செய்து விட்டு, உம்முடன் சேர்ந்து நானே இந்த ராஜ்யத்தை எந்தத் தடையுமின்றி ஆளுவேன். எனவே நீங்கள் இப்போதே நந்தன் கோகுலத்திற்கு விரைவாகச் செல்லுங்கள். நான் உங்களிடம் சொன்ன எல்லா செய்திகளையும் அங்கே கூறி காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள். நடக்க இருக்கும் தனுர் யாக மஹோத்ஸவத்தை மட்டும் எடுத்துக் கூறி, அதற்காக அவர்கள் எல்லோரையும் தேவையான தயிர், பால் இவைகளை ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு கூறி விட்டு, ராம, க்ருஷ்ணர்களை மட்டும் உங்களுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுங்கள்" என்று அன்பாக உத்தரவிட்டான் கம்ஸன். இதைக் கேட்டதும் அக்ரூரரும் மகிழ்ச்சியோடு "அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டுத் தன் அழகிய தேரிலேறி உடனே க்ருஷ்ணனைத் தர்ஸிப்பதற்காக மதுரையை விட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment