Monday, February 1, 2010

விஷ்ணு புராணம் - 65

04_09. ஆயுஸ்ஸின் மற்றொரு புதல்வனான ரஜி என்பவனுக்கு ஐநூறு பிள்ளைகள். அனைவருமே ஒப்பற்ற பராக்ரமங்கள் உடையவர்கள். இந்த ஸமயத்தில் தேவாஸுர யுத்தம் நடந்தது. இவர்களிருவருமே அப்போது ப்ரஹ்மாவிடம் போய் இந்தப் போரில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று வேண்டினர். ப்ரஹ்மா ரஜி எவர் பக்கம் இருந்து யுத்தம் செய்கிறானோ அவர்களே வெற்றி பெறுவர் என்று கூறிவிட்டார். உடனே அஸுரர்கள் முதலில் சென்று ரஜியைத் தங்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யுமாறுக் கேட்டனர். அதற்கு ரஜி போரில் வென்றதும் தன்னை அவர்களுக்கு இந்தரனாகக் (தலைவனாக) கொண்டால் இதற்குச் சம்மதம் என்று கூறினான்.

"முதலில் ஒன்றைக் கூறிப் பின் அதை மாற்றிக் கூறும் பழக்கம் எங்களுக்கில்லை. இப்போது சொல்லி விடுகிறோம். ஏற்கனவே ப்ரஹ்லாதன் எங்களுக்கு இந்த்ரன். அவரே இந்த்ரனாய்த் தொடர வேண்டுமென்றே இந்த யுத்தமும். எனவே வெற்றிக்காகப் பொய் சொல்ல நாங்கள் விரும்பவில்லை" என அஸுரர்கள் ரஜியின் நிபந்தனைக்கு மறுப்பு கூறிச் சென்று விட்டனர். இதன்பின் தேவர்கள் இந்த நிபந்தனையை ஏற்று ரஜியைக் கொண்டு அஸுரர்களை வென்றனர். ஆனால் அதன் பின் இந்த்ரன் ரஜியின் கால்களில் விழுந்து "நீங்களே எங்களை பயத்திலிருந்து காத்து உணவளித்தீர்கள். எனவே நீங்கள் எனக்குத் தகப்பன் முறை. புத்ரன் இந்த்ரனாக இருப்பது தகப்பனுக்குப் பெருமை தானே. ஆகையால் நானே இந்த்ரனாகத் தொடர அருள வேண்டும்" என்று வேண்டினான்.

ரஜியும் சிரித்துக் கொண்டு "பகைவர்களே பாதம் பணிந்தால் அருள வேண்டும். உனக்கென்றால் சொல்லவும் வேண்டுமா. நீயே இந்த்ரனாக இரு" என்று கூறி தன் நகரம் திரும்பி விட்டான். ரஜிக்குப் பின் அவன் புத்ரர்கள் அரசாண்டு கொண்டிருந்த போது நாரதர் அவர்களிடம் வந்தார். இந்த்ரனும் உங்கள் தகப்பனுக்குப் புத்ரன் முறையே. எனவே நீங்கள் அவனுக்குப் பங்காளிகள். எனவே உங்களுக்கும் இந்த்ர பதவியில் உரிமையுண்டு என்று போதித்தார். இவர்களும் இதைக் கேட்டுக் கொண்டு இந்த்ரனிடம் சென்று உரிமை கோரினர். மறுத்த இந்த்ரனையும், தேவர்களையும் ஒடுக்கித் தாங்களே இந்த்ர லோகத்தில் அதிகாரம் செலுத்தலாயினர்.

சில நாட்கள் இங்குமங்கும் அலைந்த இந்த்ரன் குரு ப்ருஹஸ்பதியிடம் சென்று தன் கவலையைக் கூறி யாகங்களில் இலந்தைப் பழ அளவிலாவது புரோடாசம் (யாக அடை)கிடைக்க அருள் வேண்டினான். ப்ருஹஸ்பதி முன்னமே என்னிடம் வந்திருந்தால் இந்த நிலையே உனக்கு வந்திருக்காதல்லவா. சரி, போனது போகட்டும். விரைவிலேயே உனக்கு உன பதவியை மீட்டுத்தருகிறேன் என்று கூறி இந்த்ர தேஜஸ் அதிகரிக்கவும், ரஜியின் புத்ரர்களுக்கு அழிவையும் வேண்டி நாள் தோறும் அபிசாரம் செய்ய ஆரம்பித்தார். இதனால் புத்தி பேதலித்த ரஜி புத்ரர்கள் வர்ணாச்ரமங்களை விட்டு, வைதீக மார்கத்துக்கு எதிராக செயல் படத்தொடங்கினர். இவர்கள் இப்படி ஆனதால் இவர்களை இந்த்ரன் எளிதில் வென்று ப்ருஹஸ்பதியின் ஹோமத்தால் பெற்ற தேஜஸ்ஸுடன் மீண்டும் ஸ்வர்க பதவியை அடைந்தான். இந்த இந்த்ரன் தன் பதவியை இழந்து, மீண்டும் அதை அடைந்த கதையைக் கேட்பவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகாமலும், தர்மாத்மாக்களாகவும் இருப்பார்கள்.

ஆயுவின் மற்றொரு புத்ரனான ரம்பனுக்கு சந்ததியில்லை. க்ஷத்ரவ்ருத்தனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு ஸஞ்ஜயனும், அவனுக்கு ஜயனும், அவனுக்கு விஜயனும், அவனுக்கு க்ருதனும், அவனுக்கு ஹர்யதனனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு அதீனனும், அவனுக்கு ஜயத்ஸேனனும், அவனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு க்ஷத்ரதர்மனும் பிறந்தனர்.

No comments:

Post a Comment