04_24. இந்த ராஜ வம்சங்கள் மிகவும் பரிசுத்தமானவை. இந்த வம்சங்களை அறிந்தாலே மிகுந்த புண்யமுண்டாகும். இதனாலேயே இது பற்றிக் கூறியுள்ளேன். ப்ருஹத்ரத வம்சத்தில் கடைசியாக வரும் ரிபுஞ்ஜயனின் மந்த்ரி முனிகன் என்பவன். இவனுக்கு ப்ரத்யோதன் என்ற ஒருவன் பிறக்கப் போகிறான். இந்த மந்த்ரி அரசனைக் கொன்று தன் மகனை அரசனாக்குவான். அந்த வம்சம் ப்ரத்யோதன், பாலகன், விசாகயூபன், ஜனகன், நந்திவர்த்தனன், நந்தி என ஐந்து பேர்களுடன் ப்ரத்யோதர் என்ற பெயரில் எண்ணூற்று முப்பத்தெட்டு வருஷங்கள் ராஜ்யத்தை ஆளும். பின் சிசுநாபன், காகவர்ணன், க்ஷேமதர்மா, க்ஷதௌஜஸ், விதிஸாரன், அஜாதசத்ரு, அர்ப்பகன், உதயனன், நந்திவர்த்தனன், மஹாநந்தீ என்ற சைசுநாபர்கள் பத்து பேர்கள் முன்னூற்று அறுபத்திரண்டு வருஷங்கள் அரசாள்வர்.
இந்த மஹாநந்தீ என்பவன் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நந்தன் (மஹாபத்மன்) என்ற ஒரு பிள்ளையைப் பெற்றான். பேராசையும், உடல் பலமும், படை பலமும் வாய்ந்த அவன் இன்னொரு பரசுராமனைப் போல் க்ஷத்ரியரனைவரையும் அழித்து, தானே அரசாளத் தொடங்குவான். இவனுக்குப் பிறக்கும் ஸுமாலி முதலான எட்டுப் பிள்ளைகளுமான இந்த நந்தர்கள் நூறு வருஷ காலம் நந்தனுக்குப் பின் ஒரே குடையின் கீழ் அரசாள்வார்கள். க்ஷத்ரியர்கள் அரசாள மாட்டார்கள். நான்காம் வர்ணத்தவரான இவர்களே அரசாள்வர். இவர்களை கௌடில்யன் என்ற ப்ராஹ்மணன் அழிக்கப் போகிறான். நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த முரை என்பவளுக்கும், நந்தனுக்கும் பிறந்த சந்த்ரகுப்தனை அந்த கௌடில்யன் பட்டத்துக்குரியவனாக்கப்போகிறான்.
இந்த சந்த்ரகுப்தன் முதல் சில காலம் மௌர்யர்கள் அரசாள்வர். சந்த்ரகுப்தன், பிந்துஸாரன், அசோகவர்த்தனன், ஸுயசஸ், தசரதன், ஸம்யுதன், சாலிசூகன், ஸோமசர்மா, சததன்வா, ப்ருஹத்ரதன் என்ற இந்த பத்து மௌர்யர்கள் நூற்று முப்பத்தேழு வர்ஷங்கள் இந்த பூமியை அரசாள்வர். இவர்களுக்குப் பின் சுங்கன் எனும் பத்து பேர் அரசாள்வர். கடைசி மௌர்யனான ப்ருஹத்ரதனை அவன் ஸேனாதிபதி புஷ்யமித்ரனே கொன்று விட்டுத் தானே அரசாளத் தொடங்கி விடுவான். இவனே சுங்கர்களில் முதல்வன். இவனுக்குப் பின் அக்னிமித்ரன், ஸுஜ்யேஷ்டன், வஸுமித்ரன், உதங்கன், புளிந்தகன், கோஷவஸு, வஜ்ரமித்ரன், பாகவதன், தேவபூதி என்ற சுங்கர்கள் நூற்றுப் பனிரெண்டு ஆண்டுகள் அரசாள்வர். இவர்களுக்குப் பின் ராஜ்யம் கண்வர்களின் கைக்கு மாறப்போகிறது.
கடைசி சுங்க ராஜனான தேவபூதியை வஸுதேவன் என்ற கண்வன் கொன்று அவனும், அவனுக்குப் பின் பூமித்ரன், நாராயணன், ஸுசர்மா என்ற கண்வர்களும் நாற்பத்தைந்து வருஷங்கள் அரசாள்வர். இந்த ஸுசர்மாவை ஆந்த்ர ஜாதியைச் சேர்ந்த அவன் வேலைக்காரன் பலிபுச்சகன் கொன்று அதன் பின் அவனும், அவன் ஸஹோதரன் க்ருஷ்ணனும், அவன் மகன் சாதகர்ணி, அவன் மகன் பூர்ணோத்ஸங்கன், அவன் மகன் இரண்டாம் சாதகர்ணி, அவன் மகன் லம்போதரன், அவன் மகன் இவீலகன், அவன் மகன் மேகஸ்வாதி, அவன் மகன் பத்மன், அவன் மகன் அரிஷ்டகர்மன், அவன் மகன் ஹாலன், அவன் மகன் தாலகன், அவன் மகன் ப்ரவீலஸேனன், அவன் மகன் ஸுந்தரன்(சாதகர்ணி), அவன் மகன் சகோர சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்வாதி, அவன் மகன் கோமதிபுத்ரன், அவன் மகன் புலிமன், அவன் மகன் சிவஸ்ரீ சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்கந்தன், அவன் மகன் யக்ஞஸ்ரீ, அவன் மகன் விஜயன், அவன் மகன் சந்த்ரஸ்ரீ, அவன் மகன் புலோமார்ச்சிஸ் என முப்பது ஆந்த்ரர்கள் நானூற்றைம்பது வருஷங்கள் அரசாள்வர்.
(இன்னும் கொஞ்சம் ராஜ்யங்களையும், அதை எவரெவர் ஆள்வார்கள் என்பதையும் கூறி இருக்கிறார்)
இனிமேல் நாடுகளை ம்லேச்சர்களும், வேளாளர்களுமே ஆள்வார்கள். இவர்களால் தன்னை அண்டியிருப்பவர்களுக்கு எந்த நன்மைகளையும் தர இயலாது. அற்பமானவர்கள். கோபம் மிகுந்தவர்கள். பொய்யிலும், அதர்மத்திலும் விருப்பமுள்ளவர்கள். பெண்கள், சிறுவர், பசுக்களை அழிப்பவர்களாக இருப்பார்கள். பிறர் சொத்துக்களை அபஹரிப்பார்கள். பலம் குன்றியும், ஆயுள் குறைந்தும், பேராசையுடனும் இருப்பார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களின் தைர்யத்தில் பலம் மிகுந்தும், அதர்மம் மிகுந்தும் மக்களை அழிப்பார்கள். இப்படி உலகிற்கு அழிவு உண்டாகும் நேரத்தில் பல விபரீதங்கள் தோன்றும். நற்குலப் பிறப்பை விடுத்துப் பொருளும், பணமுமே ஒருவனை உயர் குலத்தில் பிறந்தவனாகக் காட்டும்.
நல்லொழுக்கம் இல்லாமலிருந்தும், பலமே தர்மங்களை அனுஷ்டிக்கக் காரணமாகும். குலம், கோத்ரங்களை விடுத்துத் திருமணம் நடக்க ஆண், பெண்களின் மன ஒற்றுமையே போதுமானதாக இருக்கும். ஒரு பெண்ணைப் புணர அவள் தன் மனைவியாக இருக்க வேண்டும் என்ற காரணம் தேவையில்லாததாக ஆகிவிடும். உடலையே காரணமாகக் கொண்டு பெண்கள் கருதப்படுவர். உண்மை, தர்மங்களை விடுத்து, வழக்குகள் பொய்யால் வெற்றி அடையும். புண்ய பூமி, சுத்தமானது என்பனவைகளை விடுத்து உணவுப் பொருள் கிடைக்குமிடமும், நல்ல தண்ணீர் கிடைக்குமிடமுமே இருப்பிடமாகும். வேதாத்யயனத்தையும், ஆசாரத்தையும் விடுத்து பூணூல் அணிந்திருந்தாலே ப்ராஹ்மணன் எனப்படுவான்.
ப்ரஹ்மசர்யம் முதலான ஆச்ரமங்களிலும் அதற்குரிய தர்மங்களை அனுஷ்டிப்பதை விடுத்து, அவைகளுக்குரிய வேஷங்களைத் தரித்தலே முதன்மையாகும். தவறான வழியிலேயே வாழ்க்கை செல்லும். ந்யாயமாக வாழ வழியில்லாமல் போகும். சொந்தமாக பயிர் முதலிய சொத்துக்கள் இருந்தாலும், பலமில்லையானால் அவைகளால் வாழ இயலாது. சத்தமாக, உறுதியாகப் பேசுபவனே ஸபைகளில் பண்டிதனாகக் கருதப்படுவான். குணங்களைக் கொண்டு சாதுக்கள் அறியப்படமாட்டார்கள். பொருளில்லாமலிருப்பவன் தீயவனாக இருந்தாலும் சாது எனப்படுவான். ஸ்னானம் முதற்கொண்டு எதுவுமே வேத மந்த்ரங்களுடன் சடங்காகச் செய்யப்படாமல், அலங்காரத்திற்கென ஆகும். யாக, ஹோமங்களெதுவுமின்றி வெறும் தானமே தர்மமாகக் கருதப்படும்.
விவாஹத்திலும் வைதீகக் கர்மங்களுக்கு முக்யத்துவம் அழிந்து, ஒப்புதலே முக்யமாகிவிடும். யோக்யமானவனுக்குக் கிடைக்காமல், வேஷதாரிகளுக்கே தானங்களும் கிடைக்கும். தூரத்திலிருந்து கொண்டு வந்தால் அது சுத்தமில்லாததாயினும் புண்ய தீர்த்தம் என்று கருதப்படும். அரசனாவதற்கெனத் தகுதிகள் எதுவும் தேவையில்லை. எந்த ஜாதியைச் சேர்ந்தவனானாலும் பலம் இருந்தால் அவனே அரசன். இவன் ஆட்சியில் வஸிக்க விரும்பாத மக்கள் மலைகளில் எந்த வசதியும், உணவும், உடையும் இன்றி வாழ்ந்து கஷ்டப்படுவார்கள். கலியின் முடிவில் வாழ்நாள் ஒருவனுக்கு இருபத்து மூன்று வருஷங்களுக்கு மேல் இருக்காது.
இப்படி வேத, ஸ்ம்ருதிகளில் சொல்லி இருக்கும் எல்லா தர்மங்களும் அழிந்து, மக்களும் அழிந்திருக்கும் போது சம்பலம் என்ற க்ராமத்தில் விஷ்ணுயசஸ் என்ற ஒரு ப்ராஹ்மணனுக்கு கல்கி பகவான் அவதரிப்பார். அஷ்டமா சித்திகளுடன் விளங்குவார். தீயவர்கள், கடையர்கள் என அனைவரையும் ஒழித்து, மீண்டும் எஞ்சியுள்ளோரிடம் தர்மத்தை நிலை நாட்டுவார். தூங்கி எழுந்திருக்கும் போது எப்படி புத்தி தெளிவாக இருக்குமோ, அப்படி இவர்களும் கல்கி அவதாரத்தால் புத்தி தெளிவார்கள். இவர்களின் புத்ரர்கள் க்ருதயுக தர்மத்தை அனுஸரிப்பார்கள். சந்த்ரன், ஸூர்யன், ப்ருஹஸ்பதி இம்மூன்றும் புஷ்ய நக்ஷத்ரத்தில் ஒன்றாக ப்ரவேஸிக்கும் காலத்தில் க்ருத யுகம் பிறக்கும். மைத்ரேயா! உனக்கு இறந்த, இருக்கும், இன்னும் வரப் போகும் அரச வம்சங்களைக் கூறினேன். பரீக்ஷித் பிறப்பிலிருந்து நந்தன் பட்டாபிஷேகம் வரையான காலம் ஆயிரத்து ஐனூறு ஆகும்.
பெட்டி வண்டியின் உருவில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலம் ஆகாயத்தில் வடக்கே உள்ளது. இதில் ஏர்க்கால் போலிருக்கும் மூன்று நக்ஷத்ரங்களில் கிழக்கு நுனியில் மரீசியும், அவருக்கு மேற்கில் கொஞ்சம் கீழே வஸிஷ்டரும், அவருக்கருகில் தென் கிழக்கே அவர் மனைவி அருந்ததியும், வஸிஷ்டருக்கு மேலே அங்கிரஸ்ஸும் இருக்கிறார்கள். இந்த ஏர்க்காலுக்கு சதுரமாக அங்கிரஸ்ஸின் வழியிலேயே ஈசான்யத்தில் அத்ரியும், அவருக்கு தெற்கே புலஸ்த்யரும், அவருக்கு மேற்கே புலஹரும், அவருக்கு வடக்கே க்ரதுவும் இருக்கிறார்கள். நக்ஷத்ரங்களுடன் இந்த ஸப்த ரிஷிகள் மானுஷ வருஷத்தில் நூறுவருஷம் இருப்பார்கள். பரீக்ஷித்தின் காலத்தில் இவர்கள் 'மக' நக்ஷத்ரத்தில் இருந்தார்கள். அப்போது தான் ஆயிரத்திருநூறு தேவ வர்ஷங்கள் அடங்கிய கலி தொடங்கியது.
க்ருஷ்ணன் பூவுலகை விட்டுச் செல்லும் வரை கலி காத்திருந்தது. அது ஆரம்பமானதுமே அஞ்சிய யுதிஷ்ட்ர மஹாராஜர் பரீக்ஷித்திடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்க ஆரோஹனம் செய்தார். ஸப்தரிஷிகள் பூராட நக்ஷத்ரத்திற்குச் செல்லும் காலம் நந்தர்கள் காலம் ஆரம்பமாகும். அப்போது கலி நன்கு வளரும். வரப்போகும் க்ருத யுகத்தில் புரு வம்சத்தைச் சேர்ந்த தேவாபியும், இக்ஷ்வாஹு வம்சத்தைச் சேர்ந்த மருவும் கலாப க்ராமத்திலிருந்து கொண்டு க்ஷத்ரிய வம்சங்களை மீண்டும் பரவச் செய்வர். இப்படிப் பல அரசர்களைக் கண்டு "செல்வம் நிலையானதன்று என்று அறிந்திருந்தும், அரசர்கள் இப்படி மேலும், மேலும் ராஜ்யங்களைப் கைப்பற்றப் புறப்படுகின்றார்களே" என்று பூதேவி பூக்களாகிய தன் பற்களைக் காட்டிச் சிரிக்கிறாள்.
"அரசர்கள் அனைவருமே புத்திசாலிகள் தான். ஆயினும் அக்ஞானமடைந்தனர். நீர்க்குமிழி போன்ற இவர்கள் தங்களை அழிவில்லாதவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்களே. என்ன ஒரு அறியாமை. தன்னை வென்றவர்களே அரசர்கள். தன்னை வென்றதற்குப் பலனாக மோக்ஷத்தைத் தேடாமல் மந்த்ரிகளையும், வேலைக்காரர்களையும், மக்களையும், பகைவர்களையும் வென்று பூமண்டலம் முழுதுமே தனதாக ஆக்கிக் கொள்ள விரும்புமிவர்கள் தாங்கள் அழியப்போவதை உணர்வதேயில்லை. தன்னையே வெல்லும் அரிய செயலைச் செய்த இவர்கள் இப்படி அற்பமான வஸ்துக்களைப் பலனாக நினைக்கிறார்களே. ஆத்மஜயத்திற்கு இதுவா பலன்.
தந்தையும் ஆள்கிறான், மகனும் ஆள்கிறான். ஆனால் போகும் போது எவரும் என்னை எடுத்துச் செல்லாமல் இங்கேயே விட்டுச் செல்கின்றனர். மேலும் அவர்கள் வம்சத்தாரும் மீண்டும் என்னைக் கைப்பற்றவே நினைக்கின்றனர். ஆளும் அரசர்கள் ஒவ்வொருவரும் பல பேர் கை மாறும் என்னை வைத்துக் கொண்டு தூதுவர்களை அடுத்த அரசர்களிடம் அனுப்பி, "இது என் இடம், நீ வெளியேறு" என்று வேறு கூறுகின்றனர். இது மிகவும் வேடிக்கையானது" என்று பூதேவி கூறியுள்ள இவைகள் ப்ருத்வீ கீதங்கள் எனப்படுகின்றன. இதைக் கேட்பவனுக்கு ஸூர்யன் முன் பனி அழிவது போல் எனது என்ற எண்ணம் (மமகாரம்) ஒழியும். இது நிச்சயம்.
மைத்ரேயா! இப்படியாக உனக்கு மனுவின் வம்சத்தைப் பற்றிக் கூறினேன். இதில் விஷ்ணுவின் அம்சமாகப் பல அரசர்கள் தோன்றியுள்ளனர். இதை பக்தியோடு கேட்பவர்களுக்கு பாபங்கள் அனைத்தும் அழிந்து மனம் பரிசுத்தமடையும். சந்த்ர, ஸூர்ய வம்சத்து இந்த அரசர்களின் வரலாற்றைக் கேட்பவர்களுக்கு ஸகல ஸம்பத்துக்களும் உண்டாகும். இந்த்ரியங்கள் பொலிவு பெற்று ஸத்விஷயங்களில் செல்லும். பராக்ரமும், வீர்யமும், செல்வங்களும் குவிந்திருக்க வாழ்ந்திருந்த இக்ஷ்வாஹு, ஜஹ்னு, மாந்தாதா, ஸகரன், ரகு, யயாதி, ப்ருது, கார்த்த வீர்யார்ஜுனன், ராவணன் என்று ஒரு அரசர்களும் இன்று இல்லை. ஆயிரக்கணக்கான வருஷங்கள் தவம் செய்து பலன் பெற்றவர்களும் அழிந்து விட்டனர். காலத்திற்குட்பட்டு அழிந்தனர் அனைவரும். அவர்கள் கதை மட்டுமே எஞ்சியுள்ளது. அவர்கள் வாழ்ந்தார்களா என்பதே இன்றைய நிலையில் சந்தேஹமாக உள்ளது. எனவே வீடு, நிலம், உற்றார், சுற்றார் என ஒன்றிலும் பற்று வேண்டாம். எதுவும் சாச்வதமன்று. தன் ஆத்மாவிடமும் பற்றுதல் வேண்டாம்.
Tuesday, February 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment